வகுப்புவாதமும் பொது சிவில் சட்டமும்!

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சைப் பொருளாகியிருக்கிறது. குடிமக்களின் உரிமையியல் தொடர்பான விஷயங்களில் நாடு முழுவதும்
வகுப்புவாதமும் பொது சிவில் சட்டமும்!

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சைப் பொருளாகியிருக்கிறது. குடிமக்களின் உரிமையியல் தொடர்பான விஷயங்களில் நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும் என்பதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். அது எவ்வாறு வகுப்புவாதத்துக்கு அடிபணிந்து முடக்கப்படுகிறது என்பதைக் காணும்போது வேதனை மிகுகிறது.
நமது நாடு குடியரசாகி, நமக்கென தனித்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 66 ஆண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், அரசியல் சாசனத்தின் 44-ஆவது ஷரத்தும், 37-ஆவது ஷரத்தும் கூறியபடி அனைத்து இந்தியர்களுக்கும் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது இன்னமும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இது நமது அரசியலமைப்பின் தோல்விக்கு அடையாளமாகும்.
1937-க்கு முன்னர்வரை சொத்து வாரிசுரிமைக்கான சட்டம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானதாகவே இருந்து வந்தது. வாரிசுரிமை விஷயத்தில் மட்டும் ஷரியத்தை (இஸ்லாமியர்களின் தனிச் சட்டம்) பின்பற்றாமல் வழக்கத்திலிருந்த வாரிசுரிமைச் சட்டத்தைப் பின்பற்றிய முஸ்லிம்கள், திருமணம் உள்ளிட்ட விஷயங்களிலும் பொது சிவில் சட்டத்துக்குத் தகுந்தாற்போல தங்கள் ஷரியத் சட்ட விதிகளை மாற்றிக் கொண்டிருக்கலாமே?
நாட்டிலுள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்துவிடக் கூடாது என்ற ராஜதந்திர நோக்கத்துடன் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், முஸ்லிம் லீகுடன் கைகோத்துக்கொண்டு, அவர்களுக்கு பிரத்யேகமான ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி, சட்டரீதியாக மக்களைப் பிரித்தார்கள்.
அதேசமயம், அரசியல் சாசனத்தின் 44-ஆவது ஷரத்து, இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிளவை சமன்படுத்தும் குறிக்கோளுடன் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறது. அந்த உத்தரவை இதுவரை ஆட்சியிலிருந்த அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டன.
பொது சிவில் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஆதரவாக இருந்தும்கூட, நமது அரசுகள் அதைப் புறக்கணித்ததுடன், 44-ஆவது ஷரத்துக்கு எதிரான சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து (1986), அரசியலமைப்பை அவமதித்து விட்டன.
பிளவுபடாத பாரதத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் 1937 வரை பொதுவான சொத்து வாரிசுரிமை சட்டத்தையே கடைப்பிடித்தனர். கேரளத்தில் நடைமுறையிலுள்ள "மருமக்கள் தாயம்' என்ற சொத்துரிமை இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக இருந்தது.
பஞ்சாப் மாகாணத்திலும் (இப்போதைய பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேசம்), வடமேற்கு மாகாணத்திலும் (தற்போதைய பாகிஸ்தான்) கூட இந்துக்களின் உள்ளூர்ச் சட்டங்களையே முஸ்லிம்கள் கடைப்பிடித்தனர்.
அவத் மாகாணம் (தற்போதைய உத்தரப் பிரதேசம்), ஆஜ்மீர் - மேர்வாரா (மேவாட்) மாகாணம் (தற்போதைய ராஜஸ்தான்) ஆகிய பகுதிகளிலும் இதுவே நடைமுறையாக இருந்தது. குஜராத்திலும் கட்ச் பகுதி மேமன்கள், ஹலாய் மேமன்கள், சன்னி போராக்கள், கோஜாக்கள், மோலிசலாம் கிராஸியாக்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் வழக்கத்திலிருந்த இந்து சட்டங்களையே பின்பற்றினர்.
சென்னை, மும்பை, கொல்கத்தா மாகாணங்களிலும், மத்தியப் பிரதேசத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள்கூட உள்ளூர் சட்டங்களையே பின்பற்றி வந்தனர். கட்ச் மேமன்களைப் பொருத்தமட்டிலும், அவர்களது புனித நூல் "தசாவதார்' ஆகும். அதிலுள்ள ஒன்பது அவதாரங்களும் இந்துக்கள் வழிபடும் அவதாரங்களே; பத்தாவது அவதாரம் மட்டுமே "புனித அலி' ஆவார்.
நிலைமை இப்படித்தான் சுமுகமாக இருந்தது. 1937-இல் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் படுதோல்வி அடைந்தபோதுதான் அதற்கு சிக்கல் வந்தது. இந்துக்களும், முஸ்லிம்களும் இருவேறு வகுப்பினர் என்ற வகுப்புவாதத்தைப் புகுத்திய முஸ்லிம் லீக், நாட்டு மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியது.
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, முஸ்லிம் லீகுக்கு உதவ, வழக்கத்தி
லிருந்த பொது சிவில் சட்டத்தை முடக்கி, முஸ்லிம் தனிநபர் சட்டத்தை 1937-இல் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு.
இருப்பினும், அந்தச் சட்டம், விவசாய நிலங்களுக்கு ஷரியத் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது. இப்போதும்கூட, மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் விவசாய நிலங்களைப் பொருத்தவரை, இந்துக்கள் கடைப்பிடிக்கும் பொது வழக்கத்திலிருந்த சட்டத்தையே பின்பற்றி வருகிறார்கள்.
அதாவது, ஷரியத் சட்டம் பெருமளவில் நகர்ப்புற முஸ்லிம்களுக்கு உரித்தானதாக மட்டுமே உள்ளது.
மேற்கு வங்கத்தின் கூச் - பிஹார் மாவட்டத்தில், 1937-இல் கொண்டுவரப்பட்ட ஷரியத் சட்டம் 1980-இல்தான் நடைமுறைக்கு வந்தது!
இந்தியாவிலும், (தற்போதைய) பாகிஸ்தானிலும் வாழ்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் பொது இந்து சிவில் சட்டத்தைப் பின்பற்றிவந்த நிலையில், முஸ்லிம் லீக் - பிரிட்டிஷ் அரசு கூட்டணி 1937-இல் ஷரியத் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்துவிட்டது என்பது ஒரு சரித்திரக் களங்கம்.
1937-இல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் ஆரம்பத்தில் மக்களைப் பிரித்தது; அடுத்த பத்தாண்டுகளில் (1947) தேசத்தையே துண்டாடியது.
ஷரியத் சட்டப்படி கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட முதிய அபலைப் பெண்ணான ஷாபானுவின் ஜீவனாம்ச வழக்கை (1985) விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசனத்தின் 44-ஆவது ஷரத்து இன்னமும் நடைமுறைக்கு வராமல் முடங்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தது.
"இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொது சிவில் சட்டத்தை ஏற்பதற்கு முஸ்லிம்கள் தயாராகியிருக்க வேண்டும். அதற்கான முதலடியை அவர்கள் எடுத்து வைத்திருக்க வேண்டும். பூனைக்கு மணி கட்டும் முயற்சியை அவர்களே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழவில்லை' என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பைப் பதிவு செய்தது.
இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்வதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், "அரசியல் சாசனத்துக்கு சிறிதளவேனும் மதிப்பிருப்பது உண்மையானால் பொது சிவில் சட்டத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்' என்று கூறியது.
அப்போது, பெருமளவு சட்ட நூல்களை எழுதியுள்ள சட்ட வல்லுநரும், இஸ்லாமியருமான டாக்டர் தாஹிர் மஹமூத்தின் கருத்துகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. "மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களுக்கு இடமில்லை' என்ற அவரது கருத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
"காலத்துக்கு ஒவ்வாத ஷரியத் சட்ட விதிமுறைகளை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அரசின் சட்டங்களிலிருந்து தங்களை வேறுபடுத்தும் தனிநபர் சட்டங்களின் பரிசுத்தத் தன்மையைக் காப்பதற்காகப் போராடி தங்கள் ஆற்றலை அவர்கள் விரயம் செய்யக் கூடாது. அவர்கள் பொது சிவில் சட்டத்துக்கு கைகொடுக்க வேண்டும்' என்று முஸ்லிம் மக்களுக்கு தாஹிர் மகமூத் வேண்டுகோள் விடுத்ததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
திருமணம் மற்றும் குடும்பநலச் சட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசு நியமித்த ஆணையத்தின் அறிக்கை "பெருமளவிலான முஸ்லிம் பெண்கள் நடுத்தர வயதில் எந்தக் காரணமுமின்றி விவாகரத்து செய்யப்பட்டு, எந்த வாழ்வாதாரமும் இன்றி நடுத்தெருவில் தள்ளப்படுகிறார்கள். அதனால் அவர்களும், அவர்களது குழந்தைகளும் நிர்கதியாகிறார்கள்' என்று உண்மைகளை அம்பலப்படுத்தியிருந்தது. அதை தனது தீர்ப்பில் குறிப்பிடவும் உச்ச நீதிமன்றம் தவறவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு, நாடு முழுவதும் முஸ்லிம்களின் போராட்டங்களுக்கு வித்திட்டது. அப்போதைய மத்திய அரசும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முன்வரவில்லை. மாறாக, ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பிரத்யேகச் சட்டம் (1986) கொண்டுவரப்பட்டது!
அதன் ஒட்டுமொத்த விளைவு என்ன தெரியுமா? 1986-க்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துபவர் வகுப்புவாதி என்றும், மதவெறியர் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்! பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர் மதச்சார்பற்றவராகப் பாராட்டப்படுகிறார்!
இவ்வாறாக, பொது சிவில் சட்டத்துக்கான விவாதத்தின் முடிவு, அரசியல் சாசனத்தைக் காக்க முற்படுபவர்களை வசைபாடவும் மதவெறியர்களாக முத்திரை குத்தவும் காரணமாகி இருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் திறனுள்ள தலைமை சிறுபான்மை சமுதாயத்தில் காணப்படவில்லை. இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை இந்திய அரசியல் களத்தில் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியபடி, இந்த விஷயத்தில் பூனைக்கு மணிகட்ட சிறுபான்மை சமுதாயம் முன்வருவதாகத் தெரியவில்லை. எனவே, தாஹிர் மகமூத்தின் கருத்துப்படி, பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை முன்னின்று நடத்த வேண்டியது பெரும்பான்மை சமுதாயத்தின் கடமையாகிறது.
சிறுபான்மையினருக்கான இந்தக் கடமையை பெரும்பான்மை சமுதாயம் நிறைவேற்றுவதைவிட, சிறுபான்மையினரே முன்வந்து, அனைவரும் இந்தியர்கள், ஒரே சட்டதிட்டத்திற்கு உள்பட்டவர்கள் என்று தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com