ஒப்பந்தம் போட்டால் போதாது

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்திட்ட ஆவணத்தை ஐ.நா. ஒப்பந்த விவகாரங்கள் பிரிவின் தலைவர் சான்டியாகோ வில்லால் பாண்டோவிடம் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் வழங்கினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல் திட்டத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம் இந்தியா கடந்தாண்டு சமர்ப்பித்தது.

அதில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என உறுதி கூறியிருந்தது. மாசு இல்லாத எரிசக்தியின் அளவை 40 சதவீதம் உயர்த்துவது எனவும், இந்த இலக்கை எட்ட வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

அடுத்த சில ஆண்டுகளில், 175 கிகாவாட் (1 கிகா வாட்=1000 மெகாவாட்) அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மின்னுற்பத்தியை 60 கிகா வாட் அளவுக்கு உயர்த்தவும், சூரிய சக்தி மின்னுற்பத்தியை 100 கிகா வாட் அளவுக்கு அதிகரிக்கவும், சாண எரிவாயு மின் உற்பத்தியை அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் 10 கிகா வாட்டாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 4.1 சதவீதமாகும். சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் அண்மையில் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற பருவநிலை குறித்த ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டில் இந்த செயல் திட்டத்தை இந்தியா சமர்ப்பித்தது. இதையடுத்து பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு நவம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வரும் என ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மொராக்கோ நாட்டில் நவம்பர் மாதம் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

1997-ஆம் ஆண்டு ஜப்பானின் கியாட்டோ நகரில் பருவநிலை குறித்து நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்துக்குப்பின் உலக நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் பாரீஸ் ஒப்பந்தம்.
பாரீஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதனை நிறைவேற்றுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

உலகின் இரண்டாவதாக அதிக மக்கள்தொகை கொண்டுள்ள இந்தியாவில், மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப மின்சாரம், வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மின் தேவைக்கு பெரும்பாலும் அனல் மின் உற்பத்தி நிலையங்களையே நம்ப வேண்டியிருக்கிறது. இவற்றுக்கு நிலக்கரி மூலப்பொருளாக உள்ளது. அதுபோல் வாகனப் பயன்பாட்டுக்கு பெட்ரோல், டீசல் அவசியம்.
புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் ஆகியவையே கரியமில வாயு வெளியேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனத்தை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தாலும், மின்சாரம், வாகனங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

அதேசமயம் மின் திருட்டு, மின் இழப்பு, மின் விரயம் போன்றவையும் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், குறைந்த தொலைவு செல்வதற்கு சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும்போது, கரியமில வாயுவின் வெளியேற்றம் கணிசமான அளவு குறையும்.
அதுபோல் அதிகளவு கரியமில வாயுவை உட்கிரகிக்கும் மரக் கன்றுகளை (புங்கன், வாகை, வேம்பு, கடம்ப மரக் கன்றுகள் உள்ளிட்டவை) நட்டு வளர்க்கவும் முயற்சி மேற்கொள்ளலாம்.
தொழிற்சாலைப் பகுதிகள், சாலையோரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் கரியமில வாயுவின் தாக்கம் கணிசமாகக் குறையும்.

அதுபோல் அனல் மின் நிலையங்களில் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றும் "சூப்பர் கிரிட்டிக்கிள்' தொழில்நுட்பம், "கரிம வடிகட்டி முறை' ஆகியவற்றை புகுத்துவது, குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றும் வகையிலான வாகன என்ஜின்களை உற்பத்தி செய்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டால் மட்டும் போதாது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம்.

அதற்கு அரசின் முயற்சிகள் மட்டுமின்றி மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாத் தேவையாகும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com