வாரிசு அரசியல்: ஓர் எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சிக்குள் நேரிட்டுள்ள பூசல், அக்கட்சியின் வாரிசு அரசியலையும், உறவினர்களை அதிகார மையமாக்கிய முலாயம் சிங்கின் சுயநல அரசியலையும் அம்பலப்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சிக்குள் நேரிட்டுள்ள பூசல், அக்கட்சியின் வாரிசு அரசியலையும், உறவினர்களை அதிகார மையமாக்கிய முலாயம் சிங்கின் சுயநல அரசியலையும் அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக விளங்கும் முலாயம் சிங் யாதவ், சோஷலிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.
இந்தியாவில் சோஷலிஸ்ட் கட்சியை வளர்த்த ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய நரேந்திரதேவ், ராம் மனோகர் லோகியா போன்றவர்களின் குடும்பங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்று யாருக்கும் தெரியாது.
ஆனால், சோஷலிஸ்ட் கட்சியின் அடியொற்றி அரசியல் பிரவேசம் செய்த முலாயம் சிங் யாதவின் குடும்பம் நடத்தும் வானளாவிய அதிகாரம் உ.பி.யில் அனைவரும் அறிந்த ரகசியம்.
இப்போது உத்தரப் பிரதேச ஆளும் கட்சிக்குள் நடக்கும் கலகத்தை, முலாயமே பின்னின்று இயக்குகிறார். ஆசையாக தனது மகனை முதல்வர் நாற்காலியில் அமரச் செய்து அழகு பார்த்த முலாயமை, மகன் அகிலேஷ் யாதவ் மதிக்கவில்லை என்பதுதான் பிரச்னைக்குக் காரணம்.
மூன்று முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங், 2012-இல் சமாஜவாதி கட்சி பெரும் வெற்றி பெற்றபோது, தனது முதல் மனைவியின் மகனை முதல்வராக்கினார்.
அவரை பொம்மையாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து திரைமறைவில் முலாயமே ஆட்சி செலுத்தியும் வந்தார்.
கட்சியிலும் தனது சகோதரர் சிவபால் யாதவை மாநிலத் தலைவராக்கினார். அவர் மாநில அமைச்சரவையிலும் இடம்பெற்றார். முலாயமின் ஒன்றுவிட்ட சகோதரர் ராம்கோபால் யாதவ் கட்சியின் தேசியத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார். அவரது மகன் அக்ஷய் யாதவ், பிரோஸாபாத் தொகுதி எம்.பி.முலாயமின் சகோதரர் அபயராமின் மகன் தர்மேந்திர யாதவ், பதாயூன் தொகுதி எம்.பி. மற்றொரு சகோதரர் ரத்தனின் பேரன் தேஜ்பிரதாப் சிங், மெயின்புரி தொகுதி எம்.பி. அகிலேஷின் மனைவியும் முலாயமின் மருமகளுமான டிம்பிள் கன்னோஜ் தொகுதி எம்.பி. முலாயமின் இரண்டாவது மனைவியின் மகன் பிரதீக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.
சிவபால் யாதவின் மகன் ஆதித்யா யாதவ், உத்தரப் பிரதேச மாநில கூட்டுறவு சங்கக் கூட்டமைப்பின் தலைவர்.
இவ்வாறாக, சமாஜவாதி கட்சியை தனது குடும்பத்தின் சொத்தாகவே மாற்றிவிட்டவர் முலாயம் சிங். அரசியலை சொத்து சேர்க்கும் கருவியாக சிலர் மாற்றிவரும் நிலையில், அரசியல் கட்சியையே தனது சொத்தாக மாற்றிய பெருமைக்குரியவர் முலாயம். அதுவே அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது, உத்தரப் பிரதேசத்தில் வாரிசுகளுக்குள் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. முதல்வர் அகிலேஷும், அவரது சித்தப்பா ராம்கோபால் யாதவும் ஓர் அணியில்.
மற்றொரு சித்தப்பா சிவபால் யாதவ் தலைமையில் மற்றொரு அணி. சிவபாலைக் கொண்டு அகிலேஷுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற முலாயம் சிங்கின் முயற்சிகள், ஆட்சி அதிகாரத்திலுள்ள மகன் முன்பு வியர்த்தமாகிவிட்டன. அதன் விளைவாக, சமாஜவாதி கட்சி பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது.
பல தேசியத் தலைவர்களுக்கு அரசியல் அரிச்சுவடிப் பாடம் நடத்திய முலாயமுக்கு, இன்று அவரது மகன் பாலபாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். விதி வலியது என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலும்.வாரிசு அரசியலுக்கென்று சில இலக்கணங்கள் உண்டு. அரண்மனைச் சதிகள் அவற்றில் ஓர் அங்கம். எந்த ஒரு தனித்திறனும் இல்லாதவர்கூட, அதிகார மையத்தின் உறவால் அதிகார சக்தியாக மாறுவதுதான் வாரிசு அரசியலின் அடிப்படை.
ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார சக்திகள் உருவாகும்போது, வாரிசுகளுக்குள் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
மன்னராட்சியின்போது, சகோதரர்களுக்குள் நடந்த சண்டைகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. தந்தை ஷாஜகானை சிறையிலிட்டு, சகோதரர்களைக் கொன்று ஆட்சி பீடமேறிய ஒளரங்கசீப்பின் கதையை நாம் அறிவோம். மதுரையில் ஆட்சி அதிகாரத்துக்காக நடந்த சண்டையால்தான் பாண்டிய அரசு அந்நியர்களிடம் வீழ்ந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்குதேசம் கட்சியை நிறுவி ஆட்சியைப் பிடித்த என்.டி.ராமராவ், வாரிசு அரசியலால்தான் கவிழ்ந்தார். தனது மருமகன் சந்திரபாபு நாயுடுவை இரண்டாமிடத்தில் வைத்து அழகு பார்த்த ராமராவ் சொந்த வாழ்க்கையில் தடம் புரண்டபோது, மருமகனாலேயே முதல்வர் நாற்காலியில் இருந்து தந்திரமாக இறக்கப்பட்டார்.
இவ்வாறாக, சரித்திரம் பல நிகழ்வுகளை பதிவு செய்தபடி இருக்கிறது. ஆயினும் வாரிசு அரசியலைக் கைவிட இந்திய தலைவர்கள் பலருக்கு மனமில்லை.
தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்தரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா, "வாரிசு அரசியல் ஒரு யதார்த்தம். அது இந்திய அரசியலில் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டது' என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு நான்கு புதல்வர்கள் இருந்தபோதும் அவர்களை தனது அரசியல் வாரிசாக்கவில்லை.
அவரது வழித்தோன்றல்கள் இன்றும் பொதுநலனுக்கான போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறார்கள் - அதிகார அரசியலில் இடம் பெறாமலேயே.
இதுதான் நாம் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம். இதற்கு மாறாக, சுய நலக் காரணங்களுக்காக வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்களுக்கு முலாயம் சிங்கின் வாழ்க்கை ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com