தெரிந்து கொள்ளுங்கள்: ஆசியாவின் சிறந்த கோல்கீப்பர்
First Published : 11 Mar 2010 04:28:52 AM IST
Last Updated :
ஆசியாவின் சிறந்த கோல்கீப்பர் என்ற பெருமைக்குரியவர் பீட்டர் தங்கராஜ்.1936-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த பீட்டர் தங்கராஜ், நாட்டில் உள்ள அனைத்து முன்னணி கால்பந்து கிளப்புகளில் விளையாடியுள்ளார். சிறந்த கோல்கீப்பரான இவரை தங்கள் அணியில் விளையாட வைக்க பல முன்னணி கால்பந்து கிளப்புகள் போட்டி போட்டன.மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர், மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகமதன் ஸ்போர்ட்டிங் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.முதன்முதலில் செகந்திராபாதில் உள்ள மார்னிங் ஸ்டார் மற்றும் பிரெண்ட்ஸ் யூனியன் கிளப்புக்காக விளையாடினார்.1953-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், மெட்ராஸ் ரெஜிமெண்டல் கால்பந்து அணியில் விளையாட தேர்வானார். முதலில் நடுக்கள ஆட்டக்காரராக இருந்த அவர், அதை கைவிட்டுவிட்டு கோல்கீப்பராக மாறினார். அதில் முழு ஈடுபாட்டையும் காட்டத் தொடங்கி, சிறந்த கோல்கீப்பராக பெயர்பெற்றார்.இவரது திறமையான ஆட்டத்தால், மெட்ராஸ் ரெஜிமெண்டல் அணி இரு முறை துராந்து கோப்பையைத் தட்டிச் சென்றது. பின்னர் அணியின் கேப்டனாக தேர்வானார். 1960-ல் இவரது தலைமையிலான அணி முதல்முறையாக சந்தோஷ் டிராபியை கைப்பற்றியது.மெட்ராஸ் ரெஜிமெண்டல் அணியிலிருந்து விலகியபிறகு முகமதன் ஸ்போர்ட்டிங் அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார். அதன்பிறகு மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிக்காகவும் விளையாடியுள்ளார். சில காலம் ரயில்வே அணிக்காகவும் விளையாடியுள்ளார்.பின்னர் டாக்கா சென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். டோக்கியோ, ஜகார்த்தா மற்றும் பாங்காக் ஆசியப் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார்.1956-ல் மெல்போர்ன் ஒலிம்பிக் மற்றும் 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றார்.இஸ்ரேல் மற்றும் பர்மாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் இரண்டு முறை "ஏசியன் ஆல் ஸ்டார்' அணியில் இடம்பெற்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்."ஏசியன் ஆல் ஸ்டார்' அணியின் சிறந்த கோல்கீப்பராகவும், ஆசியாவின் சிறந்த கோல்கீப்பராகவும் பட்டம் பெற்றார். 1967-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜுனா விருதை பெற்றார்.