நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைவதால் கிராம மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
First Published : 10 Mar 2010 10:46:37 AM IST
Last Updated :
மதுரை, மார்ச் 9: தேனி அருகே மேற்குமலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைவதால் கிராம மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என கணித அறிவியல் துறை பேராசிரியர் ஜி.ராஜசேகரன் தெரிவித்தார்.அவர் மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் கிராமத்தின் மலையடிவாரப் பகுதியில் அடிப்படை ஆராய்ச்சிதான் நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சி ரூ.900 கோடியில் நடைபெற உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.குறிப்பிட்ட இடத்தின் மலையடியில் சுரங்கப்பாதை அமைத்து அதன் உள்ளே 50 ஆயிரம் டன் இரும்பைக் கொண்டு நியூட்ரினோ எனப்படும் கதிர்வீச்சைக் கண்டுபிடிக்கும் கருவி அமைக்கப்பட உள்ளன. இது எந்த வகையிலும் அணுசக்தி போன்று ஆபத்தானது அல்ல. இங்கு அமைவதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஆராய்ச்சி மையமாக அமையும். இது முழுக்க கல்வி ஆராய்ச்சிக்கான திட்டம்தான். இதனால் பல்வேறு நாட்டினர் ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வரக்கூடும். இங்குள்ள பாறைகளின் கடினத்தன்மையும் மற்றும் சுற்றுப்புறச் சூழலும் ஆராய்ச்சி மையம் அமைவதற்கு, உகந்த இடமாக உள்ளபடியால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டன. அரசு புறம்போக்கு இடத்தில் 25 முதல் 30 ஏக்கர் நிலப்பரப்பில்தான் இத்திட்டம் அமைக்க வனத் துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும்போது அருகில் அமைந்துள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபுணர்களின் கண்காணிப்பில் நடைபெறும். கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை. தவறான பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்றார். மேலும் டாடா ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் பி.எஸ்.ஆச்சார்யா, அணுசக்தி மைய ஆராய்ச்சியாளர் விவேக்தாடர், பொதுமக்கள் விழிப்புணர்வுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டானியல் செல்லப்பா, இந்திய நியூட்ரினோ மைய ஆராய்ச்சியாளர் தீபக் டேனியல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.