மதிநுட்பமும் செயலாக்கமும்

இந்திய போலீஸ் அயர்லாந்து போலீஸ் அமைப்புப்படி உருவாக்கப்பட்டது என்றாலும் "விந்திய மலைக்கு தெற்கே திராவிட நாட்டில் காலம் காலமாக கிராமங்களில் இயங்கிவரும் கிராம முன்சீப் தலையாரி கீழ் சட்டம் ஒழுங்கு
மதிநுட்பமும் செயலாக்கமும்

இந்திய போலீஸ் அயர்லாந்து போலீஸ் அமைப்புப்படி உருவாக்கப்பட்டது என்றாலும் "விந்திய மலைக்கு தெற்கே திராவிட நாட்டில் காலம் காலமாக கிராமங்களில் இயங்கிவரும் கிராம முன்சீப் தலையாரி கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முறைதான் இந்திய போலீசுக்கு வலிமை சேர்க்கிறது' என்று 1909-ஆம் வருட அரசிதழில் (கெஜட்) குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமுறை வழி கிராம நிர்வாக அலுவலர் நியமனம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டாலும் கிராம கண்காணிப்பு ஆளுமையில் மாற்றமில்லை.
முன்னேறிச் செல்லும் மார்க்கம் எவ்வாறு இருந்தாலும் அடிப்படை வழியை மறக்கலாகாது என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு காவல்துறை தலைவர்கள் வருடாந்திர மாநாடு ஹைதராபாத் இந்திய காவல் உயர் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.
1960-களிலிருந்து தொடர்ந்து நடத்தப்படும் காவல்துறை தலைவர்கள் மாநாடு தில்லியில்தான் நடக்கும். ஆனால் 2014-இல் இருந்து வெவ்வேறு மாநிலங்களில் மாநாடு கூட்டப்படுகிறது. முதலில் குவஹாட்டி, அடுத்து குஜராத் மாநிலம்
கட்ச், இந்த வருடம் ஹைதராபாத். இந்திய போலீஸ் ஸ்மார்ட் போலீசாக பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்று பிரதம மந்திரி குவஹாட்டி மாநாட்டில் அறிவுறுத்தினார்.
கண்டிப்பு அதே சமயம் கனிவு, நவீனம், துரிதம், விழிப்பு, நியாயம், நம்பகத்தன்மை, சுறுசுறுப்பு, ஒத்துணர்வு போன்ற குணங்கள் காவல்துறைக்கு இன்றியமையாதவை. நவீனமயமாக்குதல் ஒருபுறம் இருக்க அடிப்படை பயிற்சி தொடர் சீரமைப்பு காவல் மேன்மைக்கு அவசியம் என்பதை இந்த வருட ஹைதராபாத் மாநாட்டில் பிரதம மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
அதனால்தான் இந்த வருட மாநாடு பயிற்சி மையத்திலேயே நடத்தப்படுகிறது. மலரும் நினைவுகள் போல் பங்கேற்கும் உயர் அதிகாரிகளுக்கும் அந்த பயிற்சி நாட்கள் ஞாபகம் வரும்.
ஐ.பி.எஸ். பயிற்சி மிக கடுமையான பயிற்சி. தங்கத்தை புடம் போடுவது போல் கல்லூரி முடித்து வரும் சாதாரண இளஞரை, சவால் நிறைந்த துறையில் பொறுப்பேற்க, அசாதாரண அதிகாரியாக தயார் செய்யும் களம். பயிற்சியின் போது பொறுக்க முடியாத மெய்வருத்தம் இருந்தாலும் அதன் பயன்பாடும் அளிக்கும் உடல் மன உறுதியை உணராதவர் இருக்க முடியாது.
பழைய காவல்கார் முறையில் ஒரு கிராமத்தில் திருடு அல்லது வேறு அசம்பாவிதம் ஏற்பட்டால் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரி பொறுப்பேற்று சம்பந்தப்பட்டவரை பிடித்து பொருளை மீட்டுக் கொடுக்கவேண்டும்.
குற்றவாளி எந்த கிராமத்தை சேர்ந்தவரோ அந்த கிராம அதிகாரி பொருள் இழப்பை ஈடு செய்ய வேண்டும். அதற்கு அந்த கிராம மக்களிடம் வசூல் செய்து இழப்பு ஈடு செய்யப்படும். ஒரு விதத்தில் ஒரு கிராம மக்களின் நன்னடத்தை எல்லோருடைய கூட்டுப் பொறுப்பாக கருதப்பட்டது.
ஒழுங்குமுறை காவல் பணி ஆங்கிலேயர் ஆட்சியில் அமலுக்கு வந்தபோது கொடுங்கோல் ஆட்சியின் அடையாளமாக காவலர்கள் கருதப்பட்டனர். ஒரு இடத்தில் பிரச்னை என்றால் ஒரு சில காவலர்களே சமாளிக்க முடிந்தது.
"ஒரு ஏட்டையாவின் தொப்பியும் லத்தியும் அனுப்பினாலே போதும் கலகம் செய்ய நினைப்பவர்கள் ஓடி விடுவார்கள்' என்று விளையாட்டாக சொல்வார்கள். அதில் உண்மையும் இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறில்லை.
சுதந்திர இந்தியாவில் காவல் துறையின் அணுகுமுறை மாற்றம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. மக்களிடம் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. ஒரு புறம் குற்றவாளிகள் குற்றம் புரிவதற்கு நூதன முறைகளை கையாளுகின்றனர், மறு புறம் எல்லா காவல் நடவடிக்கைகளையும் எல்லாதரப்பினரும் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். காவல் பணியின் சுமை கூடிக்கொண்டே போகிறது. காவலன் எதையும் தாங்கும் இதயத்தோடு சுமையை சுமக்கிறான்.
காவல்துறை சீர்திருத்தம் பற்றி மாநாட்டில் விவாதிக்கையில் மேலே குறிப்பிட்ட பணி சுமையின் தாக்கத்தை உணர்ந்து குற்றவியல் நடைமுறை சிக்கல்களை எளிமை படுத்த வேண்டும்.
தமிழ் நாட்டின் முதல் காவல்துறை தலைமை இயக்குனராக (டி.ஜி.பி.) 1977-இல் பொறுப்பேற்ற ஆங்கிலோ இந்தியரான எரிக் ஸ்ட்ரேசி காலையில் சைக்கிளில் காவல் நிலையங்களுக்கு திடீர் விஜயம் செய்வார். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்தால் உடனே விசாரித்து விடுவிக்க உத்தரவிடுவார். காவல் நிலைய அதிகாரி ஜாமீனில் விட முடியாத வழக்குகளிலும் ஜாமீனில் விட வேண்டும் என்று கண்டிப்பாக கூறுவார்.
இதன் மூலம் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் குறையும். நீதிமன்ற நேரம் விரயமாகாது. வழக்குகளில் சந்தர்ப்ப வசத்தால் சிக்கும் ஏழை மக்களுக்கு கோர்ட், கேசு என்று பணமும் நேரமும் செலவிட வேண்டிய நிலை இருக்காது.
சட்டம் - ஒழுங்கு உடனடி பாதிப்பில்லாத வழக்குகளில் காவல் நிலையங்களிலேயே ஜாமீனில் விடும் முறை காலப்போக்கில் மாறி விட்டது. பல காவல் நிலைய அதிகாரிகள் நமக்கேன் வம்பு என்று எல்லா வழக்குகளிலும் நீதி மன்ற காவலுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
சண்டையிடும் இரு தரப்பினரும் வழக்கை வாபஸ் பெற்றாலும் விடுவதில்லை. கட்ட பஞ்சாயத்து என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக எல்லாமே நீதிமன்ற ஆளுகைக்கு விடப்படுகின்றன. இங்கு தான் உயர் அதிகாரிகள் தலையிட்டு நேர்மையான காவல் வழி முறைகளை செயல் படுத்த வேண்டும்.
"ஆல்டர்நேட் டிஸ்ப்யூட் ரெசலூஷன்' எனப்படும் சச்சரவுகளுக்கு மாற்று தீர்வு முறை கையாளப்பட வேண்டும். இதன் மூலம் காவல் பணி சுமை குறையும். நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளும் விரைவில் பைசலாகும்.
உயர் அதிகாரிகள் காவல்நிலையம் ஆய்வு செய்கையில் அநாவசியமாக தாமதப்படுத்தப்படும் வழக்குகளை முடிவிற்கு கொண்டுவர உத்தரவு இட வேண்டும். இத்தகைய சிறுசிறு நடவடிக்கைகளும் காவல்துறை சீரமைப்பில் முக்கியம்.
காவல்துறை நவீனமயமாக்கலில் உள்ள சிக்கல்களையும் மாநாட்டில் விவாதிப்பது அவசியம். எந்தெந்த பொருள்களை வாங்குவது அதனால் எத்தகைய குறுகிய மற்றும் நீண்ட கால பயன் என்பது ஆராயப்பட வேண்டும். தேவையோ தேவையில்லையோ ஏதோ ஒரு உபகரணம் வாங்கப்படுகிறது. பல நேர்வில் அவை உபயோகிக்காமல் பாழாகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இன்றைய கண்டுபிடிப்பு நாளை பழையதாகிவிடுகிறது. மேலும் பல யுக்திகளுடன் புதிய படைப்பு உருவாகிறது. கணினி தளங்களில் இது சர்வ சாதரணம்.
மேலை நாடுகளில் காவல்துறைக்கு உகந்த கருவிகள் பற்றிய ஆய்வு நடத்தப்படுகிறது. உபயோகப்படுத்தும் காவல் அமைப்புகளில் எந்த அளவு அதன் பயனளிப்பு உள்ளது என்பதை கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்களோடு மற்றவர்கள் அதனை தத்தம் துறையில் நடைமுறை படுத்துகிறார்கள்.
நமது நாட்டிலும் மத்திய அரசில் பி.பி.ஆர்.டி. என்ற காவல் ஆராய்ச்சி மேம்படுத்தல் வாரியம் செயல்படுகிறது. இந்தியா மற்றும் உலக நாடுகள் உட்பட உள்ள காவல் துறைகளில் செயல்படுத்தப்படும் மற்றும் செயல் படுத்தக்கூடிய யுக்திகளை ஆராய்ந்து இந்த வாரியம் தனது பரிந்துரையாக அளிக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் மாநிலங்கள் தாந்தோன்றித்தனமாக வெறும் வாகனங்கள், கணினி, தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கி முடித்துக்கொள்கிறார்கள்.
கணினி தட்டச்சு சாதனமாக உபயோகமாகிறது. கணினி மூலம் செய்யக்கூடிய பல பயன்பாடுகள் பற்றிய புரிதல் இல்லாமலே விலை உயர்ந்த அந்த சாதனம் வீணாகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்சி செய்தும் சென்னையில் கேமரா பொருந்திய கண்காணிப்பு திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இன்னும் தீரவில்லை. எத்தகைய தொழில் நுட்பம் உகந்தது என்பதில் பல் வேறு யோசனைகள். ஒன்றை தெரிவு செய்வதற்குள் அதைவிட சிறந்த தொழில் நுட்பம் உள்ளது என்ற கருத்து கொடுக்கப்படுகிறது. டெண்டரில் போட்டியிட்டவர்கள் கோர்ட்டிலும் வழக்கு தொடர தயங்குவதில்லை. செயலாக்கம் முடக்கப்படுகிறது.
சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலே ஆகியும் காவல் நிலையங்களை மக்கள் பயமின்றி அணுகக்கூடிய நிலை இன்னும் வரவில்லை. குற்றம் புரிந்தவர்கள் காக்கிச்சட்டையை பார்த்து பயப்பட வேண்டும். சாதாரண மக்கள் நண்பர்களாக காவலனை பாவிக்க வேண்டும். ஆனால் நேர் மாறாக இருக்கிறது.
சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற உணர்வு போய்விட்டது. காவல் அமலாக்கம் வெற்றியடைய மக்களின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. இத்தகைய அணுகுமுறை தான் காலத்தின் தேவை என்று லண்டன் பெருநகர காவல் துறை ஒப்புதலோடு காவல் பணி என்ற திட்டத்தை வகுத்துள்ளது.
மேலும் இன்னும் பத்து வருடங்களில் போலீஸ் சந்திக்கக்கூடிய சவால்கள் எவ்வாறு இருக்கும், அதற்கு எத்தகைய பயிற்சி கட்டமைப்புகள் தேவை என்பதை உயர் அதிகாரிகள் விவாதிக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரிகள் மாநாடு வருடம் ஒரு முறை சந்தித்து பிரிவது மட்டுமின்றி, தொடர் சீரமைப்பு, காவல் கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
உத்வேகம் காவலுக்கு அவசியம். நியாயத்தை செய்தால் எந்த வித எதிர்ப்பையும் விமர்சனங்களையும் எதிர் கொள்ளலாம்.
சுவாமி விவேகானந்தர் கூறுவார்:
என்னை நேசித்தாலும் நிந்தித்தாலும் எனக்கு உடன்பாடுதான். என்னை நேசித்தால் உன் இதயத்தில் இருப்பேன்; என்னை நிந்தித்தால் நான் உன் மனதில் இருப்பேன்.
இந்த கருத்து காவல் துறைக்கு சாலப்பொருந்தும்!

கட்டுரையாளர்:
சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com