ஏழைகளின் தேசமா? பணக்காரர்களின் தேசமா?

"வறுமை மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட வளங்கள் 2016: சமச்சீரற்ற தன்மையை எதிர்கொள்ளுதல்' என்ற அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது.
ஏழைகளின் தேசமா? பணக்காரர்களின் தேசமா?

"வறுமை மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட வளங்கள் 2016: சமச்சீரற்ற தன்மையை எதிர்கொள்ளுதல்' என்ற அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், உலகில் வசிக்கும் ஏழைகளில் சுமார் 30 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 நிலவரப்படி, உலகில் உள்ள 76.7 கோடி ஏழைகளில் 22.4 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். உலகில் அதிக ஏழைகளைக் கொண்டுள்ள நாடு இந்தியா என்ற நிலையை உலக வங்கியின் அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
வாங்கும் திறன் ஒப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாளைக்கு 1.90 டாலர் வருவாயை வறுமைக் கோடாக உலக வங்கி நிர்ணயித்துள்ளது. 2013-இல் வாங்கும் திறன் ஒப்பீட்டின் அடிப்படையில் இதன் இந்திய மதிப்பு ரூ.31.77 (டாலருக்கு ரூ.16.72 என்ற விகிதத்தில்). ஆனால், சந்தை நாணய மாற்று விகிதத்தின்படி இதன் மதிப்பு ரூ.117.45 (ஒரு டாலருக்கு ரூ.61.82 என்ற அப்போதைய சந்தை நிலவர கணக்கில்). ஒரு பொருளை வெவ்வேறு நாடுகளில் வாங்கும்போது, அதற்கு செலவழிக்கும் தொகையின் அடிப்படையில் வாங்கும்திறன் ஒப்பீட்டின் கீழ் நாடுகளின் நாணயங்கள் மதிப்பிடப்படுகின்றன. இதை எளிமையாக விளக்குவதென்றால், இந்தியாவில் ஒரு தேநீரின் விலை ரூ.10, அமெரிக்காவில் ஒரு டாலர் என்றால், ஒரு டாலரின் மதிப்பை நாணய மாற்று விகிதத்திலான ரூ.66.77 என்று கொள்ளாமல் ரூ.10 என்று கொள்வதாகும்.
வறுமைக் கோடு குறித்து, இந்தியாவின் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி சர்ச்சைக்குரிய வகையில் நிர்ணயித்ததைப்போலவே உலக வங்கியும் நிர்ணயித்துள்ளது. சராசரியாக ஒரு நாளில் கிராமப்புறங்களில் ரூ.27.20-ம், நகர்ப்புறங்களில் ரூ.33.30-ம் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குள் வரமாட்டார்கள் என 2009-இல் வெளியிடப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அப்போது நம் நாட்டில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் என கணக்கிடப்பட்டது. அதன் பின்னர், இந்த வரையறையை முறையே ரூ.32 மற்றும் ரூ.47 என ரங்கராஜன் கமிட்டி உயர்த்தியது. அதன்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை 36.3 கோடியாக அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியாவில் வறுமைக் கோடு குறித்து வரையறுப்பதற்காக, திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிறுவப்பட்டுள்ள நீதி ஆயோக், ஒரு குழுவை அமைக்க உள்ளது.
உலகில் உள்ள ஏழைகளில் 18 வயதுக்குள்பட்டவர்கள் 50 சதவீதம் பேர் என்பதும், 14 வயதுக்குள்பட்டவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதும் வருந்தத்தக்கவையாகும். மிகவும் ஏழைகள் எனக் கருதப்படும் 52 சதவீதம் சிறுவர், சிறுமியர் சஹாரா பாலைவனத்தின் தென் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கிறார்கள்.
இதிலும் இந்தியாவின் பங்குதான் (30 சதவீதம்) அதிகம். மிகக் கொடுமையான வறுமை காரணமாக அவர்கள் கல்வியின்மையாலும், சுகாதாரமின்மையாலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறைந்தபட்சம் 25 கோடி குழந்தைகள் 4-ஆம் வகுப்பைத் தாண்டுவதில்லை அல்லது குறைந்தபட்ச கல்வி இலக்குகளைகூட எட்டுவதில்லை. இந்தியாவில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 47 சதவீத குழந்தைகளால் 2-ஆம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிவதில்லை.
"மிகக் கொடுமையான வறுமைக்கு முடிவு கட்டுதல்: குழந்தைகளின் மீது கவனம்' என்ற ஓர் அறிக்கையை யுனிசெப், உலக வங்கி ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன. அதில், இந்தியாவில் உள்ள 38.5 கோடி குழந்தைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடும் வறுமையில் உழல்வதை உறுதிப்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் 5-இல் 4 குழந்தைகள் வறுமையில் தவிப்பது கவலை அளிப்பதாகும்.
ஒரு நாளைக்கு 3.10 டாலர் மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பங்களில் 45 சதவீதம் குழந்தைகள் வசிக்கிறார்கள் என்கிறது யுனிசெப் அறிக்கை. இவை எல்லாவற்றையும்விட மோசமானது என்னவென்றால், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் அதிகமானோர் இந்தியாவில்தான் இறக்கின்றனர். 2014-இல் வெளியிடப்பட்ட ஐ.நா. ஆயிரம் ஆண்டு மேம்பாட்டு இலக்கு அறிக்கையின்படி, 2012-இல் 5 வயதுக்குள்பட்ட 14 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்.
உலகின் ஏழைகளில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 64 சதவீதம் பேர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலக வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, சமச்சீரற்ற வகையில் வருவாய் பகிர்மானம் என்பது மற்றொரு கவலை அளிக்கும் அம்சமாகும்.
"வருவாய்ப் பகிர்வில் சமச்சீரற்றதன்மை, தேசியப் பொருளாதாரத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், மனித குலத்தின் சாதனைகளையும், எதிர்பார்ப்புகளையும் தூளாக்கிவிடும்' என்று தெள்ளத்தெளிவாக எச்சரிக்கிறது உலக வங்கி அறிக்கை.
அமெரிக்கா, தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, தைவான், சீனா ஆகிய நாடுகள் போலவே, இந்தியாவில் மேல்நிலையில் உள்ள ஒரு சதவீதம் பேரின் வருவாய் அதிகரித்து வருவதை உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
1990-க்குப் பிறகு உலக மக்களிடையே சமச்சீரற்றதன்மை சீராக குறைந்துவருகிறது. இருப்பினும், சமச்சீரற்றதன்மை இப்போதும் அதிகமாக உள்ளது. இதில் சமரசப் போக்குக்கே இடமில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 83 நாடுகளை ஆய்வு செய்ததில் 34 நாடுகளின் செல்வந்தர்களில் 60 சதவீதத்தினரின் வருவாய் அதிகரித்துக் கொண்டே செல்வதும், 23 நாடுகளின் செல்வந்தர்களில் 40 சதவீதத்தினரின் வருவாய் குறைந்துவருவதும் தெரியவந்துள்ளது.
2015-இல், உலக மக்கள்தொகையில் கடைநிலையில் உள்ள 50 சதவீதத்தினருக்கு எந்த அளவுக்கு சொத்துகள் உள்ளனவோ, அதே அளவு சொத்துகள் 62 தனிநபர்களிடம் உள்ளன என ஆக்ஸ்பேம் அறிக்கை கூறுகிறது (ஆக்ஸ்பேம் என்பது தன்னார்வ அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பு. பிரிட்டனில் ஆக்ஸ்போர்டில் தலைமையகம் உள்ளது).
இந்தியாவில் ஏழைகள் அதிக அளவில் இருந்தபோதிலும், உலக செல்வந்தர்கள் வரிசையில் இந்தியா பின்தங்கவில்லை. வளமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-ஆவது இடத்தில் (5,600 பில்லியன் டாலர்) உள்ளது.
உலகின் வளமான நாடுகள் பட்டியலை "நியூ வேல்டு வெல்த்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 48,900 பில்லியன் டாலருடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா (17,400 பில்லியன் டாலர்) இரண்டாம் இடத்திலும், ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் (9,200 பில்லியன் டாலர்) நான்காம் இடத்திலும், ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) ஐந்தாம் இடத்திலும், பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) ஆறாம் இடத்திலும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் நமக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
2015-இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 2.07 டிரில்லியன் (டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி) டாலராகும். வாங்கும் திறன் ஒப்பீட்டின்படி இதன் மதிப்பு 7.9 டிரில்லியன் டாலர்.
இந்தியாவின் வளம் சமச்சீராக பிரித்தளிக்கப்படவில்லை என்பதுடன், 130 கோடி மக்கள்தொகை என்பதையும் கருத்தில்கொண்டால், இந்தப் புள்ளிவிவரங்கள் தவறான கண்ணோட்டத்தை அளிக்கக்கூடியவை என்பது புரியும்.தனிநபர் வருமானப் பட்டியலில், 2015-இல் இந்தியா 1,590 டாலர் தனிநபர் வருமானத்துடன் 170-ஆவது இடத்தில் இருந்தது. இதை வாங்கும் திறன் ஒப்பீட்டின்படி கணக்கிட்டால், 6,020 டாலருடன் 151-ஆவது இடத்தில் உள்ளது.
மொத்த வருவாயை மக்கள்தொகையால் வகுத்தால் வருவது சராசரி தனிநபர் வருமான நிலவரம். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்காது. மேலும், வருவாய்ப் பகிர்வு சீராக இல்லாத நிலையில் தனிநபர் வருமான நிலவரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்கவே செய்யாது.
வருமானப் பகிர்வைக் குறிக்கும் ஜினி (இத்தாலிய புள்ளியியல் அறிஞர்) குறியீட்டின்படி, இந்தியாவில் 1990-இல் 45.18 புள்ளிகளாக இருந்தது, 2013-இல் 51.36 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவின் ஜினி குறியீடு 43.69-ஆக உள்ளது.ஜினி குறியீட்டின்படி, புள்ளிகள் உயர்ந்தால் வருவாய்ப் பகிர்வின் சமச்சீரற்றதன்மை அதிகம் என்று பொருள். வருவாய்ப் பகிர்வில் இந்தியாவின் நிலை லத்தீன் அமெரிக்காவைவிட மோசமாக உள்ளது என்பது இந்தப் புள்ளிவிவரத்தில் தெரியவருகிறது.
2015-இல் வெளியிடப்பட்ட சர்வதேச வள அறிக்கையின்படி, இந்தியாவில் 10 லட்சம் டாலருக்கு மேல் வருவாய் உள்ள 1.98 லட்சம் பேரிடம் 785 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - 100 கோடி) சொத்து குவிந்துள்ளது.
கிரெடிட் சூசி என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் 53 சதவீத வளங்கள் ஒரு சதவீதம் பேரிடமும், 68.6 சதவீத வளங்கள் 5 சதவீதம் பேரிடமும், 76.3 சதவீத வளங்கள் 10 சதவீதம் பேரிடமும் உள்ளன. கடைநிலையில் உள்ள 50 சதவீதம் பேரிடம் வெறும் 4.1 சதவீதம் வளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைகளைக் கொண்டு, இந்தியப் பொருளாதாரம் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நிலையை உயர்த்த தகுந்த செயல்திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com