ஒரு பாட்டுக்காரனுக்கா பரிசு?

இலக்கிய உலகில் பல விழிகள் வியப்பால் விரிகின்றன, சில புருவங்கள் சினத்தால் நெரிகின்றன.

இலக்கிய உலகில் பல விழிகள் வியப்பால் விரிகின்றன, சில புருவங்கள் சினத்தால் நெரிகின்றன. இரண்டிற்கும் காரணம் இந்த ஆண்டு இலக்கியத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு. உலகின் மிக உயர்ந்த பரிசாக மதிக்கப்படும் அந்தப் பரிசு இந்தாண்டு 1960களில் தன் பாடல் வரிகளால் பரவசப்படுத்திய, மன எழுட்சி ஊட்டிய பாப் டிலான் என்ற பாடலாசிரியருக்கு வழங்கப்படுகிறது.

வியப்பிற்குக் காரணம், ஓர் இசைப்பாடகனுக்கு இலக்கியப் பரிசா? என்ற எண்ணம். ஏர்னஸ்ட் ஹெம்மிங்வே, வில்லியம் பாக்னர், சால்பெல்லோ, டோனி மாரிசன் போன்ற புனைகதைப் படைப்பாளிகளுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கும் பரிசு ஒரு பாட்டுக்காரனுக்கா? இலக்கியம் என்றால் இவர்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் சினத்திற்குக் காரணம்.

இந்த எண்ணங்களுக்கு அடிப்படை, இலக்கியம் என்பதைக் குறித்து நம்முள் படிந்து இறுகிப் போயிருக்கும் கருத்துக்களும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு எந்த அடிப்படையில் அளிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளாததும்தான்.
1896ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதிலுள்ள இலக்கியப் பரிசுக்கான சாசனம், ""ஓர் லட்சியத்தின் திசையில் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்பை உருவாக்கியவருக்கு'' இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்கிறது.

ஆல்பிரட் நோபல் தனது சாசனத்தை எழுதிய காலத்தில், அதாவது 120 ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில், இலக்கியம் என்பது இருவகை. கவிதை, நாடகம் இவை இரண்டும் செவ்வியல் இலக்கியம். நாவல், சிறுகதை இவை நவீன இலக்கியம்.அதாவது படைப்பு என்பது புனைவு. இதுதான் இலக்கியம் பற்றி அன்று இருந்த புரிதல்.
இன்றும் தமிழ் இலக்கிய உலகில், ஏன் இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே இந்தப் புரிதல்தான் நீடிக்கிறது.. ஆனால் படைப்பு என்பது புனைவு மட்டும்தானா?
இதைக் குறித்து நமக்குத் தெளிவு ஏற்பட வேண்டுமானால் நாம் சில அடிப்படைக் கேள்விகளுக்குப் போக வேண்டும்.
இலக்கியம் என்பது என்ன?
புற உலகின் யதார்த்தங்கள் நம் மனதில் சில சித்திரங்களை, எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த மனம் படைப்பூக்கம் கொண்டதாக இருந்தால் அது தனது அகச் சித்திரத்தை படைப்பாக உருவாக்குகிறது. அது மொழி வழி வெளிப்படும் போது அதை இலக்கியம் என்கிறோம்.
அக உணர்வுகள், சிந்தனைகள், குழப்பங்கள் இவை மாத்திரம் கொண்ட படைப்புகளும் உள்ளனவே?
ஆம். அந்தப் படைப்புகளுக்கான தூண்டுதலும் பெரும்பாலும் புற உலகின் யதார்த்தங்களாகத்தானிருக்கும். உதாரணம் மரணம், காமம், காதல்,நோய்.

புனைவுகள் மட்டும்தான் இலக்கியமா?
ஒருவர் தன் அகச் சித்திரத்தைப் படைப்பாக வெளியிடத் தன் வசம் உள்ள கருவிகளைச் சார்ந்திருக்கிறார். அவற்றில் ஒன்று புனைவு.அநேகமாக அது நம் எல்லோரிடமும் இருக்கிறது. அலுவலகத்தில் விடுப்பு எடுப்பதிலிருந்து, பள்ளிக்கூடத்திற்கு வீட்டுப்பாடம் செய்யாமல் போவது வரை பல அற்ப விஷயங்களில் கூட நாம் அதைப் பயன்படுத்தியிருக்கிறோம். சிறு வயது முதலே பயன்படுத்தி வந்திருப்பதால் நமக்கு அதில் நம்மை அறியாமலே ஒரு பயிற்சி இருக்கிறது. வாசிப்பு அதை செழுமைப்படுத்துகிறது. அதனால் பலர் அதைப் பயன்படுத்துகிறார்கள். நம்முள் உருவாகும் அகச் சித்திரத்தின் தெளிவற்ற பகுதிகளை இட்டு நிரப்பவும் அது பயனளிக்கிறது.

ஆனால், கடந்து சென்ற 20ஆம் நூற்றாண்டை விட, இன்று புற யதார்தங்கள் மாறிவிட்டன. அவை ஏற்படுத்தும் அகச் சிக்கல்களும் மாறிவிட்டன.

அணு ஆயுதங்கள் ஏந்தி உலகம் யுத்தம் புரிந்தது ஒரு காலம். இன்று அரசுகள் அஞ்சுவது அணுகுண்டுகளைக் கண்டு அல்ல. கையடக்கக் கணினிகளைக் கண்டு. அரசுகளுக்கும் தனிமனிதர்களுக்குமிடையே நிழல் யுத்தம் நித்தம் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கையில் உள்ள ஆயுதம் வழி மூளைக்குக் குறிவைத்து வதந்தியோ, செய்தியோ பரப்பலாம். அதிகார பீடங்கள் அதனால் ஆட்டம் காணலாம்.

ஒவ்வொருவருக்கும் பல முகங்கள். ஒன்றில் புன்னகை. ஒன்றில் வன்மம். உதவிகளுக்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருக்கின்றன. கருணைக்குக் காரணங்கள் தேவைப்படுகின்றன. நம்பிக்கைகள் சந்தேகத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன.
வலக்கையால் வணிகமும், இடக்கையால் அரசியலும் இன்றைய மனிதர்களை அணைத்துக் கொண்டிருக்கின்றன. ஆறத் தழுவிக் கொள்கிறார்களா, நெரித்துக் கொல்கிறார்களா என்பதை விளங்கிக் கொள்ள முடியாது விக்கித்துப் போயிருக்கிறோம். அன்றைக்கு இருந்த குடும்பம் இன்றில்லை. அன்றைக்கு இருந்த காதல் இன்றில்லை. அன்றைக்கு இருந்த பெண் இன்றில்லை (ஆணும் அப்படியே!) அன்றைக்கு இருந்த விழுமியங்கள் இன்றில்லை.

மாறிவிட்ட மனிதனை, மாறிவிட்ட வாழ்க்கையை, மாறிவிட்ட சமூகத்தைச் சொல்லப் புனைவுகள் போதுமானதாக இல்லை. ஏனெனில் மனிதனின் புனைவையும் விஞ்சி நிற்கிறது யதார்த்தம்.

புனைவின் இந்தப் போதாமையைப் புரிந்து கொண்ட நோபல் பரிசுகளை அளிக்கும் ஸ்வீடிஷ் அகாதெமி, புனைவுகளையும் தாண்டி மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தும் எழுத்தின் புதிய வகைகளை இலக்கியமாக அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு பெலாருஷ்யன் இதழளாளர் ஸ்வெத்லானா அலெக்சிவிச்சிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மனித குலத்தின் பெருந்துயரங்கள் என அவர் கருதிய இரண்டாம் உலகப் போர், செர்னோபில் அணு உலை விபத்து, ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா நடத்திய போர், சோவியத் யூனியன் பிரிந்து சிதறியது இவற்றை அடுத்து எழுந்த துயரங்களை அந்த நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டு அவற்றைக் காலவரிசைப்படுத்தித் தொகுத்தார். அதனடிப்படையில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ""இன்றைய யதார்த்தங்களைச் சொல்லப் புனைவுகள் போதுமானவையல்ல. அதற்கு இதழியல்தான் சரி'' என்று அவர் தனது உரையில் சொன்னார். இதழியலை புதிய இலக்கிய வகையாக மாற்றம் செய்தவர் என்று அவரை ஸ்வீடிஷ் அகாதெமியின் நிரந்தச் செயலர் கொண்டாடினார்.

அதற்கு முந்தைய ஆண்டு நோபல் பரிசு பெற்ற பாட்ரிக் மொடியானோ தனது நாவல்களை விடவும் திரைக்கதைகளுக்குப் பெயர் பெற்றவர்.

இந்தாண்டு பரிசு பெறும் பாப் டிலான், இசைப்பாடகர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, "எது இலக்கியம்?' என்பதைக் குறித்த நோபல் பரிசுக் குழுவின் பார்வை விரிவடைந்து வருகிறது. என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சிறுகதை, நாவல், கவிதை என்பவற்றுக்கும் அப்பால், அ-புனைவு, இதழியல், வரலாறு, சுயசரிதைகள், ஏன் ஆய்வுக் கட்டுரைகளிலும் (எட்வர்ட் சயீத்தின் ஓரியண்டலிசம் சில ஆண்டுகளுக்கு முன் பரிசீலிக்கப்பட்டது) கூட அது இலக்கியத்தைத் தேடுகிறது.
ஆனால் பாடல்கள் கவிதையாகுமா? என்ற கேள்வி இந்தப் பரிசையொட்டி மீண்டும் எழுப்பப்படுகிறது. பாடல்களும் கவிதைகளும் வார்த்தைகளால் செய்யப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இசையின்றி தனித்து நிற்கக் கூடியது கவிதை. இசையோடு கலந்து எழுவது பாடல். ஆனால் கவிதை பாடல் இரண்டிற்கும் பின்னிருப்பது ஒரு கவிமனம்.

பாப் டிலானுக்கு அந்தக் கவி மனம் இருந்தது. டிலானின் பாடல்களை கீட்ஸ், எலியட், வில்லியம் பிளேக் போன்ற கவிதைகளோடு ஒப்பிட்டு அறிஞர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். சிலர் பழங்கால கிரேக்க கவிதைகளோடு ஒப்பு நோக்குகிறார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கவிதை போதித்து இப்போது ஓய்வு பெற்றுவிட்ட பேராசிரியர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் பாப் டிலானின் பாடல்களைக் கொண்டாடி ஒரு நூலே எழுதியிருக்கிறார் (Dylans Visions of Sin).

அவரது பாடல்கள் அறுபதுகள் எழுபதுகளில் குரலற்றவர்களின் குரலாக எழுந்தது. பின்னர் தொடர்ந்து பல மாற்றங்களைப் பெற்றது. ஆனால் எல்லாக் காலங்களிலும் அது மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறது. ஆப்பிள் கணிணி நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது உரைகள் பலவற்றில் பாப் டிலானை மேற்கோள் காட்டுகிறார்.
இலக்கியத்திற்கான அண்மைக்கால நோபல் பரிசுகள் நமக்கு மூன்று செய்திகளை முன் வைக்கின்றன.
இலக்கியம் என்பதன் வரையறை, புரிதல், மாறிக் கொண்டிருக்கின்றன. வடிவங்கள் மட்டுமல்ல, வகைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. அதன் பன்முகத் தன்மை உலக அளவில் அழுத்தம் திருத்தமாக உறுதி செய்யப்படுகிறது. இது முதல் செய்தி.

வடிவங்கள் வேறுபடலாம். வகைகள் பலவாகலாம். மொழியும் வார்த்தைகளும் புதிதாகலாம். ஆனால் இலக்கியம் என்பது இவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை. எழுத்துக்குள் ஒரு குரல் இருக்க வேண்டும். ஆன்மாவின் குரல். அது அதிகாரத்திற்கு எதிரான கலகக் குரலாக இருக்குமானால் உன்னதமானது. குரலற்றவர்களின் குரலாக இருக்குமானால் அது இன்னும் மேன்மையானது. இது இரண்டாவது.

வெகு ஜனங்களால் கொண்டாடப்படும் படைப்பு - பாப்புலராக இருக்கும் எழுத்து- இலக்கியமாக இருக்க முடியாது என்ற கண்மூடித்தனம் தூக்கிக் கடாசப்பட்டுவிட்டது. எழுத்தின் நோக்கம் சிற்றிதழ்களுக்குள் சிலாகிக்கப்படுவதல்ல, சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துவது என்பது இன்னும் ஒரு முறை நினைவூட்டப்பட்டிருக்கிறது. இது மூன்றாம் செய்தி.

இதை இன்று உலகத்திடமிருந்து கற்க நேர்ந்திருப்பதுதான் வரலாற்றின் நகை முரண். நேற்றுவரை நம் இலக்கிய உலகம் பள்ளுப்பாட்டையும், பக்திப் பனுவல்களையும் ஒரு சேர வாரி அணைத்துக் கொண்டு உவகையில் திளைத்துக் கொண்டுதான் இருந்தது. கற்பனையின் நயங்களும், யதார்தத்தின் முரண்களும் கைகோர்த்துக் கொண்டு நடந்த காலம் ஒன்றுண்டு.
ஆனால் மேற்குச் சாளரத்தின் வழியே வீசிய பனிக்காற்று நம்மை வெள்ளைக்காரர்களைப் போல வேடமணிந்து கொள்ளத் தூண்டியது. இன்று அங்கு பருவங்கள் மாறிப் பகலவன் பொலிகிறான்.

இன்னும் நம் வகுப்பறைகளும், இலக்கிய நிறுவனங்களும், அறிவுஜீவிகளும், பேராசிரியப் பெருந்தகைகளும், சிற்றிதழ் எழுத்தாளர்களும் புனைவுகளையே இலக்கியம் என்றெண்ணி மயங்கி, இருண்மையே நவீனம் எனக் கிறங்கிக் கிடப்போமானால் காலம் நம்மைக் கைவிட்டு நடக்கும்.

அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, சொல்வது நானல்ல, பாரதிதாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com