குறையும் நீர்மட்டம்

தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. போதுமான அளவு மழை இருந்தும் நீர் நிலைகளில் நீர் தேக்கமின்றி மழை நீர் அதிக அளவு கடலில் கலக்கின்றன.
நீர் நிலைகள் சரிவர தூர்வாரப்படாமல் கொள்ளளவு குறைந்துள்ளதால் நீர்ப் பிடிப்புப் பகுதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பூமிக்குள் உட்புகும் நீரின் அளவு குறைந்து வருகிறது.
இந்நிலை தொடருமானால் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டம் குறையக்கூடும். பருவ மழை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் தற்போது நிலத்தடி நீரை நம்ப வேண்டி உள்ளது. கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவு குறைகிறது.
உலகிலுள்ள மொத்த நீரில் நமக்கு கிடைக்கும் நன்னீர் 0.5%-க்கும் குறைவு. எஞ்சிய நீர், துருவங்களில் பனிக்கட்டியாகவும், கடல் நீராகவும் உள்ளது. 2020-இல் உலக அளவில் 40 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்னீர் பூமியில் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் வியாபித்திருக்கிறது. இருப்பினும், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானோர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை காட்டிலும் 8 மடங்கு வேகத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
நிலத்தடி நீருக்கு ஒரு மீட்சி எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவு வரை கீழே இறங்கிய பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். நீர் மட்டத்தை இந்த எல்லைக்கு கீழே தொடர்ச்சியாக இறங்கச் செய்தால், பின் முந்தைய நீர் மட்ட நிலைக்கு வர இயலாமல் போய்விடும்.
தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் மொத்த நிலப்பரப்பில் பூமிக்கு அடியில் 73 சதவீதம் திடப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளன. எஞ்சிய 27 சதவீதத்தில் அடிப்பரப்பு படிவு பாறைகளால் அமைந்துள்ளது. திடப்பாறை படிவுகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
படிவுப்பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நிறைந்ததாக இருக்கும். பொதுவாகவே தமிழ்நாட்டில் நில அமைப்பின் காரணமாக நிலத்தடி நீர் வளங்கள் போதுமானதாக இருப்பதில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டில் குமரி மாவட்ட நிலத்தடி நீரின் மட்டம் 4.86 மீட்டராக இருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிக குறைந்த அளவாகும். விவசாய நிலங்களுக்கு தற்போது நில மேற்பரப்பு நீரையே பெரிதும் நம்ப வேண்டிய சூழ்நிலையிலுள்ளோம். நில மேற்பரப்பு நீர் மழையையே நம்பியுள்ளது.
வானம் பார்க்கும் பூமி தான் தமிழ்நாடு. ஒரு குறிப்பிட்ட அளவு நீர் வளமே தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் சராசரி மழையின் அளவு 970 மி.மீ. இதில் சராசரியாக 33% தென்மேற்கு பருவமழை மூலமும் 48% வடகிழக்கு பருவ மழை மூலமும் கிடைக்கிறது.
மீதமுள்ளவை கோடை மழை மூலமும், குளிர் கால மழை மூலமும் கிடைக் கிறது. தமிழ்நாட்டில் நில மேற்பரப்பில் கிடைக்கும் நீரின் அளவு தோராயமாக 853 டி.எம்.சி. 3,900 குளங்கள் மூலம் சராசரியாக 347 டி.எம்.சி. தண்ணீரும், பிற மாநிலங்களிலிருந்து 261 டி.எம்.சி. தண்ணீரும், பிற சேமிப்பு தளங்களிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீரும் கிடைக்கும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தண்ணீரின் தேவையை விட கிடைக்கும் அளவு குறைவாகவே உள்ளது. குடிநீர் கார்பரேசன் பகுதிகளில் 13.80 டி.எம்.சி. அளவும், நகராட்சிகளில் 9.60 டி.எம்.சி. அளவும், டவுண் பஞ்சாயத்துகளில் 10 டி.எம்.சி. அளவும் கிராமப்புரங்களில் 18.50 டி.எம்.சி. அளவும் தேவைப்படுகிறது.விவசாயத்திற்கு 1,766 டி.எம்.சி. அளவும், தொழிற்சாலைகளுக்கு 54.90 டி.எம்.சி. அளவும், மின் உற்பத்திக்கு 420 டி.எம்.சி. அளவும் கால்நடைகளுக்கு 18.30 டி.எம்.சி. அளவும் ஆக மொத்தம் ஆண்டிற்கு 1,894.80 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் தண்ணீர் வளங்களிலிருந்து கிடைக்கும் அளவு 1,587 டி.எம்.சி. ஆகும். 307.80 டி.எம்.சி. அளவு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. இவற்றின் அளவு மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 கோடிக்கு மேல் உள்ள சூழலில் கிடைக்கும் நீர் மாசுபடுவதால் பல நோய்கள் பரவும் சூழல் ஏற்படுகிறது. பல சூழல் மாசுகளால், கிடைக்கும் 0.5% நன்னீரும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பயன்படுத்த முடியாமல் போகிறது.
நிலத்தடி நீர் மட்டம் நீட்சி நிலையைவிட குறைந்துவிடாமல் இருக்க மழைநீர் சேமிப்பை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும். நகர்புறங்களில் கழிவுநீர் ஓடைகள் முழுவதும் மூடப்பட்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு குழாய்கள் மூலம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் நீர் பூமியினுள் உட்புகுவது நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது.
நீர்நிலைகள் மற்றும் நன்னீர் தேக்கங்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறையாமல் பார்த்துக்கொள்ள அரசு தீவிர முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.
நீரின்றி அமையாது உலகு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com