ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதைச் சின்னம்

மு.பொ.ஆ.500 அளவினதாக, அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம்.

தொல்மரபின் வழிபாட்டுச் சின்னங்களில் அரிதான ஒன்றான புதிர்ப்பாதைச் சின்னம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே குந்துக்கோட்டையில் ஏணிபெண்டா - அகநள்ளியில் அமைந்துள்ளது.

புதிர்ப்பாதைச் சின்னங்கள்

மாந்தரினம் தன் அறிவியல் வளர்ச்சியை, சிந்தனையை, வாழ்வியலை, வழிபாட்டுத் தேவையை வெளிப்படுத்த, தொல்பழங்காலம் முதல் கற்கருவிகள், பாறை-குகை ஓவியங்கள், பாறைக்கீறல்கள், சுடுமண் பொருட்கள், பானைகள் போன்று பலவிதமான தொல்பொருட்களையும், பலவகையான நினைவுச்சின்னங்களையும் விட்டுச்சென்றிருக்கிறது. இவ்வகையான நினைவுச்சின்னங்களுள் புதிர்ப்பாதைச் சின்னங்களும் ஒன்று. அரிய இவ்வகைச் சின்னங்கள் உலகின் பலபகுதிகளிலும், குறிப்பாக ஆசியாவிலும் ஐரேப்பாவிலும் கூடுதலான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இனம், மத வேறுபாடுகள் அற்று எல்லா பகுதி மக்களாலும், எல்லா தரப்பினராலும் இச்சின்னங்கள் பண்டைக்காலத்தில் போற்றப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. தற்பொழுது இதன் பயன்பாடு, நோக்கம் என்பது பற்றி ஒன்றும் அறியமுடியாத நிலையில் உள்ளோம். இருந்தும், வழிபாடுத் தேவையினை பூர்த்திசெய்யும் சின்னங்களில் ஒன்றாக இன்றும் இவை விளங்குகின்றன. தமிழில் இச்சின்னம் புதிர்நிலை என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிர்ப்பாதைகளில் இரண்டு வகைகள் காணக் கிடைக்கின்றன. ஒன்று, ஆங்கிலத்தில் Labyrinth என்று அழைக்கப்படும் ஒற்றைப் பாதை வடிவமாகும். மற்றொன்று, Maze என்று அழைக்கப்படும் பல வாயில்களுடன் அடைபட்ட பாதையும் கொண்ட வடிவமாகும். Labyrinth வடிவமே பரவலாக கிடைத்துவரும் வடிவமாகும். இவை மூன்று முதல் ஒன்பது சுற்றுப்பாதைகள் கொண்டு அமைக்கப்பட்டிருகின்றன. ஐரோப்பாவில் வரலாற்று இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட தேவாலயங்களில் 11-12 சுற்றுகள் கொண்ட புதிர்ப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட வடிவம் செம்மை வடிவம் என குறிப்பிடப்படுகின்றன.

இப்புதிர்ப்பாதைகள் ஓவியங்களாக, பாறைக்கீறல்களாக, பானை-சாடி ஓவியங்களாக, களிமண் வில்லைக் கீறல்களாக, கற்கள் கொண்டு அமைக்கப்பட்டவையாக என பலவகைகளில் மு.பொ.ஆ 4500 முதல் இன்றுவரை எல்லாப் பண்பாட்டுக் காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் காணப்பட்டுவரும் வடிவமாக விளங்குகிறது. அதே சமயத்தில், மிகவும் அரிதான ஒன்றாகவும் இருக்கின்றது. பொதுவாக இவை வட்டம், செவ்வகம், சதுரம் ஆகிய வடிவங்களில் கிடைத்துவருகின்றன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நீள்வட்டம் அல்லது முட்டை வடிவம், புதியவடிவ வெளிப்பாடாகும்.

ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதை

ஏணிபெண்டா - அகநள்ளி - புதிர்ப்பாதை முழு தோற்றம்

முட்டை வடிவில் அமைந்துள்ள ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதை, ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட செம்மை வடிவமாகும். மக்கள் வழக்கில் இதனை ஏழு சுற்றுக்கோட்டை என்று பொருள்படியாக, ‘ஏழுசுத்துக்கோட்டை’ என மருவி அழைக்கின்றனர். இதன் நுழைவாயில் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் குண்டுக் கற்கள் மற்றும் பலவடிவ துண்டுக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட இச்சின்னம், கிழக்கு மேற்காக 8 மீட்டரும் (25.10 அடி), வடக்குத் தெற்காக 9.2 மீட்டரும் (29.09 அடி), பாதையின் அகலம் 45 முதல் 50 செ.மீ. அளவு கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பாதையின் கற்கள் சில விலகியிருப்பதால், அவ்விடங்களின் அளவு மாறுபடுகின்றது. இதன் மையப் பகுதியானது, சிறு பலகைக்கற்கள் கொண்டு மூடுபலகை கொண்ட சிறு கல்திட்டை அல்லது அறை போன்ற அமைப்பு கொண்டதாக விளங்குகிறது. அகல்விளக்குகள் வைத்து வழிபட இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

ஏணிபெண்டா - அகநள்ளி - மைய சிறு கல்வீடும் - இடதுபுற சுற்றுகளும்

வழிபாடு

இச்சின்னம் உள்ள பகுதி தற்பொழுது அடர் வனப்பகுதியாகவும், யானைகள் நடமாடும் பகுதியாகவும் இருப்பதால், வழிபாடு நீங்கியுள்ளது. அவ்வப்பொழுது அகல்விளக்கேற்றி வழிபாடு செய்வதுண்டு என கள ஆய்வில் அறியமுடிகிறது. வளமைச்சடங்கு சின்னமாக விளங்கும் இச்சின்னங்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய் நீங்கவும், கால்நடைகளின் பெருக்கம் வேண்டியும் வழிபடப்பட்டமையை அறிந்துகொள்ள முடிகிறது. இது, இச்சின்னங்கள் வழிபடப்படும் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் நம்பிக்கைகளின் பொதுக் குணத்தை ஒட்டியதேயாகும்.

காலம்

இது, மு.பொ.ஆ.500 அளவினதாக, அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம். இக்காலகட்டம், பெரும் கற்படைப் பண்பாட்டின் மத்திய காலகட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இச்சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு 1 கி.மீ தொலைவில், கல்வட்டம் மற்றும் கல்குவி, கல்வட்ட வகை பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

சிறப்புகள்

ஏணிபெண்டா - அகநள்ளி புதிர்ப்பாதை, தம்முள் சில சிறப்புக் குணங்களைக் கொண்டுள்ளது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் அறியப்பட்ட புதிர்ப்பாதைச் சின்னமான குந்தாணி – சின்னகொத்தூர் - பைரேகவுணி சின்னத்துடன் ஒப்பிட்டு அறியலாம்.

குந்தாணி - சின்னகொத்தூர் - பைரேகவுணி புதிர்ப்பாதை புகைப்படமும் வரைபடமும்

குந்தாணி புதிர்ப்பாதை 8.5 மீட்டர் (28 அடி) விட்டம் கொண்டு அமைந்த வட்டவடிவப் புதிர்ப்பாதையாகும். இது சக்கரவியூக அமைப்பு கொண்ட வடிவம் என்று புகழப்படுகிறது. சக்கரவியூக அமைப்பு என்பது மையமானது சுருள் உருவில் அமைக்கப்படும் வட்டவடிவமாகும்.

அகநள்ளி புதிர்ப்பாதை முட்டைவடிவில் அமைந்திருந்தாலும், சக்கரவியூக அமைப்பு கொண்டதே. இருந்தும், இதன் மையப்பகுதி சுருள் வடிவமாக அமையாமல் திருக்குமருக்குப் பாதையின் உறுப்பாகவே அமைந்துள்ளது கவனிக்கத்தக்க அமைப்பாகும். சக்கரவியூக அமைப்பு, இந்தியப் புதிர்ப்பாதைகளின் சிறப்பு வடிவம் என்று குறிப்பிடப்படுகிறது. சக்கரவியூகம் என்பது மகாபாரதப் போரில் அபிமன்யுவை வீழ்த்த துரோணரால் அமைக்கப்பட்ட போர்ப்படை வியூகம் என்பது அறிந்ததே. வியூகத்தில் சிக்கிய அபிமன்யு தப்பமுடியாது வீழ்ந்ததும் அறிந்த புராணச் செய்தியே. இது, கவனம் சிதைந்தால் அல்லது சிதறடிக்கப்பட்டால், புதிர்ப்பாதையில் மேற்கொள்ளும் பயணம் தோல்வியில் முடியும் என்பதை நினைவூட்டுவதாகவும் உள்ளது.

பேராசிரியர் பெ.வெங்கடேஸ்வரன் – அகநள்ளி புதிர்ப்பாதை களஆய்வில்

கம்பைநல்லூர் - வேதரம்பட்டி புதிர்ப்பாதை சின்னம்

அகநள்ளி மற்றும் பைரேகவுணி புதிர்ப்பாதைச் சின்னங்களுடன் இதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கம்பைநல்லூர் - வேதரம்பட்டி புதிர்ப்பாதைச் சின்னத்தோடு ஒப்பிடமுடியாது. வேதரம்பட்டிச் சின்னம், பல நுழைவாயில்கள் கொண்ட மூடிய அல்லது அடைபட்ட வழிகளைக்கொண்டு அமைக்கப்பட்ட Maze வகைச் சின்னமாகும். அகநள்ளி மற்றும் பைரேகவுணிச் சின்னங்கள் ஒற்றை நுழைவாயிலுடன், தடைகளற்ற திருக்குமறுக்குப் பாதை கொண்டதாகும்.

புதிர்ப்பாதைப் பயணத்தின் பயன்

புதிர்ப்பாதைச் சின்னமானது, யோக மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கபட்ட வடிவமாகும். புதிர்ப்பாதையில் நடக்கும் ஒருவர், சின்னத்தின் நான்கு திசைகளிலும் திருக்கு மறுக்காக நடக்க விதிக்கப்படுகிறார். இதனால், தன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். தவறினால் பாதை மாறிவிடும். மையத்தை அடையமுடியாமல் போகலாம். இச்சின்னத்தில் நுழைவாயிலும், வெளியேறும் வாயிலும் ஒன்றே. ஆகையால், உள்நுழைந்து வந்த வழியே திரும்பி வர வேண்டும். இது புவிஈர்ப்பு விசையோடு இயைந்து செல்லும் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

சின்னத்தின் ஏழு சுற்றுகளுடனாக திருக்குமறுக்குப் பயணம் உடலின் ஏழு சக்கரங்களை இயக்கி மூளையைத் தூண்டுகிறது. மூளை தூண்டப்படுவதால் உடல் இயக்கம் சீராகிறது. மேலும், இதனூடான பயணம், மக்களின் உணர்வுகளோடு நெருக்கமானதாகவும், சிந்தனை மற்றும் செயல் ஓர்மையினால் மனம் லேசாகி பாரமற்ற பரவச அனுபவம் கிட்டுவதால் விரும்பப்படும் ஒன்றாகவும், ஆர்வத்தை ஈர்ப்பதாகவும் உள்ளன. இதனால், சடங்கு ரீதியான வழிபாடு, கோளிக்கை போன்றவற்றை மீறிய அணுகலைக் கொண்டுள்ள இது வழங்கும் அரிய அனுபவத்தை அல்லது தன்னிலை மறந்து சிலிர்க்கும் அல்லது பரவச அனுபவத்தை ஆழமுடையதாவும் விரிவானதாகவும் ஆக்குகிறது. மனம் பக்குவமடைகிறது.

குறிப்பு

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை பேராசிரியர். முனைவர் பெ.வெங்கடேஸ்வரன் தலைமையிலான முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் மஞ்சுநாத், கார்த்திக், அன்பரசு ஆகியோர் இப்பகுதியில் மேற்கொண்ட முதல் களஆய்வின்பொழுது இச்சின்னம் அறியப்பட்டது. மேலாய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கள ஆய்வில், பேராசிரியருடன் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பாலாஜி, செல்வமணி மற்றும் தொல்லியல் ஆர்வளர் தகடூர் பார்த்திபன் ஆகியோர் ஈடுபட்டனர்.

- த. பார்த்திபன் & பேரா. முனைவர் பெ. வெங்கடேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com