பிரெஞ்சு ஆடை தயாரிப்பு நிறுவனம் சென்னையில் விற்பனையகம் திறப்பு
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
சென்னை, பிப்.8: ஆண்களுக்கான ஆயத்த ஆடை தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள "செலியோ' நிறுவனம் சென்னையில் பிரத்யேக விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது. பிரான்ஸில் 300 விற்பனையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் பியூச்சர் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதல் பேண்டலூன், லைஃப் ஸ்டைல் விற்பனையகங்களில் இந்நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது பிரத்யேக விற்பனையகங்களைத் தொடங்க முடிவு செய்து அதன்படி தில்லியில் நான்கும், மும்பையில் நான்கும், பெங்களூரில் ஒரு விற்பனையகமும் திறந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரஜத் லுத்ரா தெரிவித்தார். தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள அம்பா மாலில், 10-வது பிரத்யேக விற்பனையகம் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். புதிய விற்பனையகம் குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தற்போது இந்தியா முழுவதும் 52 விற்பனையகங்களில் செலியோ தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரத்யேக விற்பனையகங்கள் நடப்பு ஆண்டில் மேலும் 15 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ. 25 கோடி விரிவாக்க நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இது தவிர, கூடுதலாக ரூ. 15 கோடி செலவிட உள்ளதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக பெரு நகரங்களில் பிரத்யேக விற்பனையகம் தொடங்கிய பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகர்களில் இத்தகைய விற்பனையகம் தொடங்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.