திமுக- காங்கிரஸ் அணியை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி: தா. பாண்டியன்
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
மதுரை, ஜூலை 30: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது என்று அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கட்டம் ஜூலை 31 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை சிவகங்கையில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அகில இந்தியச் செயலர் ஏ.பி.பரதன், முன்னாள் எம்.பி. சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.இக் கூட்டத்தில் இந்திய அரசியல், தமிழக அரசியல் நிலவரங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.தமிழகத்தில் திமுக அணியிலிருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்தாலும், சில தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என நினைக்கின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருக்கும் வரை திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் இருக்காது.எனவே வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கூட்டு வைத்துக்கொள்ளத் தயாராக உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணியைத் தவிர்த்த புதிய அணி உருவாக வேண்டும்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை.பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு மானியம், சர்வதேசச் சந்தையில் விலை உயர்வு என மத்திய அரசு காரணம் கூறுகிறது. ஆனால், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 3 மாதங்களில் ரூ.3990 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகளைக் குறைத்தாலே விலையைக் குறைக்க வழியேற்படும்.ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை விற்பனையில் அரசுக்கு ரூ.1,600 கோடி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் 3ஜி அலைவரிசையை ஏலம் விட்டதில் அரசுக்கு ரூ.1,30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்பனையில் ஊழல் நடைபெறவில்லை எனில், ஏற்கெனவே நடத்தப்பட்ட விற்பனையை ரத்துச் செய்துவிட்டு அதையும் ஏலத்தில் விட்டால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்குமே. அதைச் செய்ய மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?மத்திய அரசு வாராக்கடன் அளவு ரூ.2.5 லட்சம் கோடி என அறிவித்துள்ளது. இதில் பாதித் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமும், வெளிநாட்டு வங்கிகளில் ரகசியக் கணக்குகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதன் மூலமும் மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இதில் ஏன் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது?காஷ்மீர், நாகாலாந்து, இலங்கைத் தமிழர் பிரச்னைகளால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வுகாண மத்திய அரசு முன்வர வேண்டும். நக்ஸலைட்டுகளை ஓடுக்கவே போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.நக்ஸலைட் பிரச்னை உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல என்றார் தா.பாண்டியன்.