11-வது முறையாக அரையிறுதிக்குத் தகுதி: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஜெர்மனி (5-2)
First Published : 10 Mar 2010 02:35:25 AM IST
Last Updated :
நியூஸிலாந்து வீரரிடமிருந்து பந்தை பறிக்க போராடுகிறார் ஜெர்மனி வீரர் மேக்ஸ்முல்லன் முல்லர்.
புது தில்லி, மார்ச் 9: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தை 5-2 என்ற கோல் கணக்கில் வென்று ஜெர்மனி அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்தது.இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் ஏ பிரிவில் ஜெர்மனி முதலிடம் பெற்றுள்ளது.இதுவரை நடைபெற்றுள்ள 12 உலகக் கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 11 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் மட்டும் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.நடப்பு போட்டியில் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்தது. எனினும் ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் ஆறுதலுக்காக வெற்றிபெறலாம் என்ற அந்த அணியின் கனவை ஜெர்மன் வீரர்கள் தவிடுபொடியாக்கினர்.போட்டி தொடங்கியது முதலே ஜெர்மனி வீரர்கள் வசமே பந்து இருந்தது. கோல் விழாமல் இருக்கவே நியூஸிலாந்து வீரர்கள் தங்கள் கவனத்தை செலுத்தினர். எனினும் ஜெர்மனி வீரர் மென்கே 15வது நிமிடத்தில் அடித்த "ஷாட்' கோலாக மாறியது. அதன் பிறகு 28வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை அந்த அணியின் வீரர் பக்ஸ் கோலாக மாற்றி அந்த அணிக்கு 2-0 என்று முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் மூலம் முதல் பாதியில் அந்த அந்த அணி முன்னிலைப் பெற்றது.இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணியின் விட்டி அடித்த பந்து கோல் கம்பத்துக்குள் நுழைந்து ஜெர்மனிக்கு 3வது கோலாக மாறியது.பின்னர் வெகுண்டெழுந்த நியூஸிலாந்து வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தில் பந்தை கொண்டுவந்தனர். தங்களுக்கு கிடைத்த முதல் பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் மெக்அலீஸ் கோலாக மாற்றி முதல் கோலை பெற்றுத் தந்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் அந்த அணியின் நிக்கோலஸ் வில்சன் மீண்டும் ஒரு கோல் அடித்து வித்தியாசத்தை சற்றுக் குறைத்தார். எனினும் ஜெர்மன் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அடுத்துத்து கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.இந்த போட்டியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்த நியூஸிலாந்து அணி 7 மற்றும் 8வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது.