பங்குச் சந்தையில் 50 புள்ளிகள் சரிவு
First Published : 10 Mar 2010 02:05:00 AM IST
Last Updated :
மும்பை, மார்ச் 9: பங்குச் சந்தையின் போக்கை கணிக்க முடியாது என்பது செவ்வாய்க்கிழமை நிரூபணமானது. திங்கள்கிழமை ஏற்றம்பெற்ற பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை சரிந்ததும் சரிவுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.செவ்வாய்க்கிழமை 50 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 17,052 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 22 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 5,101 புள்ளிகளானது.சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவு மும்பை பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தரகர்கள் தெரிவித்தனர்.ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை 1.49 சதவீதம் சரிந்து ரூ.990.20-க்கு விற்பனையானது.டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு விலை 3.24 சதவீதம் குறைந்து ரூ. 770.90-க்கு விற்பனையானது. ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த 5.3 சதவீத பங்குகளை (ரூ. 1,800 கோடி) விற்பனை செய்ததாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. தேசிய கனிம நிறுவனத்தின் (என்எம்டிசி) பங்குகள் புதன்கிழமை வெளியாகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை உலோக நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்துள்ளன. டாடா ஸ்டீல், லார்சன் அன்ட் டியூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி, மாருதி சுஸýகி, சன் பார்மசூடிக்கல்ஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனப் பங்குகள் சற்று அதிக விலைக்கு விற்பனையாயின.ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு விலை மிக மோசமான நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்தது. ஹின்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ ஹோண்டா ஆகிய நிறுவனப் பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.மொத்தம் 1,780 நிறுவனங்களின் பங்கு விலைகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,043 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின.