இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து,
இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து, தானே முளைக்கின்ற விதை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமோக விளைச்சலைத் தரும். அப்படி அயர்லாந்திலே இருந்து வந்து இந்திய மண்ணில் விழுந்த விதைதான், சகோதரி நிவேதிதா.
1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாளில், சாமுவேல் ரிச்மென்ட் நோபில் எனும் தந்தைக்கும் - மேரி இசபெல் எனும் தாய்க்கும் மகவாக, அயர்லாந்து மண்ணில் மார்க்ரெட் எலிசபெத் நோபில் எனும் பெயரில் ஓர் அரும்பு முளைத்தது. தந்தை சாமுவேல் ஒரு மதபோதகர்.
என்றாலும், ஏழ்மையை ஆணிவேரிலிருந்து அகற்றுவதுதான் மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மகளுக்குப் பாலபாடமாகப் படிப்பித்தார். பெற்ற தந்தையால் விதைக்கப்பட்ட வித்து, ஹாலிபேக்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்த மார்க்ரெட் நெஞ்சில், ஞானத்தந்தையாகிய சுவாமிஜி விவேகானந்தரால் நீரூற்றி வளர்க்கப்பட்டது.
சிகாகோ நகரில் சுவாமிஜி வெளிப்படுத்திய ஆன்மிக ஆவேசம், இலண்டனிலிருந்த மார்க்ரெட் மனத்தில் எக்ஸ்ரே கதிர்களாகப் பரவியது.
1895-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த தமது சீடர் இசபெல்லா மார்க்கஸன் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்த இருந்த பிரசங்கத்திற்கு இசபெல்லா தம் தோழியாகிய மார்க்ரெட்டையும் அழைத்திருந்தார். சுவாமிஜியின் புதிய வெளிச்சத்தில் அனைவரும் வழி கண்டனர், மார்க்ரெட்டைத் தவிர.
சமூக ஏற்றத்தாழ்வு எனும் புண்ணிற்குப் போதிமரத்துப் புத்தன் தான் புதிய மருந்து தடவுவான் என எண்ணியிருந்த மார்க்ரெட், சுவாமிஜியிடம் எதிரும் புதிருமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
மலை கலங்கிலும், கடல் கலங்கிலும் நிலை கலங்காத சுவாமிஜி, "மகளே, என்னை ஏற்றுக்கொள்வது சிரமமே, புரிகிறது. அது தவறும் இல்லை. என்னுடைய குருவான பரமஹம்சரிடம் ஆறு ஆண்டுகள் போராடிய பிறகே அவரை நான் ஆசாரியனாக ஏற்றேன். அதனால் சந்தேகங்கள் கிளம்பிப் பதில் கிடைக்கும் போதுதான், ஒவ்வொரு விஷயமும் தெளிவாகப் புரியும்' என்றார்.
சுவாமிஜியின் அடுத்தநாள் சொற்பொழிவுக்கும் மார்க்ரெட் சென்றார். தீட்சா ரகசியங்களில் ஆழங்காற்பட்டிருந்த சுவாமிஜி, "இந்தியா முன்னேற, உலகின் ஆன்மிக மகுடம் தரித்திருக்கும் பாரதத்தின் துயர் தீர்க்க, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் இவற்றிற்குத் தொண்டாற்ற, துணிவே துணை என கொள்கை தீபம் ஏற்றும் பல புத்தர்கள் தேவைப்படுகிறார்கள்.
அந்தப் பணியில் உங்களில் யார் அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்கள் தொண்டுக்கு நான் கடைசிவரை தோள் கொடுப்பேன்' என்றார்.
சுவாமிஜியின் ஞானஸ்நானத்தில் முழுமையாக நனைந்த மார்க்ரெட், "இந்தியாவுக்கு எப்போது புறப்பட வேண்டும் சுவாமிஜி' என்றார். சுவாமிஜி, "மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதை, தோல்
களைப் பிளந்து கொண்டு வெளியே தலைகாட்டும்வரை காத்திரு' எனக் கூறிச்சென்றார்.
சுவாமிஜியின் இசைவு பெற்று, மார்க்ரெட் 28.01.1898 அன்று கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். மாம்பசா எனும் கப்பலின் மூலம் வந்த மார்க்ரெட்டை சுவாமிஜியே துறைமுகத்திற்குச் சென்று வரவேற்கின்றார். மார்க்ரெட் முதல் வேலையாகப் பரமஹம்சர் நிர்மாணித்த தட்சிணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.
சுவாமிஜி 1898 மார்ச் 11-ஆம் நாளன்று, கல்கத்தா ஸ்டார் தியேட்டரில் மார்க்ரெட்டை அறிமுகப்படுத்துகிறார். மார்க்ரெட் எனும் பெயரை மாற்றி, நிவேதிதா என நன்னீராட்டுகின்றார். "இந்தியாவுக்கு இங்கிலாந்து சில நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் தலையானது சகோதரி நிவேதிதா எனக் குறிப்பிடலாம்' என்றார் சுவாமிஜி.
மார்ச் 17-ஆம் நாள் சகோதரி நிவேதிதா, அன்னை சாரதா தேவியைச் சந்திக்கிறார். அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் கையிலிருந்த கைக்குட்டையால் பாதங்களில் படிந்திருந்த தூசியைத் துடைக்கிறார்.
அன்னையும் என் மகளே (வங்காளத்தில் கோக்கி) என்று வாரி அணைத்து, உச்சிமுகந்து ஆசீர்வதித்தார். அன்னையின் குடிலில் தங்கத் தொடங்கிய பிறகு, நிவேதிதா ஓர் இந்து பெண் சந்நியாசியாகவே மாறிவிடுகிறார்.
சகோதரி நிவேதிதாவின் தொண்டு வாழ்க்கையில் - அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் இடிதாங்கி மேலேயே இடி விழுந்தது போன்றதோர் துயரம் ஏற்பட்டது. சுவாமிஜி, 1902 ஜூலை 4-ஆம் நாள் இரவு அமரத்துவம் அடைந்த செய்தி, பேலூர் மடத்திலிருந்து சகோதரி நிவேதிதாவிற்கு தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் சகோதரி, இராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலிலிருந்து இரண்டாவது முறையாக உயிர்பிரிந்து மேலே செல்லுவதுபோல் கனவு காணுகிறார். உடனடியாக அவர் பேலூர் மடத்திற்கு விரைகிறார்.
படுக்கையில் அமர்த்தப்பட்டிருந்த சுவாமிஜியின் தலைமாட்டில் அமர்கிறார். உட்கார்ந்த நேரத்திலிருந்து சுவாமிஜியின் புகழுடம்பு, நீராட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வரையில், பனையோலையால் செய்யப்பட்ட விசிறியால் விசிறிக்கொண்டேயிருந்தார்.
சுவாமிஜியின் புகழுடம்பு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, சுவாமிஜியின் உடம்பின்மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியிலிருந்து ஒரு துண்டு வெட்டித் தரும்படி, மடத்துத் தலைவர் சுவாமி சாரதானந்தாவிடம் வேண்டுகிறார். அவரும் சம்மதித்தாலும், அச்செயல் சுவாமிஜியின் புனிதயாத்திரை நேரத்தில் சரியாக இருக்குமா எனச் சிந்தித்து அவரே வேண்டாமென்று மறுதலிக்கிறார்.
ஆனால், தகனத்தின்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. தகனத்தின்போது, தீயின் கடைசி கங்கு அணைகின்றவரையில் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நிவேதிதா. அப்போது தமது அங்கியின் பின்புறத்தை யாரோ பின்னாலிருந்து இழுப்பதுபோன்று ஓர் தொடுவுணர்ச்சி நிவேதிதாவிற்கு ஏற்படுகிறது.
திடீரென்று எரிந்து கொண்டிருந்த புகழுடம்பிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி புறப்பட்டு வந்து நிவேதிதாவின் மடியில் விழுகிறது. அதனை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்ட நிவேதிதா, அது தம்முடைய குருஜியின் கடைசி ஆசீர்வாதம் எனக் கருதி, அதனைத் தம்முடைய அமெரிக்கத் தோழி, ஜோசப் மேக்லியோடிக்கு அனுப்பிவிடுகிறார்.
1905-ஆம் ஆண்டு காசி காங்கிரசை முடித்துக்கொண்டு, மகாகவி பாரதி கல்கத்தா வழியாகச் சென்னைத் திரும்ப நினைத்தபோது, கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் சகோதரி நிவேதிதா தங்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றார். அத்தரிசனம் ஒரு தெய்வ தரிசனமாயிற்று. ஒரு குருஜிக்குச் சீடராக வந்த நிவேதிதா, ஒரு மகாகவிக்கு ஞானகுருவாகிறார்.
தம்முடைய படைப்புகளை எந்தத் தனிமனிதருக்கும் சமர்ப்பிக்காத மகாகவி பாரதி, ஞானரதம் போன்ற நான்கு படைப்புகளை ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் அன்னை நிவேதிதாவிற்குச் சமர்ப்பித்து, "ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, சுதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில், இச்சிறு நூலில் ஸமர்ப்பிக்கின்றேன் சுதேசிய பாடல்களை சமர்ப்பிக்கின்றேன்' என்று எழுதுகிறார்.
அடுத்து "ஜென்மபூமி' எனும் தலைப்பில் வெளியிட்ட சுதேசிய கீதங்களையும், "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீநிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்' என்றவாறு எழுதி, குருவணக்கம் செய்கிறார்.
மேலும், நிவேதிதாவின் குரு உபதேசத்தை, "சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் ... பெற்றதை ஏதென்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினர் தோழி' எனக் குரு உபதேசம் எனும் தலைப்பில் பரவசப்பட்டுப் பாடுகிறார்.
சுவாமிஜி அமரத்துவம் அடைந்த பின்னர், சகோதரி நிவேதிதா ஆன்மிகப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்.
அரவிந்தருடனும், அனுசீலன் சமிதி எனும் இரகசிய புரட்சியாளர்களுடனும் இணைந்து, இந்திய விடுதலையில் தீவிரவாதம் காட்டுகிறார். கவிஞர் இரவீந்திரநாத தாகூர், நிவேதிதாவின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சுகிறார். வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராடியதில் லார்ட் கர்சானுக்கே ஒரு நடுக்கம் ஏற்படுகின்றது.
1911-ஆம் ஆண்டில் நிவேதிதா நோய்வாய்ப்பட்டுள்ளார். 06.10.1911 அன்று தம்முடைய சொத்துகளையும், உடைமைகளையும் தாம் தோற்றுவித்த பள்ளிக்கே சேருமாறு உயில் எழுதி வைக்கிறார். அச்சொத்துகளைப் பராமரிக்கின்ற உரிமையை பேலூர் மடத்தின் ஆதீனகர்த்தாக்களுக்கே வழங்கினார்.
அந்திம காலத்தில் அறிவியலறிஞர் ஸர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தம்பதியருக்குச் சொந்தமான டார்ஜிலிங் மாளிகையில் சகோதரி நிவேதிதா தங்குகிறார். 13.10.1911 அன்று தமது 44-வது வயதில் அவருடைய ஆன்மா இறைவனடியில் பரிபூர்ணத்துவம் அடைகிறது.
அவருடைய கல்லறையில் "இந்தியாவிற்கே எல்லாவற்றையும் அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே இளைப்பாறுகிறார்' எனப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
நம்மை அடிமைப்படுத்திய மண்ணிலிருந்தே புறப்பட்ட பூவொன்று, அம்மண்ணிற்கே புயலானது. சகோதரி நிவேதிதா, சுவாமிஜிக்குச் சீடரானார். மகாகவி பாரதிக்குக் குருவானார்.

இன்று சகோதரி நிவேதிதா பிறந்த 150-ஆவது ஆண்டு.கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தி. இராசகோபாலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com