வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரிப்பு: ஆட்சியர்
First Published : 10 Mar 2010 11:34:47 AM IST
Last Updated :
ராமநாதபுரம், மார்ச் 9: வாகனங்களை அதிக வேகமாக ஓட்டுவதால்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:சாலைகளில் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலையின் இருபுறத்திலும் உள்ள மணலை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகளின் குறுக்கே வேகத் தடை அமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ராமநாதபுரம் நகரில் முக்கிய இடங்களில் லாரிகளை நிறுத்திக் கொள்வதையும் அரசு மருத்துவமனை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவதையும் முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் போது வாகனம் நிறுத்துமிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய அனுமதி அளிக்க வேண்டும். பரமக்குடி தரைப்பாலம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் குப்பைகளைக் கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய நகரங்களில் குறுகலான சாலைகள் அமைந்திருப்பதால் இந்தப் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க இயலாது. சிங்கம்புளியம்பட்டி, பேரையூர், வெள்ளையாபுரம் ஆகிய ஊர்களில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கே.பாலசுப்பிரமணியன்,எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர்கள் து.இளங்கோ (ராமநாதபுரம்), ஞானக்கண்ணன் (பரமக்குடி), வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.பாஸ்கரன், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ்பதக், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் யோகராஜன் மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விபத்து மீட்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.