Friday, September 03, 2010 1:46 PM IST
Click
கதிர்
அக்கரைச்சீமை: அப்பா சர்வாதிகாரி... மகன் ஜனநாயகவாதி!

First Published : 11 Jul 2010 12:00:00 AM IST


இந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் எழுதப்பட்டது. அன்று அந்த நாட்டின் பிரதமராக முதன்முதலாக ஒரு பெண்மணி பதவியேற்றார். பெயர்: ஜூலியா கில்லார்ட். வயது 48. முந்தைய பிரதமர் கெவின் ருட் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜூலியா அவரைப் பதவி இறக்கிவிட்டு அரியணையில் அமர்ந்திருக்கிறார். இது ஒரு விதமான அரசியல் புரட்சி!

ருட் தலைமையில் ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் அவருக்கு கட்சிக்குள்ளேயே ஆதரவு குறைந்தது. சமயம் பார்த்து வலது காலை எடுத்து வைத்துவிட்டார் ஜூலியா.

"நான் தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இல்லைதான். என்றாலும் விரைவில் மக்களிடம் சென்று தேர்தலில் அவர்களின் ஆதரவுடன் மீண்டும் பிரதமராவேன்' என்று சூளுரைத்திருக்கிறார். இவர் வேல்ஸில் பிறந்து, குழந்தையாக இருந்தபோதே ஆஸ்திரேலியாவில் குடும்பத்தோடு குடியேறியவர். இந்தத் திடீர் பிரதமர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆஸ்திரேலியாவே காத்திருக்கிறது.

ஜூலியா கில்லார்டையும் சேர்த்து இன்று எத்தனை நாடுகளில் ஒரு பெண்மணி அதிபராகவோ பிரதமராகவோ இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

இதே கேள்வியை பல வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கோல்டா மேயர், சிரிமாவோ பண்டாரநாயக, இந்திரா காந்தி என்று சில பெயர்கள் மட்டுமே பதிலாகக் கிடைத்திருக்கும். இன்று உலகில் 17 நாடுகளில் பெண்கள் அரியணையில் இருக்கிறார்கள். நம்புங்கள்.

பட்டியலைப் படிக்க ஆசைப்படுபவர்களுக்காக: அர்ஜென்டினா, பங்களாதேஷ், கோஸ்டாரிகா, குரோஷியா, ஃபின்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, இந்தியா, அயர்லாந்து, கிர்கிஸ்தான், லைபீரியா, லித்வானியா, பிலிப்பைன்ஸ், ஸ்லோவாகியா, ஸ்விட்சர்லாந்து, டிரினிடாட், ஆஸ்திரேலியா.

ரொம்ப சர்வீஸ் போட்டவர் அயர்லாந்தின் அதிபர் மேரி மெக் அலீஸ். இவர் 1997-ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருக்கிறார்.

இந்த ஆண்டு 2010-இல் மட்டும் இதுவரை ஆறு நாடுகளில் பெண்கள் அதிபர் அல்லது பிரதமர் பதவி ஏற்றிருக்கிறார்கள். வருஷம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன.

இன்னும் எத்தனை நாடுகளில் மதுரையோ!

லிபியா என்று சொன்னதுமே கூடவே கடாஃபி என்ற பெயரையும் சொல்ல வேண்டியிருக்கும். அப்படி லிபியா நாட்டை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தவர், முவாம்மர் கடாஃபி. சர்வாதிகாரி என்றால் அவர் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.

ஒரு தலைமுறைக்கு இருக்கும் சிந்தனை அடுத்த தலைமுறையில் மாறும் என்பதற்கும், அப்பாவின் சிந்தனை பிள்ளைக்கும் இருந்தாக வேண்டும் என்ற அவசியமேதும் இல்லை என்பதற்கும் கடாஃபியின் மகன் செய்ஃப் அல்-இஸ்லாம் கடாஃபி ஒரு நல்ல உதாரணம்.

அடுத்து லிபியாவின் ஆட்சி அரியணையில் அமரப் போகிறவர் என்று அடையாளம் காட்டப்படும் செய்ஃப் அப்பாவுக்கு நேர் எதிர்.

"போப்பா... சர்வாதிகாரமாவது ஒண்ணாவது. ராணுவ ஆட்சி, ராஜா-ராணி, இளவரசன் இளவரசி போன்ற கதையெல்லாம் மலையேறி வருகின்றன. எனக்கு நம் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும். நிறைய சுற்றுலாப் பயணிகள் வரவேண்டும். அப்போதுதான் வருமானமும் வாழ்வும் உயரம்.

மது குடிக்கத் தடை, விசா பெற கட்டுப்பாடுகள், நல்ல ஹோட்டல்கள் இல்லை என்று லிபியா இருந்தால் எந்தச் சுற்றுலாப்பயணிக்கு இங்கு வந்து செலவு செய்யத் தோன்றும்? அரசியல் ரீதியாகவும் தங்கள் தலைவர்களை, தங்களை யார் வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை மக்களேதான் தீர்மானிக்க வேண்டும்' என்பது கடாஃபி ஜூனியரின் தெளிவான சிந்தனை. இவருக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்தமான கனவு: வட ஆப்பிரிக்காவின் வியன்னாவாக லிபியாவை மாற்ற வேண்டும்'.

உலகத்திலேயே ஃபிரெஞ்ச் மொழியில் வெளிவரும் பத்திரிகைகளில் மிகப் பிரபலமான முன்னணி பத்திரிகை "லி மாண்டே'. ஆனால் அது பாவம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. "ரொம்பவும் சுதந்திரமாக கருத்துகளை வெளியிடும் பத்திரிகை; துணிச்சல் மிக்க பத்திரிகை' என்றெல்லாம் ஃபிரான்ஸில் அதற்குப் பல பெருமைகள் உண்டு. இருந்தும் மோசமான நிதிநிலை காரணமாக "யாராவது வந்து என்னை வாங்கிக் கொள்ளுங்களேன்' என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு சந்தைக்கு வந்தது. நூறு மிலியன் யூரோ கடன் இருக்கிறது. வாங்குபவர் இந்தக் கடனையும் அடைக்க வேண்டும். அப்புறம் லாபம் பற்றி யோசிக்க வேண்டும்.

"நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்' என்று மூன்று பணக்காரர்கள் சேர்ந்து முன்வந்தார்கள். ஒருவர் சேவியர் நியல். 42 வயது. இன்டர்நெட் நிறுவன அதிபர். ஆரம்பத்தில் இவர் தன் நிறுவனம் மூலம் ஆணும் பெண்ணும் செக்ஸ் வசனங்கள் பேசிக் கொள்ளலாம் என்று ஒரு சேவையைத் தொடங்கி பிரபலமானவர். இன்று மிகப் பெரிய இணைய அதிபர்.

அடுத்தவர், 79 வயது பியரி பெர்ஜ். உலகில் ஃபேஷன் குரு என்று போற்றப்பட்ட யுவஸ் செயின்ட் லாரன்ட் என்பவருடன் இணைந்திருந்த பணக்காரப் பங்குதாரர். மூன்றாவது நபர் மத்யூ பிகஸி என்ற 41 வயது கோடீஸ்வரர். லஸôர்ட் என்ற முதலீட்டு வங்கியின் உயர் அதிகாரி. இந்த மூன்று பேர்களின் கட்டுப்பாட்டில் இன்று லி மாண்டே!

"நாங்கள் லி மாண்டே பத்திரிகையின் எடிட்டோரியல் சுதந்திரத்திலோ நிருபர்களின் சுதந்திரத்திலோ தலையிட மாட்டோம். ஃபிரான்ஸில் இன்று வெளிவரும் சுதந்திரமான இந்தப் பத்திரிகையைப் போல வேறு எதுவும் இல்லை. அந்தச் சுதந்திரத்துடனேயே அந்தப் பேப்பரை நாங்கள் வைத்திருப்போம்' என்று அந்த மூவரும் தெளிவாகச் சொல்லிவிட்டதால் பத்திரிகை ஊழியர்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.

இந்த மூவர், லிமாண்டே நிர்வாகத்தை வாங்கப் போவது தெரிந்து பிரதமர் சர்கோஸி, பத்திரிகையின் வெளியீட்டாளரை அழைத்துப் பேசினார். மூவர் கூட்டணி அவருக்குப் பிடிக்கவில்லை. ஏன்? அந்த மூவரும் இடது சாரி எதிர் கட்சிகளோடு நட்புக் கொண்டிருப்பதற்காக... ஆளுங்கட்சியோ வலது பக்கம் சாய்வது.

"லி மாண்டே', மூவர் கைக்குப் போவதை சர்கோஸியால் தடுக்கமுடியவில்லை.

எதைத்தான் ஏலம் விடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

புகழ்பெற்ற தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிக, நடிகையர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் அணிந்த உடைகள், கைக்கடிகாரம், எழுதிய பேனா போன்றவை அடிக்கடி ஏலத்தில் வரும். அந்த ஏலம் செய்திகளிலும் வரும்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கனவுக் கன்னி மர்லின் மன்றோவுக்கு ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மார்பு எக்ஸ்-ரேயைச் சமீபத்தில் ஏலம் விட்டார்கள்.

1954 நவம்பர் பத்தாம் தேதி அந்த எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. டாக்டர்களின் அறிவுரையின் பேரில் மர்லின் மன்றோ எக்ஸ்-ரே எடுத்துக் கொண்டார். எதற்காக என்ற விவரம் இல்லை.

இந்த எக்ஸ்-ரே 45000 டாலர்களுக்கு ஏலம் போனது. அவர் உட்கார்ந்த ஒரு நாற்காலியும் ஏலம் விடப்பட்டது. 1962-இல் ஃபோட்டோ ஷூட் எனப்படும் புகைப்படத் தொகுப்புக்காக அவர் அமர்ந்து போஸ் கொடுத்த நாற்காலி அது. அப்போது அவர் தன் ஹை ஹீல்ஸ் ஷூக்களை நாற்காலியின் குஷனை அழுத்தியபோது அந்தக் குஷனில் ஓர் ஓட்டை விழுந்துவிட்டது.

"ஆஹா.. மர்லின் மன்றோவின் ஹை ஹீல்ஸ் ஷூ குத்திக் கிழித்து ஆன ஓட்டையாயிற்றே! அரிய பொருட்களைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கும் ரசனை உள்ளவர்களுக்கு ஏக குஷி!  மன்றோ பயன்படுத்திய சென்ட் பாட்டிலும் ஏலம் போனது. அந்த சென்ட்டின் பெயர் "சேனல் நெம்பர் ஃபைவ்' "நீங்கள் இரவில் படுக்கப்போகும்போது என்ன அணிவீர்கள்?!' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு "சேனல் நெம்பர் ஃபைவ் சென்ட்டில் ஐந்து துளிகள்' என்று பதில் சொன்னார் மர்லின் மன்றோ!

அட, இப்படி ஒரு ஆடையா?

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்