அணுகுமுறை மாறினாலன்றி...

"வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது, முதன் முறை துயர நாடகமாக; மறுமுறை அபத்த நாடகமாக' - இவை கார்ல் மார்க்சின் வார்த்தைகள்.
அணுகுமுறை மாறினாலன்றி...

"வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது, முதன் முறை துயர நாடகமாக; மறுமுறை அபத்த நாடகமாக' - இவை கார்ல் மார்க்சின் வார்த்தைகள். காவிரி தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன.
அண்மையில் மு.க. ஸ்டாலினால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எனக் கருதப்படும் கட்சிகள் புறக்கணித்தன. அதற்கு தமிழக அரசு, சற்றும் சளைக்காமல் நடத்தி வரும் சட்டப் போராட்டத்திற்கு இந்தக் கூட்டம் எந்த வகையிலும் உதவாது என்பது மட்டும் காரணம் அல்ல. அந்தக் கூட்டத்தின் பின்னுள்ள அரசியல் நோக்கங்களை அந்த கட்சிகள் புரிந்து கொண்டுவிட்டன என்பதும்தான்.
அந்த அரசியல் நோக்கங்களில் முக்கியமானவை மூன்று 1. தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் தன்னை காவிரிப் பிரச்சினைக்காகப் போராடிய போராளி எனக் காண்பித்து அரசியல் லாபம் தேடிக் கொள்ளும் திமுகவின் ஆர்வம். 2. கடந்த காலத்தில் காவிரி பிரச்சினையில் திமுக செய்த இமாலயத் தவறுகளை மக்கள் - குறிப்பாக டெல்டா விவசாயிகள்- மனதிலிருந்து மறைப்பது. 3. ஸ்டாலின் தலைமையில் இணைந்து செயல்பட பிற கட்சிகள் முன் வருமா என வெள்ளோட்டம் பார்ப்பது.
முதலாவது நோக்கத்தை அரசியல் கட்சிகள் அம்பலப்படுத்தி விட்டன. "மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம்' என்று திருமாவளவனும் முத்தரசனும் தெரிவித்து விட்டனர்.
கருணாநிதியின் தலைமைக்குக் கொடுத்த அளவிற்கான முக்கியத்துவத்தை ஸ்டாலினின் தலைமைக்கு மற்ற கட்சிகள் கொடுக்கத் தயங்குவதற்கு, இருவரின் அணுகுமுறையில் உள்ள வித்தியாசம் மட்டும் காரணமல்ல. தங்களது தலைமுறையைச் சேர்ந்த அவரை தங்களது தோழராக அல்ல, போட்டியாளராக பிற கட்சியில் உள்ள தலைவர்கள் கருதுவதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
காவிரிப் பிரச்னையில் கடந்த காலத்தில் திமுக செய்த இமாலயத் தவறுகள் இளம் தலைமுறையினருக்குத் தெரிந்திருக்காது, தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வமும் இராது, மூத்தவர்களும் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்டாலின் திமுகவிற்கு ஒரு புதுத் தோற்றம் அளிக்க முற்படுகிறார். அரசியலில் இது வழக்கம்தான்.
ஆனால் அவரோ, வாசகர்களோ சற்றுப் பின்னோக்கிச் சென்றால் இன்னொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் காணலாம். அது 1998-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்ற கூட்டம். அப்போது தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி. அதன் விவரங்களைப் பார்க்கும் முன் அந்தக் கூட்டத்திற்கான பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.
காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1971-இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை 1972 ஜூன் மாதம் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், 1983-ஆம் ஆண்டு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல் உரிமைப் பாதுகாப்பு சங்கம் டெல்டா பகுதி விவசாயிகள் அமைப்பு ஒன்று நடுவர் மன்றம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தது (நீதிப் பேராணை எண் 13347/1983).
அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஆணையின் பேரில் 6.5.1987 அன்று, தமிழக அரசு அந்த வழக்கில் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினால்தான் நடுவர் மன்றம் அமைந்தது (ஆனால் தன்னுடைய முயற்சியால்தான் நடுவர் மன்றம் அமைந்தது என்று திமுக சொல்லி வருகிறது).
அந்த நடுவர் மன்றமும் எப்படி அமைந்தது? காங்கிரஸ் தலைமையில் அமைந்த மத்திய அரசு வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை 17 ஆண்டுகள் - நீதிபதியே பொறுமை இழக்கும் அளவிற்கு இழுத்தடித்து - 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, "இனியும் தாமதிக்க நியாயமான காரணங்கள் இல்லை. சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மேலும் தாமதித்தால் அது (விவசாயிகளிடையே) சினத்தைக் கிளறிவிடும். கசப்புணர்வு அதிகமாகும். சிக்கல் மேலும் பெரிதாவதற்கு முன் சட்டவழிமுறைகளின்படி ஓர் அமைப்பை நிறுவி இயங்கச் செய்ய வேண்டும். A stitch in time saves nine (இதற்கு இணையாக தமிழில் சொல்வதானால் நகத்தால் கிள்ளத் தவறியதைப் பின்னால் கோடரி கொண்டுதான் வெட்ட வேண்டும்). ஒரு தனி நபருக்கு எது உண்மையோ அது தேசத்திற்கும் உண்மையாக இருக்கும்' என்று கடுமையாக எச்சரித்து "இன்றிலிருந்து (24.4.1990) ஒரு மாதத்திற்குள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்று கெடுவும் விதித்தார் (AIR 1990 SC1316 1990) இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மத்திய அரசு 1990-ஆம் ஆண்டு ஜுன் 2-ஆம் தேதி நடுவர் மன்றத்தை அமைத்தது. இந்த நடுவர் மன்றம் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி, தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென ஓர் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதை கர்நாடகம் அமல்படுத்த மறுத்தது. பல விதங்களில் முட்டுக்கட்டை போட்டு வந்தது. இடைக்கால ஆணையை அமல்படுத்தக் கோரி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 1993 ஜூலை 18 முதல் 20 வரை சென்னைக் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்.
அன்று மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருந்த வி.சி. சுக்லா உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே வந்து இடைக்கால உத்தரவைச் செயல்படுத்த அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 1996-ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக் காலம் முடியும்வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அதனால் மறுபடியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்குப் போனது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கெடு விதித்தது.
நரசிம்மராவ் செய்யாமல் நழுவியதை, வேறு வழியில்லாமல், ஐ.கே. குஜ்ரால் செய்ய முன் வந்தார். 1997-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்கினார். அந்த அமைப்புதான் காவிரி நதி நீர் ஆணையம் (Cauvery River Authority).  அதன் தலைவர் பிரதமர். நான்கு மாநில முதல்வர்கள் உறுப்பினர்கள்.
அத்துடன் 10 உறுப்பினர்கள் கொண்ட காவிரி ஒழுங்காற்று குழு. இது தவிர ஏழு அணைகளில் ஒரு கள அலுவலகம் என மூன்றடுக்குகள் கொண்ட அமைப்பு. கர்நாடகம் நடுவர் மன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்தத் தவறினால் அணைகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஒழுங்காற்றுக் குழு ஏற்றுக் கொண்டுவிடும் என்ற விதி.
இவைதான் அந்த வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள். இந்த அறிக்கை குறித்த இறுதி முடிவு எடுப்பதற்குள் குஜரால் ஆட்சி முடிந்து விட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் ஆணை என்பதால் அடுத்து வந்த வாஜ்பாய் அரசு, இந்த வரைவு அறிக்கைக்கு முதல்வர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறு, ஏழு தேதிகளில் தில்லியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
ஆனால் அதற்கு முன்பாக ஜூலை 29 அன்று நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு முதல் நாள் (ஜூலை 28-ஆம் தேதி) இரவு திருத்தப்பட்ட வரைவு அறிக்கை தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டது. நடுவர் மன்ற ஆணையை கர்நாடகம் அமல் படுத்தத் தவறினால் அணைகளை ஒழுங்காற்றுக் குழு ஏற்கும் என்ற விதி அதில் நீக்கப்பட்டிருந்தது.
இந்த வரைவுத் திட்டம் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட முதல்வர்கள் மாநாட்டிற்குச் செல்லும் முன் கருணாநிதி 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று சென்னையில் ஓர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டினார். அதில் தொடக்க உரையாற்றிய அவர், "அணைகளைத் தன் பொறுப்பில் ஒழுங்காற்றுக் குழு எடுத்துக் கொள்ளும் விதி தமிழகத்திற்கு சாதகமானதுதான். ஆனால் மாநில சுயாட்சி என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள நாம், அந்த விதியை நாம் ஏற்பது குறித்து விவாதிக்கலாம்' என்று பேசினார்.
அதாவது, அணைகளை ஒரு மத்திய அமைப்பு எடுத்துக் கொள்வது மாநிலங்களின் உரிமையில் குறுக்கிடுவதாகும் என்பதால் அந்த விதி நீக்கப்பட்டதை நாம் எதிர்க்கத் தேவையில்லை என்ற தொனியில் அமைந்தது அவர் பேச்சு. முதல்வர்கள் மாநாட்டில் "ஒழுங்காற்றுக் குழு' என்ற கருத்தாக்கம் ஏற்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரங்கள் வரையறுக்கப்படவில்லை.
குறிப்பாக அணைகளை எடுத்துக் கொள்வது பற்றிய அதிகாரம் கைவிடப்பட்டது (இதைத்தான் பல்லிலாத ஆணையம் என்றார் ஜெயலலிதா). அதிகாரங்களை வரையறுக்க அமைச்சரவைச் செயலரையும், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் கொண்ட குழு அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.
குஜ்ரால் உருவாக்கிய வரைவில் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்க அன்று கருணாநிதி மறுத்திருந்தால் இன்று காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் கை ஓங்கியிருக்கும். இறுதித் தீர்ப்பிற்குப் பிறகும் நீர் கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் நாம் காட்டிய தளர்வான அணுகுமுறை, நெகிழ்வு, இறுதித் தீர்ப்பின் போதும் தொடர்ந்தது என்பதை, 2007-இல் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக மேற்கொள்ளவில்லை என்ற உண்மை புலப்படுத்துகிறது.
அணுகுமுறை மாறினாலன்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அபத்த நாடகமாகவே முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com