பயிரை மேயும் வேலிகள்!

திராவிட கட்சிகளின் தேர்தல் விளையாட்டில் அம்பயர் தேர்தல் ஆணையம் ஒரு கூக்ளி அடித்துள்ளது.

திராவிட கட்சிகளின் தேர்தல் விளையாட்டில் அம்பயர் தேர்தல் ஆணையம் ஒரு கூக்ளி அடித்துள்ளது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் என்ற இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் அடித்த பிறகு தேர்தல் ஆணையம் இப்போது திராவிட இயக்கங்களின் திருவிளையாடலால் மூன்றாம் முறையாக ராதாகிருஷ்ண நகர் தேர்தலை ரத்து செய்திருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரûஸக் கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தையும், திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமாகவே நீடிக்க வேண்டும் என்ற பெரியார் ராமசாமியின் ஆசையையும் வழித்தோன்றல்கள் கேட்காத காரணத்தால் வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது என்று வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசுபவர்களின் வாரிசுகளால் தமிழகமே தலை குனிந்து நிற்கிறது.
தாழ்ந்தது தமிழகம் அல்ல, வீழ்ந்தது தமிழனின் மானமும் மரியாதையும் என்பதை சுயமரியாதை வாரிசுகள் உணராமல் போனது மிகப்பெரிய சோகம்.
சில தேர்தல்களுக்கு முன்னால், தேர்தலில் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி சொன்னதற்கு, அவர் தேர்தலில் பணம் கொடுப்பவர்களை ஊக்குவிக்கிறார் எனப் பணம் கொடுத்தவர்கள் ஒப்பாரி வைத்தது தேர்தலில் ஒரு நகைமுரண். தேர்தலில் பணம் கொடுப்பதை திருமங்கலம் பார்முலா என சொல்லிச் சொல்லித் தனயனுக்குப் புகழ் சேர்த்து விட்டார்கள். உண்மையில் எல்லா புகழும் ஆண்டவனுக்கே (தந்தைக்கே).
1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் பெருவாரியாக தோற்ற பொழுது பழுத்த பக்திமான் இலஞ்சி அகிலாண்டம் பிள்ளை, சிதம்பரம் பிள்ளை, தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளராக தி.மு.க.வின் கதிரவன் என்கிற சம்சுதீனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அந்த மகிழ்ச்சி காங்கிரஸýக்கு நீண்ட நாள் நிலைக்கவில்லை. பிள்ளை மரணமடைய தி.மு.க. ஆட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தல் தென்காசியில். மீண்டும் சம்சுதீன் என்ற கதிரவன் தி.மு.க. வேட்பாளராகக் களம் இறங்கினார்.
காமராஜர் தலைமையில் சி. சுப்பிரமணியம் மேற்பார்வையில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் திருமலைக்குமார் தேர்தலை சந்தித்தார். குற்றாலத்தில் காமராஜர் ஆட்சியில் மிகச்சிறப்பாகக் கட்டப்பட்ட சுற்றுலா விடுதியில் இருந்து அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சரின் கூட்டணித் தலைமையில் அனைத்துத் தேர்தல் விதிமீறல்களும் அரங்கேறின.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற வேண்டும் என்கின்ற புதிய தேர்தல் விதி ஆளுங்கட்சியால் அங்கீகரிக்கப்பட்டு முதலில் செயல்படுத்தப்பட்டது தென்காசியில்தான்.
இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தோற்பது என்கிற விதிக்கு சில விலக்குகள் உண்டு. காமராஜர் சந்தித்த நாகர்கோவில், எம்.ஜி.ஆர். தனியாக சந்தித்த திண்டுக்கல் முதல் இடைத்தேர்தல் என நாடாளுமன்ற தேர்தல்களிலும், 1989-இல் மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு சட்டப்பேரவை தேர்தல்களும்தான் அவை.
இந்தப் பட்டியலில் அண்ணாநகர், மயிலாடுதுறை இடைத்தேர்தல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இடைத்தேர்தல்கள் அவை. அன்றைய விலைவாசி மற்றும் பொருளாதார சுழற்சியை கருத்தில் கொண்டு 1969-இல் ஓட்டுக்கு ரூ.5 விநியோகிக்கப்பட்டது.
பின்னர் இது ஆரத்தி பணம் ரூ.10, ரூ.50/-, ரூ.100/- என அசுரவளர்ச்சி அடைந்தது. இதனால் ஒரே ஆரத்தியே மூன்று நான்கு வீடுகளுக்கு பாஸ் செய்யப்படும். ஆரத்திக்குப் பணம் கொடுப்பதற்கு தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்ட, வேட்பாளருக்கு பின்னால் வருபவர் யார் வீட்டில் எல்லாம் ஆரத்தி கொட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கதவைத் தட்டிக் காசு கொடுக்கும் கலாசாரம் தோன்றியது.
இத்தாலிய நாட்டு அரசியல் சாணக்கிய மாக்கியவெல்லி தகடு தத்தங்கள் செய்து ஆட்சியைத் தக்க வைப்பது எப்படி என விலாவாரியாக எழுதியுள்ளார். அதன் தமிழ் பதிப்புதான் நாம் பார்க்கும் நாடகங்கள். திருப்பரங்குன்றம் தேர்தல் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினரின் மரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. கொள்கையில் மாறுபடாத திராவிட இயக்கங்கள் இரண்டும் வஞ்சனை இல்லாமல் காசை வாரி வழங்கின.
தேர்தல் முடிந்த பிறகு தி.மு.க.வை சேர்ந்த எனது வழக்கர் என்னைப் பார்க்க வந்தார். "ஓட்டுக்கு எவ்வளவு வாங்கினாய்' எனக் கேட்டேன். பளிச்சென்று சொன்னார் ரூ.500/-. "நீ கட்சிக்காரன் தானே. உனக்கு உன் கட்சி மீது விசுவாசம் கிடையாதா? காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடலாமா?' என்று கேட்டேன்.
"ஓட்டுக்குக் காசு கொடுக்க மேலிடத்தில் இருந்து மொத்தமாகப் பணம் வருகிறது. ஓட்டுக்கு ரூ.1,000/- கொடுக்காமல் நீ கட்சிக்காரன் தானே ரூ.500 வாங்கிக் கொள் என கொடுத்தார்கள், ஏற்கெனவே வட்டச் செயலாளர் ரூ.500 எடுத்து விட்டார். நான் வேண்டாம் என்றால் வட்டச் செயலாளர் மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு விடுவார்' என்றார்.
"நீ யாருக்கு ஓட்டு போட்டாய்?' எனக் கேட்டேன். மீண்டும் பளிச் "உதயசூரியன்'. "தி.மு.க.வும் காசு கொடுத்தும் எப்படி நீங்கள் தோற்றீர்கள்' எனக் கேட்டேன். "என்ன செய்ய அ.தி.மு.க. தலைக்கு ரூ.2,000/- கொடுத்து விட்டார்களே!' என்றார் அவர்.
ஒரு அமெரிக்க வரலாற்று ஆசிரியர் சொன்னதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாக்கிய வெல்லியின் தகடுதத்த அரசியல் காலத்தால் அழியாதது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் மாக்கிய வெல்லியை படித்தவர்கள் அவரை விட அவருடைய கொள்கைகளைச் சிறப்பாக கையாண்டதால் மாக்கிய வெல்லி பரிதாபமாகத் தோற்றுப்போனார்.
சூட்சுமம் புரிகிறதா நண்பர்களே! ரூ.5, ரூ.100 ஆகி, ரூ.200 ஆகி, ரூ.1,000 ஆகி பரிணமித்து திருமங்கலத்தில் ரூ.2,000/-, ராதாகிருஷ்ண நகரில் ரூ.4,000/- ஆக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் தமிழ்ப் பத்திரிக்கைகளின் பங்கு மகத்தானது. அன்றாட விலைவாசியை வெளியிடுவதுபோல், அங்கு அவர்கள் காலையில் இவ்வளவு கொடுத்தார்கள். இங்கு இவர்கள் மாலையில் இவ்வளவு கொடுத்தார்கள் என விலாவாரியாக எழுதி மோடியின் நடவடிக்கையில் குறைந்து போயிருந்த பணப் புழக்கத்தை இலகுவாக்கினார்கள்.
எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தில் பாளையங்கோட்டை இடைத்தேர்தலில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத இராம வீரப்பனும் மண்ணின் மைந்தரான தி.மு.க.வின் ஏ.எல். சுப்பிரமணியமும் மோதினார்கள்.
ஆளுங்கட்சியின் சார்பாகப் பணமழை கொட்டியது என்றால் தி.மு.க. சிறிதும் சளைக்கவில்லை. உள்ளாட்சிகள் அனைத்தையும் கையில் வைத்திருந்தனர். எனவே தி.மு.க.விலும் பணப் புழக்கத்துக்குப் பஞ்சமில்லை. தி.மு.க. இடைத்தேர்தலைப் புறக்கணிக்க பின்னர் முடிவு எடுத்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்துக்களில் தி.மு.க. பெருவாரியானச் சீட்டுகளை அள்ளியபோது, துவண்டுப் போயிருந்த தி.மு.க.விற்கு புத்துயிர் கிடைத்தது.
தனது தோல்வியைப் பற்றி ஆராய அன்றைய மேலவை உறுப்பினர் அனங்காபுத்தூர் ராமலிங்கம் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ராமலிங்கம் ஒரு சட்டப்பேரவை கமிட்டிக் கூட்டத்திற்குப் பின் என் கருத்தைக் கேட்டார். சொன்னேன். என் கருத்தைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே "தோல்வியை ஆராய வேண்டாம்' எனச் சொன்னதாக அனங்காபுத்தூரார் என்னிடம் சொன்னார்.
நான் சொன்னது இது தான்: "எம்.ஜி. ஆர். என்ற பிம்பத்தால் அ.தி.மு.க. இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களே அதை உடைத்து மாநகராட்சியில் இருந்து பஞ்சாயத்து வார்டு வரை சீட்டுக்கு இவ்வளவு என நிதி அனுப்பியதால், தலைமையில் இருந்து செய்ததால் கைக்காசு போட்டு சின்னம் வரைந்த தொண்டன் எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் பணியாளனாக மாறியதுதான் உங்கள் வீழ்ச்சிக்குக் காரணம்'.
எனக்குத் தெரிந்து வழக்குரைஞர் தேர்தலில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட ஒரு நண்பரிடம், "இது சரியா?' எனக் கேட்டேன். "நான் கேட்கவில்லை. அவராக என் டேபிளில் வைத்து விட்டுப் போய் விட்டார்' என்றார் வழக்குரைஞர். "சரி, உனக்குப் பணம் கொடுத்தவருக்கு ஓட்டு போடாமல் இருந்திருக்கலாமே' எனக் கேட்டேன். "அது எப்படி சார்? பணம் கொடுத்து விட்டாரே, ஓட்டு போடாமல் இருக்கலாமா' என பதில் வந்தது. அவருக்கும் ஓட்டுக்குப் பணம் வாங்கியதாகத் தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்த பெண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இடைத்தேர்தல் தில்லுமுல்லுகளைத் தடுக்க டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்துகளைக் கேட்டு மக்கள் மாற வேண்டும். இல்லாவிட்டால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் அனைவரும் நடமாட ஆதார் கார்டு அவசியம் என உத்தரவிட்டு, தகுந்த காரணமில்லாமல் வெளியில் இருந்து வந்திருப்பவர்களை உடனடியாகத் தடை செய்து, மீறுபவர்களைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் நாளில் மட்டும் வெளியூர் ஆட்கள் உள்ளே இருக்கக் கூடாது எனச் சொல்வது, தேர்தல் ஆணையம் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும்.
அரசியல்வாதிகள் என்ற வேலியே பயிரை மேய்ந்தால் பணத்துக்கு அலையும் பயிர்களைப் பற்றி என்ன சொல்ல!

கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com