Friday, September 03, 2010 1:41 PM IST
Click
தற்போதைய செய்திகள்
பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு:பழ. நெடுமாறன் கண்டனம்

First Published : 17 Apr 2010 02:54:01 PM IST

Last Updated : 17 Apr 2010 02:59:25 PM IST

சென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு 16-ஏப்ரல்-2010 இரவு 10.45 மணிக்கு  விமானத்தில் வந்தார்.
படுத்தப் படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக்கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர் ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வந்ததைத் தடுத்து திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.
இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியுவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.
அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.
விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கே குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியாக பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்துமீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.
இந்திய-தமிழக அரசுகளின் இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டிக்கும் வகையில் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் உட்பட அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்