பங்குச்சந்தையில் எஸ்பிஐ நிதி திரட்ட அனுமதி: மக்களவையில் மசோதா தாக்கல்
First Published : 09 Mar 2010 04:25:26 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 8: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டிக் கொள்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.பொதுத்துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் அரசுக்கு 55 சதவீத பங்கு உள்ளது. இதில் 4 சதவீதத்தை பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்து நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டது.2010-ம் ஆண்டுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் திருத்த மசோதாவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அப்போது மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது இது தாக்கல் செய்யப்பட்டது.இதன்படி தற்போது அரசுக்குள்ள 55 சதவீத பங்குகளை 51 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள இந்த திருத்தம் வகை செய்கிறது. இவை பங்குச் சந்தை மூலம் முன்னுரிமை பங்குகளாக வெளியிடப்படும்.1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எஸ்பிஐ சட்டம் 1993-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அப்போது பங்குச் சந்தை மூலம் நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முன்னுரிமை பங்கு மற்றும் போனஸ் பங்குகள் வெளியிட அனுமதி அளிக்கப்படவில்லை.தற்போதைய திருத்த சட்டத்தின்படி பாரத ஸ்டேட் வங்கி பங்குச் சந்தையில் முன்னுரிமை பங்குகளை வெளியிட வழி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையான நிதி ஆதாரத்துக்காக முன்னுரிமைப் பங்குகள் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிதி திரட்டிக் கொள்ள முடியும். சந்தையின் சூழலுக்கேற்ப முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு ரூ. 5,000 கோடி நிதியை பங்குச் சந்தை மூலம் எஸ்பிஐ திரட்டிக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், வங்கியில் நான்கு நிர்வாக இயக்குநரை நியமிக்கலாம். அத்துடன் துணைத் தலைவர் பதவியை முற்றிலுமாக நீக்க முடியும். ரூ. 5,000 மதிப்பிலான வங்கிப் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் கூட இயக்குநர் பதவிக்கு போட்டியிடலாம்.இதற்கு முன் 2006-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது. அப்போது இது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து இந்த மசோதா அறிமுகம் செய்யப்படவில்லை.தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இம்மசோதா முன்னர் குறிப்பிட்ட அதேவழி முறைகளின்படியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் சில பரிந்துரைகள் கூடுதலாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.