தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி
First Published : 09 Feb 2010 08:23:19 AM IST
Last Updated :
09 Feb 2010 09:56:50 AM IST
அரியலூர், பிப். 8: அரியலூர் மாவட்டம், செந்துறையில் பெரியார் அறிவு மையம், ஆண்டிமடம் எஸ்.எஸ். அறக்கட்டளை இணைந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வை வெல்வோம் வழிக்காட்டி நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இந்த நிகழ்ச்சியில், செந்துறை ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் பேசியது: தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களில் பள்ளிக்கு ஒருவர் வீதம் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மாணவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு, அந்தந்த அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கும், ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள, விளையாட்டில் மாவட்ட அளவில் பரிசுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் தொடங்கப்பட்டுள்ள மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றார் அவர். ஆண்டிமடம் எஸ்.எஸ். அறக்கட்டளையின் தலைவரும், ஆண்டிமடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் ஷெரீன், மாணவர் உளவியல் நிபுணர் கே. சிதம்பரம், உடையார்பாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் டி. ஜெயராமன், தொலைத் தொடர்புத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மு. ஞானமூர்த்தி, பூ. செல்வராஜ், திமுக தலைமை கழக பேச்சாளர் ச.அ. பெருநற்கிள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.