தெரிந்துகொள்ளுங்கள்: ஆசிய அணிக்கு தலைமை வகித்த இந்தியர்
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
ஆசிய கால்பந்து அணிக்கு தலைமை வகித்த ஒரே இந்திய வீரர் ஜர்னைல் சிங்.இந்திய கால்பந்தின் பொற்காலமாகக் கருதப்படும் 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் அவர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டம் பாணம் பகுதியில் 1936-ம் ஆண்டு ஜர்னைல் சிங் தில்லான் பிறந்தார். 16 வயதில் கால்சா கல்லூரி அணிக்காக அவர் விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த அணியில் இடம் பிடித்திருந்த ஜர்னைல் சிங், பின்னர் கால்சா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் சேர்ந்தார். அங்கு திறமையை வளர்த்துக் கொண்ட அவர், ராஜஸ்தான் கிளப் மற்றும் கோல்கத்தா அணிகளிலும் இடம் பெற்றார்.1958-ல் இந்தியாவில் புகழ்பெற்ற அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியில் அவர் இடம் பிடித்தார். 1968-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜர்னைல் சிங் அந்த அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.ஜர்னைல் சிங், இந்திய விளையாட்டு வீரர்கள் போராட்ட குணத்துக்கு உதாரணமாகக் கூறப்படுபவர். 1962-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கொரிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிக்கான கோலை அடித்து அவர் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். அரையிறுதிப் போட்டியின் போது ஜர்னைல் சிங்குக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. 6 தையல்கள் போடப்பட்டிருந்த நிலையிலும் அவர் களம் இறங்கி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நிலையிலும் மன உறுதியை இழந்துவிடாத இயல்புடையவர் ஜர்னைல் சிங்.1964-ம் ஆண்டு ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதிலும் ஜர்னைல் சிங்கின் சிறப்பான பங்களிப்பு இருந்தது. அந்த ஆண்டியிலேயே மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கெüரவித்தது.1965 முதல் 1967-ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் அவர் பொறுப்பு வகித்தார். 1966-ல் ஆசியாவின் தலைசிறந்த வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆசிய கால்பந்து அணியின் கேப்டனாக ஜர்னைல் சிங் அறிவிக்கப்பட்டார். இது அவரது திறமைக்கு கிடைந்த மிகப்பெரிய அங்கீகாரம். அவருக்குப் பின் வேறு எந்த இந்திய வீரரும் இந்தப் பெருமையைப் பெறவில்லை.1969-ல் மோகன் பகான் அணியில் இருந்து ஜர்னைல் சிங் வெளியேறி பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும், அணி வீரர்களில் ஒருவராகவும் களம் இறங்கினார். அவரது வழிகாட்டுதலில் பஞ்சாப் அணி 1970-ம் ஆண்டு முதல் முதலாக சந்தோஷ் கோப்பையை வென்றது. 1974-ல் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த பெங்கால் அணியை பஞ்சாப் அணி 6-0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றது.1985 முதல் 1990 வரை பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை துணை இயக்குநராகவும் அவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1990 முதல் 1994-ம் ஆண்டு வரை விளையாட்டுத் துறை இயக்குநராகவும் ஜர்னைல் சிங் பணியாற்றினார். கனடாவின் வான்கூவர் நகரில் 2000 அக்டோபர் 13-ல் அவர் காலமானார்.