வாக்குரிமையின் வலிமை!

ஜனநாயக ஆட்சி என்பது மக்கள் வாக்குகளில் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதாவது பெரும்பான்மையான வாக்காளர்கள் எந்தக் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்து எடுக்கிறார்களோ அந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடுகிறது.
சா. கந்தசாமி
சா. கந்தசாமி

ஜனநாயக ஆட்சி என்பது மக்கள் வாக்குகளில் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதாவது பெரும்பான்மையான வாக்காளர்கள் எந்தக் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்து எடுக்கிறார்களோ அந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடுகிறது. ஒரு உறுப்பினரோ, இரண்டு உறுப்பினர்களோ கூடுதலாக இருந்தால் போதும். அதுதான் பெரும்பான்மை. பெரும்பான்மையான மக்களின் ஆட்சிதான் ஜனநாயக ஆட்சி.
இதுவரையில் உலகம் கண்ட ஆட்சிமுறைகளிலேயே சிறந்தது. ஜனநாயகம் பல அடுக்குகளில் இருக்கிறது. எனவே எல்லோரும் தன்னளவில் பங்கு பெற வாய்ப்பு பெறுகிறார்கள். ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு என்பதால் எல்லோரையும் சமமாகக் கொள்கிறது. பல கட்சிகளுக்கு இடம் அளிக்கிறது.
சில நாடுகளில் குடியரசுத் தலைவர் மக்களின் வாக்குகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசியல் அதிகாரம் அவர் கட்சிக்கு அவர் வழியாகச் சென்று விடுகிறது. எனவே குடியரசுத் தலைவர் தனது சக அமைச்சர்களை நியமித்துக் கொள்கிறார். அதனை ஒற்றை மனிதன் ஆட்சி என்று சொல்ல முடியாது.
அமெரிக்க ஜனநாயகம் என்பது குடியரசுத் தலைவரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுப்பது. 1788-1789 ஆண்டில் அது நடைமுறைக்கு வந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் முதல் குடியரசுத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர்களை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அந்த நடைமுறை இருநூற்று முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டீஷ் ஆட்சி முறையையொட்டி வருகிறது. இந்தியாவில் பரம்பரையாக ஆட்சி புரிந்துவரும் மன்னர்கள் - அரசிகள் இல்லை. அவர்கள் இடத்தில் குடியரசுத் தலைவர் இருக்கிறார். அவர் நாடாளுமன்ற இரண்டு அவைகளாலும், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் அதிக அதிகாரம் இல்லை.
இந்திய ஜனநாயகத்தின்படி உண்மையான அதிகாரம் படைத்தவர் பிரதம மந்திரி. அவர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர். மக்களவை, மாநிலங்களவை ஏதாவது ஒன்றில் அவர் உறுப்பினராக இருக்க வேண்டும். அவருடைய பதவிக் காலம் ஐந்தாண்டுகள். கட்சி தேர்ந்தெடுத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமராக பதவி வகிக்கலாம்.
பெரும்பான்மையான மக்கள் ஆதரவும் - உறுப்பினர்களும் கொண்ட கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும். எனவே தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேண்டுகிறது. மக்கள் வாக்குகளைப் பெற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்கிறது. கூட்டங்கள் நடத்துகிறது. பணம் கொடுக்கிறது.
தேர்தலுக்கு முன்னால் தங்கள் கட்சி வென்றால் பெண்கள், மாணவர்கள், முதியோர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படும். இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படும், வேட்டி சேலைகள் தரப்படும். மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள், செல்லிடப்பேசி கொடுக்கப்படும். நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும். எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு தரப்படும். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க இலவசமாக விமான பயணச் சீட்டுகள் வழங்கப்படும்.
இஸ்லாமியர்கள் புனித கடமையாற்ற மெக்கா செல்லவும், கிறிஸ்துவர்கள் ஜெருசலம் போய் வரவும் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்து மதத்தினர் மானஸரோவர் செல்லவும், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்லவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றெல்லாம் தேர்தல் பிரகடனம் மூலமாக அறிவிக்கிறது.
ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் வெற்றி பெறும் அரசியல் கட்சிக்குக் கிடையாது.
பொதுமக்கள் அரசியல் கட்சிகளால் தங்கள் வாழ்வு வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துக் கொண்டு வருகிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் 1952-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்காக முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 17 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்தார்கள். அவர்களில் 47.5 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள். அப்போதிலிருந்து வாக்களிப்போர் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்குப்பதிவை எட்ட பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகம் என்பது எத்தனை சதவீதம் வாக்குகள் பெற வேண்டும் என்பதில்லை. பதிவாகும் வாக்குகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான்.
இந்திய குடிமகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலிலோ, சட்டப்பேரவைத் தேர்தலிலோ வாக்களிப்பது என்பது கட்டாயம் இல்லை. அரசியல் சாசனத்தில் அது கடமை என்று சொல்லப்படவும் இல்லை. அது வாக்காளரின் உரிமை. விரும்பினால் வாக்களிக்கலாம். விரும்பாவிட்டால் வாக்களிக்காமல் இருக்கலாம். வாக்களிக்கும்படி ஒரு குடிமகனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
உலகத்தில் சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பொலிவியா உள்பட 22 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம். வாக்களிக்காவிட்டால் தண்டனை உண்டு. ஆனால் பல நாடுகள் தண்டனைக் கொடுப்பது இல்லை.
ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம். தேர்தல் நாள் விடுமுறை நாள். எனவே வாக்குச்சாவடிக்குச் சென்று ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டும்.
தகுந்த காரணம் இன்றி வாக்களிக்காமல் இருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். பின்னர் அவர்கள் எந்தத் தேர்தலிலும் நிற்க முடியாது. வாக்களிக்கவும் முடியாது.
இந்தியாவில் வாக்களிக்கலாம்; வாக்களிக்காமலும் இருக்கலாம். அது வாக்காளர் உரிமை. தான் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய வாக்குச்
சாவடிக்குச் சென்று 'நோட்டா'வில் வாக்களிக்கலாம்.
அது உச்சநீதிமன்றம் இந்திய வாக்காளர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமை. 'நோட்டா' என்பது தன் வாக்கைத் தானே செல்லாததாக்குவது. அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது.
தேர்தல், வாக்களிப்பது என்பதெல்லாம் பழைய வழக்கம். பல பழைமையான நாகரிக நாடுகளில் நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருவது. சில நாடுகளில் சீட்டுக் குலுக்கிப் போட்டு ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் முறை பிரெஞ்ச் நாட்டில் தொடங்கியது. பிரெஞ்ச் புரட்சியின் வழியாக பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது. அரசியல் என்பது குடும்பப் பாரம்பரியம் கொண்டது இல்லை. அது எல்லா குடிமக்களுக்குமானது.
ஒரு குடிமகன் தன்னுடைய அறிவு, ஆற்றல், சமூக நீதி கோட்பாடுகள், பொருளாதார சிந்தனைகள் முற்போக்கு எண்ணங்களால் புதிய அரசை ஜனநாயக ரீதியில் கட்டமைக்க தேர்தல்தான் வாய்ப்பளிக்கிறது. எனவே இதுவரையில் நடைமுறையில் இருந்த எல்லா ஆட்சி முறைகளையும்விட, தேர்தல் வழியாக அமைதியான முறையில் ஆட்சிக்கு வரும் முறையே சிறந்தது என்று பல நாடுகளிலும் தேர்தல் நடைமுறையில் இருக்கிறது.
அதனை நவீனத்துவப்படுத்தி, குறைபாடுகளை நிவர்த்தி செய்து நடைமுறையில் எளிதாக்கி இருக்கிறார்கள். தேர்தல் சீர்திருத்தங்கள் தேர்தல் மீது மக்களை நம்பிக்கைக் கொள்ள வைத்து வருகின்றன.
இந்தியா 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட நாடு. எனவே தேர்தல் அடிக்கடி நடைபெறும் நாடு. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று பதவியை அடைந்தவர்கள் திருப்தியுற்று விலகிக் கொள்வது இல்லை. மறுபடியும், மறுபடியும் தேர்தலுக்கு நின்று பெரிய பெரிய பதவிகளை அடைய முயற்சி செய்கிறார்கள்.
தேர்தல் வெற்றி பலரை வாழ்க்கையின் உச்சத்திற்குக் கொண்டு போய் இருக்கிறது. அதிக காலம் சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் அறிவு, அனுபவம் இளைய தலைமுறைக்குப் பயன்படும். அதற்காகவே தேர்தலில் நிற்கிறோம் என்று சமாதானம் சொல்கிறார்கள்.
பல தலைவர்களைத் தேர்தல் புரட்டிப் போட்டு இருக்கிறது. அவர்கள் சாதாரண மனிதர்களிடம் தோற்றுப் போய் இருக்கிறார்கள். ஜனநாயக தேர்தலில் எது வெற்றி பெறும் - யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது.
டாக்டர் அம்பேத்கர் இரண்டு முறை பொதுத் தேர்தலில் நின்றார். இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டார். அவரது திறமை நாட்டுக்கு அவசியம் தேவை என்று பட்டதால் மாநிலங்களவை உறுப்பினராக்கிக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு தலைவர் ப. ஜீவானந்தம், அண்ணாதுரை, காமராஜர் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட தலைவர்கள். இவர்களைப் போன்று பல பெரும் தலைவர்கள் - தியாகிகள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
இந்தியா பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடு. மக்களில் பாதி பேருக்கு மேல் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். படிப்பு இல்லை. வேலை கிடையாது. மலைப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் வாழும் லட்சக்கணக்கானவர்கள் தேசிய மைய நீரோட்டத்தில் கலக்க முடியாமல் தனிமைப்பட்டுப் போய் இருக்கிறார்கள்.
அம்மக்களுக்கு வாக்குரிமையின் வலிமை பற்றி அதிகம் தெரியாது. எனவே அரசியல் கட்சியினர் தந்திரமாக பலவிதமான ஆசை வார்த்தைகளாலும், பணத்தாலும் அவர்களைத் தங்களுக்கு வாக்களிக்க வைத்து விடுகிறார்கள்.
நகரங்களில் வாழும் மத்திய, நடுத்தர மக்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் லஞ்சம், ஊழலால் வெறுத்துப் போய்விட்டார்கள். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வரிசையில் நின்று வாக்களித்தும் தங்கள் வாழ்க்கையில் வளம் காணாததால் வெறுப்புற்று ஒதுங்கி இருக்கிறார்கள்.
அவர்களின் உணர்வுகளை, மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற காரணத்தை அலசி ஆராய்ந்து அவர்களின் குறைகளை களைய முயற்சி செய்ய வேண்டும்.
அதை விட்டு விட்டு அவர்கள் அரசியலையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும்போது, வாக்களிக்காத உங்களுக்கு அரசாங்கத்தை குறை கூற, விமர்சிக்க உரிமையில்லை என்பது மக்களையும், ஜனநாயகத்தையும் நிந்தனை செய்வதாகும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com