முகமது யூசுப், யூனிஸ் கானுக்கு தடை
First Published : 11 Mar 2010 04:34:40 AM IST
Last Updated :
11 Mar 2010 11:17:04 AM IST
கராச்சி, மார்ச் 10: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் டெஸ்ட், ஒருதின ஆட்டம், டுவென்டி20 ஆட்டங்களில் தேசிய அணியில் விளையாடுவதற்கு அந் நாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.பேட்ஸ்மேன் ஷோயப் மாலிக், பந்துவீச்சாளர் ராணா நவேத் உல் ஹசன் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கம்ரான், உமர் அக்மல் சகோதரர்கள், அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகிப் அப்ரிதி ஆகியோர் தங்கள் திறமையை நிரூபிக்க 6 மாத அவகாசம் தரப்பட்டுள்ளதுடன், ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.விசாரணைக் கமிட்டி: அண்மையில் ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெஸ்ட் ஆட்டங்கள், ஒரு தின ஆட்டங்கள், டுவென்டி20 ஆட்டங்கள் என அனைத்திலுமே பாகிஸ்தான் படுதோல்வியைத் தழுவியது.÷இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆராய முன்னாள் விக்கெட் கீப்பர் வாசிம் பாரி தலைமையில் ஒரு குழுவை பாகிஸ்தான் வாரியம் நியமித்தது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள டுவென்டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வாரியத் தலைவர் இஜாஸ் பட் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அக் கூட்டத்தில் வாசிம் பாரி குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த தண்டனைகளை வாரியம் அறிவித்துள்ளது. முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோரது நடவடிக்கைகள் அணி வீரர்களின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்தத் தடையை குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல, தண்டனை பெற்ற மற்ற வீரர்கள் முழு ஈடுபாட்டுடன் விளையாடாததுடன், சக வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான வீரர்கள் மீது ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டுவென்டி20 உலகக் கோப்பை தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் முக்கிய வீரர்கள் மீதான நடவடிக்கை அப் போட்டியில் அணியின் வெற்றி வாய்ப்புகளை சிதறடிக்கக் கூடும் என கருதப்படுகிறது.÷வாழ்நாள் தடையல்ல - பாகிஸ்தான் வாரியம் விளக்கம்: முகமது யூசுப், யூனிஸ் கானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் மீதான தடையை வாழ்நாள் தடை என்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு விளக்கம் அளித்து வாரியம் தெரிவித்துள்ளதாவது: அவர்கள் இருவரும் டெஸ்ட், ஒரு நாள், டுவென்டி20 ஆட்டங்களில் விளையாட இப்போதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலத்துக்கு தடை என்பது அறிவிக்கப்படவில்லை. விளையாடுவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர் என கருதும்போது மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.