வேண்டாம் பிளாஸ்டிக்

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 முதல் நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத் தளங்கள், நினைவுச் சின்னங்களில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 முதல் நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத் தளங்கள், நினைவுச் சின்னங்களில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருள்களும், அதன் கழிவுப் பொருள்களுமே. எனவேதான் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக பாலிதீன் பைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பிற வகையாலான பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
உலகளவில் ஆண்டுக்கு 50,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரையிலான அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக ஒவ்வொரு தனிமனிதனும் தலா 150 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாகவும், இவற்றில் பெரும்பாலானவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படுபவை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மொத்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமானது பாலிதீன் பைகள் தான். ஒரு பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படும் நேரம் சராசரி 20 நிமிடங்கள்தான். ஆனால் அவை மக்குவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.
பிளாஸ்டிக் கழிவுகள் நிலவளத்தை பாதிக்கின்றன. குறிப்பாக விவசாய நிலங்களில் பரவிக் கிடக்கும் பாலிதீன் கழிவுகளானது, மண்ணில் நீர் இறங்குவதைத் தடுப்பதுடன், காற்று பரவுவதையும் தடுக்கின்றன. இதன் காரணமாக மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
அதுபோல் பாலிதீன் பைகளால் வனப் பகுதியும் பாதிப்படைகின்றது. பயன்படுத்திய பின் சாலையில் வீசியெறியப்படும் பாலிதீன் பைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வனப் பகுதிகளில் குவிகின்றன. இவற்றை அங்குள்ள மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள் உட்கொள்கின்றன.
இதனால் பாதிக்கப்படும் அவை இறக்க நேரிடுகின்றது. மேலும் காடுகளில் உள்ள மண்வளத்தை பாலிதீன் பைகள் கெடுப்பதுடன், மழை, பெய்யும்போது நீரை மண்ணுக்குள் உறிஞ்ச விடாமலும் தடுக்
கின்றன.கடற்கரை நகரங்களில் வசிப்பவர்களாலும், கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வருவோராலும் வீசியெறியப்படும் பாலிதீன் பைகள் கடலுக்குள் சென்று சேர்கின்றன. நீர்நிலைகள் கடலில் வந்து சேரும்போதும் அவற்றின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்கு வருகின்றன.
பிளாஸ்டிக் பைகள் காற்றின் மூலமும் கடலில் சேர்கின்றன. இவற்றை உட்கொள்ளும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பெயின் நாட்டு கடற்கரை பகுதி ஒன்றில், 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. உயிருடன் இருந்த அத்திமிங்கலத்தை, மீண்டும் கடலுக்குள் விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாமல் போனது. திமிங்கலமும் இறந்து போனது.
அந்த திமிங்கலத்தின் உடலை பரிசோதித்தபோது, அதன் குடல் பகுதியில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு திமிங்கலம் போன்ற பெரிய கடல்வாழ் உயிரினங்கள் இறந்து மிதப்பது அல்லது கரை ஒதுங்குவது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக அமைகிறது.
குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வெளியேற்றுவோர் மிகவும் குறைவு. இதனால் குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. அங்கு குப்பைகள் எரிக்கப்படும்போது, பிளாஸ்டிக், பாலீதீன் கழிவுகளும் சேர்ந்து எரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும்போது, அவற்றிலிருந்து டையாக்சின் என்ற கொடிய நச்சுவாயு வெளியேறுகிறது. டையாக்சின் என்பது 75 வேதிப் பொருள்கள் அடங்கிய தொகுப்பின்
பெயராகும். இந்த டையாக்சினால் ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். உலகப் புற்றுநோய் ஆய்வுக் கழகம் டையாக்சினை ஒரு புற்றுநோய் காரணி என அடையாளம் கண்டுள்ளது.
கால்வாய்களில் அடைத்துக் கொள்ளும் கழிவுப் பொருள்களில் பெரும்பாலானவை பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்கள், டம்ளர்கள் இவைதான். முறையாக அப்புறப்படுத்தப்படாத இந்த பாலிதீன் பைகளால் மழைநீரும், கழிவுநீரும் சாலையில் குளம்போல் தேங்கும் நிலை உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அதன்பின் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வந்து விட்டது.
தற்போதுகூட பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை, சணல் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல் கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்கின்றனர்.
பாலிதீன் பைகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதோ, அவற்றை கடைகளுக்கு விநியோகிக்கும் மொத்த விற்பனையாளர் மீதோ நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. உற்பத்திக்குத் தடைவிதித்தால் மட்டுமே பாலிதீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com