கொசுக்கள் ஜாக்கிரதை

உலகளவில் கொசு வகைகளின் எண்ணிக்கை 3500-க்கும் அதிகம். இதில் 80 வகை கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சும் திறன் படைத்தவை.

உலகளவில் கொசு வகைகளின் எண்ணிக்கை 3500-க்கும் அதிகம். இதில் 80 வகை கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சும் திறன் படைத்தவை. ஆண் கொசுக்கள் விலங்கு மற்றும் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சாது. ஆண் கொசுக்களின் ஆயுள் காலம் 10 முதல் 20 நாட்கள்தான். ஆனால், பெண் கொசுக்களின் ஆயுள் காலம் 3 முதல் 100 நாட்கள்.
கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய ரத்த உறிஞ்சுக் குழல் உண்டு. கொசுக்கள், விலங்கு மற்றும் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதோடு பல நோய்களையும் பரப்பி விடுகின்றன.
டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல், யானைக்கால் நோய் முதலிய நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன. மழைக் காலத்தில் சந்திக்கும் முக்கிய பிரச்னை இந்த கொசுத் தொல்லைதான்.
கொசுக்கள் 50 அடி தொலைவிலேயே மனிதர்களின் வாசத்தை அறியும் திறன் படைத்தவை. மனிதர்கள் வெளியிடும் மூச்சு காற்றையும், வியர்வையையும், மனித உடலின் மணத்தையும் கொசுக்கள் தங்கள் உணர்வறி உறுப்புகள் மூலம் உணர்ந்து கொள்கின்றன.
மேலும், அவை யாரை கடிக்க வேண்டும் என்பதை மோப்ப சக்தி மூலமும் கண்டறிகின்றன. கொசுக்கள் வண்ண ஆடைகள் (குறிப்பாக சிவப்பு ஆடைகள்) அணிந்திருப்பவர்களையும், மது அருந்தியிருப்பவர்களையும் எளிதில் கண்டறிந்து அவர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சி நோய்களைப் பரப்பும்.
இதற்குக் காரணம் அந்த ஆடைகள் வெளியிடும் மணம், மதுவின் நாற்றம் ஆகியவை அவற்றிற்கு ஈர்ப்பை தருகின்றன. பெண் கொசுக்கள் ஒரே சமயத்தில் 100 முதல் 300 முட்டைகள் இடும். அவை வாழ்நாளில் 1000 முதல் 3000 முட்டைகள் வரை இடுகின்றன. 16 மணி நேரத்திற்குள் முட்டைகள் பொரிந்து விடும்.
கொசுக்களுக்கு புகலிடம் ஆங்காங்கே தேங்கும் தண்ணீர்தான். வழக்கமாக தேங்கியிருக்கும் கழிவு நீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகும். ஆனால், ஏடிஎஸ் வகை கொசுக்கள் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரிலும் உற்பத்தியாகும்.
சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகளில் இந்த வகையான கொசுக்கள் அதிகம் காணப்படும். தேங்காய் சிரட்டைகள், நெகிழிக் குழாய்கள், தேநீர் கோப்பைகள், பால் பைகள், பழைய பாத்திரங்கள், ஆட்டுக்கல், குப்பைக் கூளங்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.
டெங்கு காய்ச்சல் நோய் ஏ.டி.எஸ். கொசுக்களால்தான் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் குழந்தைகளையோ, முதியவர்களையோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையோ கடித்தால் அவர்களுக்கு உடனடியாக டெங்கு காய்ச்சலோ, மலேரியாவோ வரும்.
ஏ.டி.எஸ். கொசுக்கள் கடித்தால் உடல் வலியுடன், எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி உடல் வலி ஏற்பட்டால் டெங்கு காய்ச்சலின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்டுகளை சாப்பிடும்.
டெங்கு நோயுள்ள ஒருவரை கடித்து விட்டு மற்றொருவரை இக்கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் பரவுகிறது. இந்நோய் வராமல் தடுக்க பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரை மூடிய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 60 லட்சம் பேர் டெங்கு நோயால் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை 20 முதல் 30 லட்சம் வரை. மேலும், 20 கோடி மக்கள் இந்த நோய் தொற்றால் அவதிப்படுகின்றனர்.
2012-ஆம் ஆண்டில் 40,471 பேர் டெங்குவால் பாதிப்படைந்தனர். 2013-ஆம் ஆண்டு டெங்குவால் 75,808 பேர் பாதிக்கப்பட்டனர். 127 பேர் இறந்தனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் (2014-ஆம் ஆண்டு) 150 சதவீதம் அதிகம். கொசுவால் பரவும் இந்தக் காய்ச்சலால் கடந்த ஆண்டு தில்லியில்
60 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 2015-இல் 99,913 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. தில்லிக்கு அடுத்தபடியாக கேரளத்தில் 25 பேரும், மஹாராஷ்டிரத்தில் 23 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
2014-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்திய அரசு செலவிட்ட தொகை 6,753 கோடி ரூபாய். இது ஆண்டு தோறும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவிடும் தொகையைவிட அதிகம்.
கொசுக்கள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமானால் சுற்றுப்புறத்தை மழைநீர், கழிவுநீர் தேங்காமல் சுத்தமாக வைக்க வேண்டும். சாக்கடைகளை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும்.
வீட்டினுள் கொசுக்கள் வருவதைத் தடுக்க எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதன் மேல் கிராம்பை செருகி கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால் அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.
வேப்பெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை நாம் உடம்பில் தடவி கொண்டால் கொசுக்கள் அண்டாது. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சில துண்டுகள் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.
வீட்டின் முகப்பில் "நாய்கள் ஜாக்கிரதை' என்ற பலகை வைத்த காலம் போய், "கொசுக்கள் ஜாக்கிரதை' என்ற பலகை மாட்ட வேண்டிய காலம்
விரைவில் வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com