கடனுதவி வழங்குவது வங்கிகளின் கடமை - Dinamani - Tamil Daily News

கடனுதவி வழங்குவது வங்கிகளின் கடமை

First Published : 29 September 2013 01:47 AM IST

கடன் வழங்குவது வங்கிகளின் கடமை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

 சென்னை வட்ட கனரா வங்கி சார்பில் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 18600 பேருக்கு ரூ.202 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கும் விழா ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:

 சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் கனரா வங்கி துவக்கப்பட்டது. தற்போது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய 5 வங்கிகளில் கனரா வங்கியும் ஒன்று. இந்தியா முழுவதும் 4200 கிளைகளைக் கொண்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கிளைகள் பங்கேற்று 6613 மாணவர்களுக்கு ரூ.131 கோடி கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மேலும் கிராமிய கடன்கள் சேர்த்து மொத்தம் 18ஆயிரத்து 600 பேருக்கு ரூ.202 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி வழங்குவது வங்கியின் கடமை. மக்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வங்கியில் பணத்தை போட்டு சேமிக்க வேண்டும்.

 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் கடன் பெற வங்கிக்கு செல்லவே பயப்படுவார்கள். ஏனெனில் சொத்து ஜாமீன் கேட்பார்கள். அல்லது பெரிய மனிதர்களின் ஜாமீன் கேட்பார்கள். ஆனால் தற்போது கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டம் நிறைவேற்றியதால் அனைத்து மாணவர்களும் தற்போது வங்கிக்கு சென்று சுலபமாக கல்விக் கடன் பெறுகின்றனர்.

மேலும் மக்களுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேலை உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், ஏழை எளியோருக்கு மதிய உணவுத் திட்டம், தற்போது உணவுக்கு உறுதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.  வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை வங்கி அதிகாரிகள் தயவு செய்து அலைகழிக்காமல் கொடுக்க வேண்டும்.

ரகுராம் ராஜன் குழு அறிக்கைப்படி வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கோவா முதலிடமும், கேரளா 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தையும் பெற்றுள்ளது. ஒரிசா, பிகார், உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன. கடைசி இடங்களில் உள்ள மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் உள்ளது.

தமிழ்நாடு 3வது இடம் பெற காரணம் காமராஜர்தான். ஏனெனில் காமராஜர் முதல்வராக இருந்தபோது அனைத்து இடங்களிலும் பள்ளிக்கூடங்களை திறந்தார். இதனால் வளர்ச்சிக்கு அடித்தளம் வலுவானது என்றார் ப.சிதம்பரம்.

மேலும் கனரா வங்கி சார்பில் குடிநீர் வசதி இல்லாத பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும், எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 28 மாணவிகளுக்கு ரூ.1.10 லட்சம் கல்வி உதவித் தொகையும் வித்யாஜோதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கனரா வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.கே.துபே, செயல் இயக்குநர் ஏ.கே.குப்தா, சென்னை வட்ட பொதுமேலாளர் ஆர்.எம்.மீனாட்சிசுந்தரம், எம்.பி கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.பி.ஜெ.ராஜாபாபு, கருடா பேரவை பி.கே.ஜி.பாபு, சோனியா பேரவை மாநில செயலர் கப்பல் இ.கங்காதரன், பி.கருணாமூர்த்தி, அசோக்குமார், ஆரணி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.பொன்னையன், ஏ.பழனி, வட்டாரத் தலைவர்கள் பிரசாத், அண்ணாமலை, நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பிள்ளையார், கனரா வங்கியின் காஞ்சிபுரம் முதுநிலை மேலாளர் ஏ.தனபால், ஆரணி கிளை மேலாளர் ராம்மோகன், களம்பூர் கிளை மேலாளர் ஜி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.