திரையரங்குகளில் எதற்காக?

திரையரங்குகளில் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும், அப்போது தேசியக் கொடியையும் காட்ட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு,

திரையரங்குகளில் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும், அப்போது தேசியக் கொடியையும் காட்ட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு, தேசப்பற்று உள்ளோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்றாலும் இதைவிட இன்னும் சற்று ஆழமான முடிவை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.
திரையரங்குகளில் திரைப்படம் பார்த்த காலங்கள் எல்லாம் மலையேறி விட்டன. மேலும் தற்போதுள்ள நவீன திரையரங்குகள் எல்லாம் சுமார் 50 அல்லது 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகவும் சிறியவைகளாகவே உள்ளன.
அவற்றுக்கெல்லாம் மேலாக, அண்மைக்காலங்களில் 10 முதல் 30 சதவிகித மக்கள் கூட திரையரங்குகளில் படம் பார்ப்பதில்லை, இளைஞர்கள்தான் அதிகளவில் பார்க்கின்றனர். அதிலும் அவரவர் விரும்பும் நாயகன், நாயகிகளுக்காக திரைப்படம் வந்த சில நாட்களுக்கு மட்டும் திரையரங்கில் கூட்டம் இருக்கும்.
ஒரு திரைப்படம் 10 நாட்கள் திரையரங்கில் திரையிடுவது சாதனையாகிவிட்டது. அப்படியிருக்க எத்தனை பேர் திரையரங்குகளில் படம் பார்க்க முடியும்?
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சற்று யோசித்து, பள்ளி கல்லூரிகளில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கண்டிப்பாக தினசரி இசைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தால் அதுதான் மிக சரியான தீர்வாக இருந்திருக்கும்.
பள்ளிகளில் தேசிய கீதம் இசைப்பதுதான் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதே, ஏன் மறு உத்தரவு? என பலரும் சிந்திக்கலாம். நடைமுறையில் உள்ளது உண்மைதான், ஆனால் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதுதான் கேள்வி?
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,28,55,485 பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 53,722 ஆகும். (அரசு தொடக்கப் பள்ளிகள் 34, 180, நடுநிலைப்பள்ளிகள் 9, 938, உயர் நிலைப்பள்ளிகள் 4, 574, மேல் நிலைப்பள்ளிகள் 5,030) உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசுப் பள்ளிகளில் மட்டுமே தினசரி காலை நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. மற்ற பள்ளிகளில் 95 சதவிகிதத்துக்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதே இல்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்னர் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது மட்டுமாவது தனியார் பள்ளிகளில் இவற்றை இசைத்து வந்தனர். ஆனால் தற்போது 95 சதவிகித பள்ளிகளில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் நடைபெறுவதே இல்லை என்பது வேதனையானது.
இவற்றை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை என்பது அதைவிட கொடுமையானது. அந்தளவுக்கு அதிகாரிகளிடம் தேசப்பற்று இருக்கிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூற்றுகளில் மிக முக்கியமானது, தொடக்கப் பள்ளிகளிலேயே மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்பது.
நல்ல மாணவர்களையும், நல்ல தேசத்தையும் உருவாக்கும் பொறுப்பு தொடக்கப்பள்ளி ஆசியர்களிடம் உள்ளது என்றார். ஆனால் அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், எப்படி தேசப்பற்றை வளர்க்க முடியும்? அரசுப் பள்ளிகள் தவிர வேறு எந்த தனியார் தொடக்கப் பள்ளிகளிலும், ஏன், எந்த தனியார் (நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை) பள்ளிகளிலும் தேசியகீதம் இசைக்கப்படுவதே இல்லை.
தேசிய கீதமே இசைக்கப்படவில்லை என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ? ஆறாம் வகுப்புக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தேசியகீதம் என்றால் என்ன? எனக் கேட்கும் நிலை உள்ளது.
வரலாறு மறைக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தேசிய கீதமே மறக்கடிக்கப்பட்டு வரும் நிலை தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் நிலவுகிறது.
ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் தங்கள் நிறுவன உரிமையாளர் சார்ந்த மதம் தொடர்பான வாழ்த்துப் பாக்களை மட்டுமே பிரேயர் என்ற பெயரில் தினசரி காலை வேளையில் இசைக்கின்றனர். அவையும் ஆங்கிலத்தில் மட்டுமே இசைக்கப்படுகின்றன. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது எந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலும் கிடையவே கிடையாது.
தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்றவையும் தங்களது நிறுவனம் சார்ந்த வாழ்த்துப்பாவை நிகழ்ச்சிகளின் போது இசைக்கின்றனர்.
உதாரணமாக லயன்ஸ் சங்கங்கள், ரோட்டரி உள்ளிட்ட தொழிற் சங்கங்களும் தங்களுக்கென தனி வாழ்த்துப்பா (பிரேயரை) இசைக்கின்றனர். தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இசைப்பது நிகழ்ச்சிகளின்போதும் முற்றிலும் மறைந்து வருகின்றது. அரசு விழாக்களின்போது மட்டுமே ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கப்படுகின்றது (யாரும் பாடுவதில்லை).
எனவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவை முதலில், பள்ளிகள் பக்கம் திருப்பினால் பயனுள்ளதாக இருக்கும். அல்லது, இந்த நீதிமன்ற உத்தரவை முன்னிலைப்படுத்தி ஆட்சியாளர்கள், அதிகாரிகளாவது, அவரவர் அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய உறுதிமொழி, தேசிய கீதம் ஆகியவற்றை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிவற்றை போற்றி, உரிய மரியாதை கொடுத்து கொண்டாட வேண்டும். இவற்றை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com