நீதிபோதனை வகுப்பு வேண்டும்

இன்று சமுதாயத்தில் மக்களில் பலரும், செல்வமும் கல்வியறிவும் பெற்றுவிட்டால், தமக்கு நிகர் யாருமில்லை என்று எண்ணி,

இன்று சமுதாயத்தில் மக்களில் பலரும், செல்வமும் கல்வியறிவும் பெற்றுவிட்டால், தமக்கு நிகர் யாருமில்லை என்று எண்ணி, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மறந்து, தம் மக்களின் நேர்மையான எதிர்காலத்தை எண்ணாமல், தம்மைத் தாமே வியந்து, தற்பெருமைப் பேசித்திரிந்து, தருக்குடன் வாழ்ந்து வருகின்றனர். செயற்கரிய செயல்கள் செய்து புகழ் பெற விரும்பவில்லை.
பெற்றோர்களைப் பிள்ளைகள் மதிப்பதில்லை. பிள்ளைகளிடம் பெற்றவர்கள் அன்புகாட்டி, அவர்கள் திறமையை ஊக்குவிக்க முற்படவில்லை. இதனால் பிள்ளைகள், மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களையும், அறிவார்ந்த பெரியோரையும் மதிப்பதில்லை. மதிப்புகளையும், மரியாதைகளையும் தருவதும், பெற்றுக் கொள்வதும் ஒருவர்பால் அமைந்துள்ள அடக்கமென்னும், உயர்பண்பே.
"அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பது வள்ளுவர் வாக்கு. தன் கைப்பொருளால் உலகையே விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நினைப்பு பலருக்கு அமைந்துள்ளது. தனக்கு நிகரில்லை என்ற ஆணவம், செருக்கு தன்னை அழிவுப்பாதையிற் செலுத்திவிடும் என்பதை அறியவில்லை.
தன் பெருமையைத் தானே அறியாமல், பணிவும், இன்சொல்லும் உடையவனாய்ப் பேசுகின்றவனே இறைநிலைக்கு உயர்த்தப்படுகின்றான்.
கருவிலே திருவுருதல் என்பர். குழந்தை தாயின் மணி வயிற்றில் உருவாகி இருக்கும்போதே அறிவும் உருவாகிறது. சுமார் ஐந்து வயதாகும்போதே பின்நாட்களில் ஒருவர் வாழ்வதற்கு எத்தகைய அறிவு வேண்டுமோ, அத்தனை அறிவும் வளர்ந்து விடுகிறது என்பர் உளவியலாளர்.
உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் ஒருங்கே அமைந்து இணையாக வளர்ந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வு அமையும். பெற்றோர்கள் பங்கு இங்கு முதலிடம் வகிக்கிறது. செல்வந்தர்களோ தம்குழந்தைகளைப் பணிப் பெண்களிடம் ஒப்படைத்துவிட்டு, மகளிர் சங்கம் சென்று, குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்று பட்டிமன்றம் நடத்துகின்றனர்.
ஐந்து வயதாகும்வரை அவர்கள் உள்ளத்தின் போக்கைப் புரிந்து கொள்வதில்லை. அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கும் அவர்களுக்காக அரைமணி நேரம் ஒதுக்கி, அவர்கள் குறைகளைக் கேட்டு அறிவதில்லை. பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்து விட்டால், பெற்றோர்கள் எல்லோருமே பிள்ளைகளை அடித்தும், மிரட்டியும் திருத்த முயல்கின்றனர்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் வசைச் சொல்லுக்கும் அஞ்சி, தற்கொலை செய்து கொள்ள பல மாணவர்கள் முயல்வதைப் பார்க்கிறோம். சிலர் உயிரைப் போக்கியும் கொள்கின்றனர். தன்னைச் சூழ்ந்துள்ள பிள்ளைகளின் மனக்குறிப்பை அறிந்துகொள்ள மறந்தால் இறுதியில் தீராத்துயரில் ஆழ்ந்துவிடும் நிலைமை பெற்றோர்கட்கு ஏற்படுகின்றது.
ஆசிரியர்கள்பால் மாணவர்கள் கொள்ளும் அச்சமும் இந்நிலைக்கு ஒரு பெருங்காரணமாகும். இப்போக்கைத் தவிர்க்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் இனிய வகையில், நீதிக் கதைகள் கூறி தங்கள் பிள்ளைகளைத் திருத்தி நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம்.
தேசத்தந்தை காந்தியடிகள் போன்ற உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறி அவர்கட்குப் படிப்பில் ஆர்வத்தை ஊட்டி, நற்பெயரெடுக்க வழிவகைகள் செய்யவேண்டும்.
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகள் பதினைந்து வயது வரை தம் ஆசிரியர்கள் கூறுவதை மறைமொழியாகக் கொள்வர். பெற்றோர்களிடம் அதிக உரிமைகளை எடுத்துக்கொள்வர். அக்காலக்கட்டங்கள்தான் அவர்களை நல்வழியிற் கொண்டுசெல்ல ஏற்ற காலம்.
தனக்கு நான்கு தலைமுறைகட்கு வேண்டிய செல்வம் உள்ளது. தான் நிரம்பப்படித்தவன என்று சிலர் செல்வமிகுதியால, கல்விப் பெருக்கால் ஆணவம், செருக்கு கொள்கின்றனா. இவற்றை ஒழித்து. செல்வம், இளமை நிலையற்றன என்பதை மனத்திற் கொள்ளாவிடில், பெருமைகள் குன்றிவிடும். அற்கா இயல்பிற்றுச் செல்வம் என்றார் திருவள்ளுவர்.
செருக்குடன் வாழ்ந்த துரியோதனனுக்கு நூறு பேருக்கு அண்ணன் என்ற பெருமையும் குன்றி குலமே அழிந்துவிட்டது. அழுக்காற்றால் அதர்ம வழியில் நடந்துகொண்டான். தர்மம்தனை சூது கவ்வியது. இறுதியில் தருமமே வென்றது. மகாபாரதம் போன்ற நல்ல நெறிகளை எடுத்துக்கூறும் கதைகளை வகுப்பில் கூறவேண்டும்.
நீதிபோதனை வகுப்புகள் அக்காலத்தின் பள்ளிகளில் வழக்கில் இருந்தன. பெற்றோரும் பிள்ளைகளும் கலந்துரையாட நேரம் இருந்தது. இக்காலத்தில் அம்முறைகளை அருகிவிட்டன. திருக்குறள் தமிழகம் உலகுக்கு வழங்கிய கொடை. அள்ளக் குறையாத அமிழ்தம். உலகப் பொதுமறையைக் கட்டாயப் பாடமாக பள்ளிகளில் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் இன்னும் இவ்வாணை நடைமுறைக்கு வரவில்லை.
குறட்பாக்களையும் பயிற்றுவித்தால் மாணவர்கட்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும். திருக்குறள் தொடாபான நீதிக்கதைகளை எடுத்துக்கூறி தேர்வுகள் வைத்து மதிப்பெண்கள் கொடுக்கும் முறை கொண்டுவர வேண்டும். அரசு இதில் தலையிட்டு பாடத்திட்டக் குழுவில் திருக்குறள் அதிகாரங்கள் அனைத்தையும் இணைப்பதற்குத் தக்க அறிஞர்களைக் கொண்டு வகுப்புகளுக்கு ஏற்ற குறட்பாக்களைச் சேர்க்கச் செய்ய வேண்டும்.
திருக்குறளில் இல்லாத நீதிகள் எங்கும் இல்லை. இவ்வழி வகைகளை ஆராய்ந்து விரைந்து செயற்பட்டால் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிட்டும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com