கல்லாமை என்பது பெரும் குற்றம்

சில நாள் முன்பு கனடா நாட்டில் குடிபெயர்ந்து அங்கேயே வாழ்ந்து வரும் ஈழத் தமிழறிஞர் ஒருவர் என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்.

சில நாள் முன்பு கனடா நாட்டில் குடிபெயர்ந்து அங்கேயே வாழ்ந்து வரும் ஈழத் தமிழறிஞர் ஒருவர் என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். உரையாடலின்போது அவர் குறிப்பிட்ட ஒரு செய்தி நெஞ்சில் நிற்கிறது.
இரயிலிலும், பேருந்திலும், விமானத்திலும் பயணம் செய்யும்போது வெள்ளைக்காரர்கள் கையில் ஏதேனும் புத்தகம் வைத்திருப்பராம். இருக்கையில் அமர்ந்து அப்புத்தகத்தைப் படித்துக்கொண்டே வருவராம். இதில் குழந்தைகளும் விதிவிலக்கு அல்லர். அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களை விமானத்திலேயே கொடுப்பார்கள். அவர்கள் அவற்றைப் பெற்றுப் படித்துக்கொண்டே வருவார்கள்.
படிப்பு என்பது அவர்களின் குருதியோடு கலந்தது. உலகம் முழுதும் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் சென்றதற்கும் வென்றதற்கும் ஆண்டதற்கும் ஒரு பெரும் துணை அவர்களிடம் இருந்த படிப்பு. படிக்கும் பழக்கம். தமிழராகிய நம்மிடம் கல்வியைப் பற்றி நிறைய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. சங்க காலத்திலேயே "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என புறநானூறு முழங்குகிறது.
ஒரு குடும்பத்தில் அரச குடும்பமே ஆனாலும் கல்லாத மூத்தவனை வருக என்னாது கற்றறிந்த அறிவுடையவனையே வருக என்று பண்டையோர் போற்றினர். புறநானூற்றில் இடம்பெறுள்ள அரசர்களும் புலவர்களும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களும் கல்வியில் பேரன்பு உடையவர் என்பதை அக்கால இலக்கியங்கள் அறிவிக்கின்றன.
சேர அரசன் ஒருவன் தன் கீழ் இருக்கும் அறிஞனாகிய புலவனை ஒரு மலையின் சிகரத்தின் மேல் அழைத்துச் சென்று "எதிரே இருக்கும் கண்ணுக்குத் தெரியும் ஊர்களை எல்லாம் எடுத்துக்கொள்' என்று சொன்னான் என்று தெரிவிக்கிறது பதிற்றுப்பத்து. அவர்கள் கல்வியைப் போற்றி வாழ்ந்தமைக்குப் பல சான்றுகள்.
திருவள்ளுவ மேதை தான் எழுதிய திருக்குறளில் கல்விக்காகவே தனி அதிகாரம் ஒன்றை வகுத்துள்ளார். பத்துக் குறட்பாக்களில் கல்வியின் முதன்மையைப் பற்றி எடுத்தோதுகிறார். அவரைத் தொடர்ந்து வரும் பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்களும், கல்வியை முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளனர்.
கல்வி என்பது அரச குடும்பத்திற்கு மட்டும் உரியது அன்று. அனைவருக்கும் உரியது. கல்வியை அனைவருக்கும் உரியது என்று நம் முன்னோர் வற்புறுத்தினும் அதனை நடைமுறைப்படுத்த என்ன செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆசிரியர் கற்பிக்கும் இடம் "பள்ளிக்கூடம்' என்று அழைக்கப்பட்டதாக அறிகிறோம். பள்ளி என்றால் உறங்கும் இடம் என்று பொருள். ஏன் இப்படிப் பெயர் வந்தது என்று ஆராய்ந்து பார்த்தால், கல்வி கற்க விரும்பும் இளைஞர்கள் மலையில் குகைகளில் வாழும் குருமார்களை அணுகி கல்வி கற்றுக் கொள்வது வழக்கம்.
குருமார்கள் பெரும்பாலும் துறவியர். எனவே அவர் உண்டு உறங்கும் இடம் பள்ளி எனப்
பெயர் பெற்றது. அந்த இடமே மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் இடமாகப் பரிணமித்ததால் பள்ளிக்கூடம் என்ற பெயர் வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
இராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்களிலும் இன்னபிற பேரிலக்கியங்களிலும் அரச குமாரர்களை அவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரிய குருவிடம் அனுப்பி கற்கச் செய்ததைப் பார்க்கிறோம்.
வசிஷ்டர் இத்தகு குருதான். துரோணர் இத்தகு குருதான். இவர்கள் முறையே இராமனையும், இன்ன பிறரையும் பஞ்ச பாண்டவரையும் துரியோதியனாதியரையும் கல்வி கற்கச் செய்ததைப் பார்க்கிறோம். பொதுமக்களுக்கு எத்தகு கல்வி முயற்சி மேற்கொள்ளப் பெற்றது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை.
மதக்கல்வி போதிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மற்றபடி தனிக் கல்வி போதிக்கப்பட்டதற்கான சான்று போதிக்கப்பட்ட இடம் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை. இவற்றை ஆதாரமாகக் கொண்டால் பொதுமக்கள் கற்பதற்குப் பழங்காலத்தில் வழி செய்யப்படவில்லை என்றே ஊகிக்க வேண்டி இருக்கிறது.
அவரவர் விருப்பப்படியும் வசதிப்படியும் தனி ஆசிரியர்களிடம் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு கற்போர்க்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதைச் சேனாவரையர் முதலான உரைகள் நமக்குக் குறிப்பாக உணர்த்துகின்றன. மற்றபடி தனிக் கல்வி நிறுவனம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
காலப்போக்கில் பெண்டிர் படிக்கவேண்டாம் என்ற கருத்து பரவியது. "அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு' என்பது பழமொழி. இன்றும்கூட சிற்றூர்களில் இந்த நிலைமையே பெரும்பாலும் நீடிக்கிறது. எனவேதான் இடது கைப் பெருவிரல் கைநாட்டு முறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கோ, தன் பிள்ளைகளுக்கோ கடிதம் எழுதவிரும்பும் பெண்கள் யாரையேனும் ஒருவரை துணையாக வைத்துக் கடிதம் எழுதுவதை இன்றும் கிராமங்களில் காணலாம்.
இது அரச குடும்பத்தில் கூட பரவியிருந்தது என்பதைக் காட்ட ஒரு வரலாறு இடைக்காலத்தில் வரையப்பட்டிருக்கிறது. அவ்வைப் பாட்டி எங்கெங்கோ சென்று களைத்த நிலையில் ஓர் இரவில் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்ட மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நடுவே ஒரு பெண் கால்களில் சதங்கை அணிந்துகொண்டு நடனமாடுவது கேட்டு விழித்துக் கொண்டார். விழித்தவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏன் இந்த நடுவில் ஆடுகிறாய் முகமோ சோக மயமாய் இருக்கிறது. என்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே' என்று கேட்டபோது, அந்த இளம்பெண் சொன்னதாவது:
"பாட்டி, நான் ஒருவரைக் காதலித்தேன். இருவரும் மிக நெருங்கிப் பழகினோம். திருமணம் செய்துகொள்ள விழைந்தோம். ஒருமுறை என் காதலனுக்குக் கடிதம் ஒன்றை எழுதி அதனை ஒருவர் வழி அனுப்பி வைத்தேன். அந்தக் கடிதம் அரச குடும்பத்தைச் சேர்ந்த என் காதலருக்குப் போய்ச் சேர்ந்தது.
காதலருக்குப் படிக்கத் தெரியாது. எனவே கடிதம் கொண்டு வந்த இளைஞரைப் படிக்க வேண்டினார். இளைஞர் படித்துக் காட்டினார். குறிப்பிட்ட ஒரு நாளில் அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் மண்டபத்திற்கு இரவு வருமாறு அவள் வேண்டியிருந்தாள். காதலர் வரவேண்டும் என்று எழுதியிருந்த குறிப்பைப் படித்தவர் மாற்றி எக்காரணம் கொண்டும் அந்த இடத்திற்கு அந்த நாளில் வரவேண்டாம் என்று படித்துக் காட்டிவிட்டார். என் காதலரும் நம்பிவிட்டார்.
குறிப்பிட்ட அந்த நாள் நடு இரவில் நான் அங்குச் சென்றேன். மண்டபத்தின் ஓரத்தில் ஒரு தூணில் அவர் சாய்ந்திருந்ததைக் கண்டேன். ஆசையோடு சென்று அணைத்தேன். அப்போதுதான் தெரிந்தது அவர் என் உண்மையான காதலர் அல்லர் என்பது.
என் கடிதத்தை எடுத்துச் சென்ற ஆள், படிக்கத் தெரியாத என் காதலருக்கு வரக்கூடாது என்று நான் எழுதியிருப்பதாகப் பொய் சொல்லி, அவரே நேரில் வந்து மறைந்து அமர்ந்திருக்கிறார். நடந்த இந்நிகழ்வை அறியாத நான் அவரைக் கட்டித் தழுவிட்டேன். அந்த மன உளைச்சல் தாங்காமல் இந்த மண்டபத்தில்தான் நான் தற்கொலை செய்துகொண்டேன்.'
இந்தக் கதை உண்மையோ இல்லையோ அரச குடும்பத்தில் கூட படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர் என்று ஊகிப்பதற்கு ஒரு சான்றாகும். ஆண்ட அரசர்கள் பொதுமக்களுக்குக் கணக்கு, எழுத்து முதலான அடிப்படைப் பாடங்களைக் கற்பிக்கப் பொதுமுயற்சி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
இத்தகு முயற்சி இல்லாத தமிழகத்தில் முதல் முதல் பள்ளிக்கூடம் ஒன்றைத்
தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக்காயல் என்ற இடத்தில் கத்தோலிக்கத் துறவி தவத்திரு ஹென்றிக் அடிகளார் கி.பி. 1567இல் தோற்றுவித்ததாகத் தெரிகிறது.
இதன் பின்பே ஐரோப்பியர் காலத்தில் ஆங்காங்கே பள்ளிகள் பெருகின. தொடர்ந்து அவர்கள் ஆட்சியிலேயே பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தோற்றுவிக்கப்பட்டன. தொடக்க காலங்களில் கல்வி பயிற்றுவிக்கும் முயற்சி ஆடவர் அளவிலேயே நின்றது.
பெண்கள் படிக்கவில்லை. பள்ளிக்கோ இன்ன பிற கல்விக்கூடங்களுக்கோ செல்லவில்லை. பெண் புலவர்களும் ஆண்டாள், புனிதவதி முதலான பெண் கவிஞர்களும் நிறுவன வழி கற்றதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் முயற்சியில் கவிஞராக உயரும் அளவுக்குக் கற்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கல்வி தொடர்பாக தமிழரிடம் போதிய எச்சரிக்கை உணர்வு இல்லாமையால்தான் வெள்ளைக்காரர்கள் வருகையின்போது பத்து சதவீத மக்களே கற்றவர்களாக இருந்தனர்.
இதை முன்னோக்கி எடுத்துச் சென்றால், கி.பி. தொடங்கி வெள்ளைக்காரர்கள் பள்ளி தோற்றிவத்த 16ஆம் நூற்றாண்டு வரை கல்லாத மக்களே மிகுதியாக இருந்தமையால் எளிதாக வேறு வேறு அயல்நாட்டார்க்கு அடிமையாயினர்.
நம்மை நம் அரசர்கள்தான் ஆளவேண்டும் என்ற கோட்பாடு இவர்களிடம் தோன்றவில்லை. மறுதலையாக யார் ஆண்டால் என்ன என்ற போக்கே வளர்ந்திருந்தது.
அதனால்தான் "இராமன் ஆண்டால் என்ன, இராணவன் ஆண்டால் என்ன' என்ற பழமொழி தமிழில் தோன்றி நிலைபெற்றிருந்தது.

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com