அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு!

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இளம் துறவி யோகி ஆதித்யநாத் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இளம் துறவி யோகி ஆதித்யநாத் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். தனிமனித ஒழுக்கம் என்று பார்க்கும்போது அவர் அப்பழுக்கற்றவர். கோரக்பூரிலிருந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு சந்நியாசி. குடும்பப்பற்றில்லாதவர். நேற்று வரை அவர் உடன் பிறந்த சகோதரி கூலி வேலை செய்ததாகவும் தகவல்.
இருப்பினும்கூட, 'மாட்டு இறைச்சிக்காகப் பசுவைக் கொலை செய்தால் ஆயுள் தண்டனை' என்பது நெருடலாயுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் மேலும் ஒருபடி உயர்ந்து, 'பசுவைக் கொல்வோருக்கு தூக்கு தண்டனை' என்று அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தும், ராமன் சிங்கும் இப்படிப்பட்ட கொடுங்கோல் சட்டங்களைப் போடுவது அழகல்ல.
இந்தியாவில் மாட்டிறைச்சிக்குத் தடை வந்த வரலாறை கவனித்தால், அது புத்த மதத்துடன் தொடர்புடையது என்பதை அறியலாம். ஆனால் அன்றும் இன்றும் உள்ள வித்தியாசம் முரண்படுகிறது.
அன்று பொருளாதார மேம்பாட்டுக்காக மதம் தடை செய்தது. இன்று மத மேம்பாட்டுக்காகப் பொருளாதாரம் பலியாகிறது.
சொல்லப் போனால், இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் மாட்டிறைச்சிக்குத் தடை இருந்தது. வரலாற்றில் இந்தியா இந்துமத நாடு என்றால், சீனாவை புத்த மத நாடு என்று சொல்ல வேண்டும். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீகர், ஹ்யூன் த்ஸாங் (ஹூவான் ஸ்வாங்?) நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த மதம் பயின்று, பெளத்த நூல்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்து இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை சீனாவில் பரப்பினார். பின்னர் புத்த மதம் ஜப்பானிலும் வேறுபல கிழக்காசிய நாடுகளிலும் வேரூன்றியது.
'சுத்த நிபாடம்' என்ற பெளத்த மத நூலில் உள்ள ஒரு செய்தி: 'கால்நடைகள் நமது நண்பர்கள். பெற்றோர்களைப் போலவும், உற்றார் உறவினர்களைப் போலவும் விளங்கும் இவையே, உழவுத் தொழிலுக்கு அடிப்படை. இவை உணவையும், பலத்தையும் உடல் பொலிவையும், இன்பத்தையும் அளிக்கின்றன. இதை அறிந்த பண்டைய பிராமணர்கள் கால்நடைகளைக் கொல்வது இல்லை.' (சுத்த நிபாடம், 295 - 96) மேற்கூறிய வாசகம் புத்த மதச் செய்தி என்றாலும் மாட்டிறைச்சி உண்டால் பாவம் என்ற கருத்து இல்லை. எனினும் மா சேதுங் அறிக்கையில் அது பாவச் செயல் என்று மறைமுகமாக எடுத்துக் காட்டியுள்ளது.
யூனானில் ஒரு விவசாயக் கிளர்ச்சி நிகழ்ந்தது. அதைப்பற்றி 1927-இல் மாவோ அறிக்கை கூறுவதாவது: 'விவசாயிகளுக்கு உழவு மாடுகள் அரிய செல்வம். இப்பிறவியில் கால்நடைகளைக் கொல்பவர்கள் மறுபிறவியில் கால்நடைகளாகப் பிறந்து கஷ்டப்படுவார்கள் என்று மதம் போதிப்பதால் கால்நடைகளைக் கொல்ல வேண்டாம்'.
இவ்வாறு மதச் செய்தியைக் கூறித்தான் மாவோ சீன மக்களைத் திருத்தினார். மா சேதுங் பொருளாதாரக் காரணத்திற்காகவே மதச் செய்தியைப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர் சீனாவில் விவசாய சங்கங்கள் எழுச்சியுற்றபோது, மாட்டு நலன்களுக்காகக் கொள்கைகளை வகுத்தார்கள்.
நகரங்களில் மாடுகள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்கள். சியாங்க்டன் நகரில் ஐந்து மாட்டிறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. தள்ளாமை, நோய் காரணமாகக் கொல்வதற்கு மட்டும் ஒரு கடை அனுமதிக்கப்பட்டது. ஏங்க்ஷான் நகரத்தில் முற்றிலுமாக மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டது.
ஒரு விவசாயியின் பசு கால் ஒடிந்து நடக்க முடியாமல் படுத்துவிட்டாலும்கூட, அதை கொல்ல வேண்டுமானால் விவசாய சங்கத்தின் அனுமதி தேவை. சீனத்து விவசாயிகள் பால், தயிர், பாலடைக்கட்டி எதையுமே உண்பது இல்லை.
இவையெல்லாம் பழைய செய்திகள். விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் வந்தபின் சீனாவில் கால்நடை எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இன்றைய சீனர்கள் புத்த மதத்தைக் கடைப்பிடித்தாலும்கூட பாம்பு, எலி, தவளை என்று எல்லா ஜீவராசிகளையும் சுவாஹா செய்கிறார்கள். மாட்டையா விட்டு வைப்பார்கள்? இந்திய நிலையை கவனிப்போம்.
இந்தியாவிலும் வரலாற்று அடிப்படையில் ஆரியப் பண்பாட்டில் பிராமணியம் செல்வாக்கிழந்து, க்ஷத்திரியம் மேலோங்கிய நிலையில், மெளரியப் பேரரசர் அசோகர் ஆடு, மாடு, குதிரை வெட்டும் யாகங்களுக்குத் தடை செய்து புத்த மதம் தழுவினார். புத்தர் சாக்கிய வம்சத்தில் வந்த க்ஷத்திரிய மன்னர். சாக்கியர்கள் கலப்படமில்லாத ஆரியப் பழங்குடியினர் என்று வரலாறு கூறுகிறது.
நாட்டில் உணவு உற்பத்தி உயர, ஆடு மாடுகளைக் கொலை செய்து யாகம் நடத்தும் மரபுகளுக்குத் தடை விதித்து அசோகர் பிறப்பித்த ஆணை, 'பசு, காளை மற்றும் பால் தரும் வீட்டு மிருகங்களைக் கொல்வோர், குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவர்....' அசோகரின் இதே ஆணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்து, 'பசு, கன்று, பால் வழங்கும் மிருகங்கள், உழவு மாடுகள் ஆகியவற்றைக் கொல்லக் கூடாது' என்று கூறுகிறது. இதில் பால் வழங்கும் மிருகங்களான ஆடு, ஒட்டகம், கழுதை போன்றவையும் அடங்கும்.
விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகமாகாத காலகட்டத்தில் பொருந்திய பசுவதைத் தடுப்புச் சட்டம் இப்போது பொருந்துமா? தமிழ்நாட்டில் கறவை மாடுகளை வளர்க்கும் விவசாயிகளின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கறவை நின்ற பின்னர் பசுங்கன்று கிடேறி என்றால் வளர்ப்பார்கள். காளைக்கன்று என்றால் விற்றுவிடுவார்கள். 4, 5 ஈத்துக்களுக்குப் பின் கிழடு தட்டிப்போன பசுக்கள் சினை பிடிக்காத சூழ்நிலையில் தொடர்ந்து வளர்க்கமாட்டார்கள். விற்றுவிடுவார்கள்.
அப்படி விற்கப்படுபவை முழுவதும் இறைச்சிப் பயனுக்கே. இன்றுள்ள வறட்சிச் சூழ்நிலையில் கறவைப் பசுக்களுக்கே முழுமையாகத் தீவனம் வழங்குவது பெரும்பாடாயுள்ளது. தீவனத் தட்டுப்பாட்டை மாடு வளர்ப்பவர்கள்தான் அறிவார்கள். கறவை மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு, பொட்டு, பருத்திக்கொட்டை, குச்சிப் பிண்ணாக்கு விலையெல்லாம் வாங்கும்படி இல்லை.
இவை போகட்டும், வெற்று மாடு உயிர்வாழ வைக்கோல் கூளம்கூட கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு கையால் தூக்கும் அளவுள்ள ஒரு கட்டு ரூ.100. மழை இல்லாததால் பச்சையும் இல்லை. வெற்று மாட்டுக்குத் தீனிபோட முடியாமல் பட்டினி போட்டுக் கொல்வதைவிட கசாப்புக்கு விற்பதே மேல் என்று முடிவு செய்கிறார்கள்.
இறைச்சிக்குப் போகாமல் வெற்று மாடுகளைக் காப்பாற்ற வேண்டுமானால் நாளொன்றுக்கு 12,000 கோடி ரூபாய் வேண்டும் என்று மதுராவில் உள்ள பசு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
2015-இல் கறவைப் பசுக்களின் தொகையைப் பெருக்குவதற்குக் காளையை ஈன்றாமல் கிடேறியை மட்டுமே ஈனக்கூடிய காப்புரிமை செய்யப்பட்ட காளை விந்துவை அமுல் பால் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். ஜோதி இறக்குமதி செய்து குஜராத்தில் வழங்கி வருகிறார்.
விவசாயத்திற்கு இயந்திரங்கள் அறிமுகமாகிவிட்டன. காளைகளின் எண்ணிக்கைக்கு நிகராக டிராக்டர்களும், டில்லர்களும் உற்பத்தியானதால் இப்படிப்பட்ட இயந்திரங்கள் உழவு மாடுகளின் தேவையைக் குறைத்துவிட்டன. ஆகவே, பசுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதே நமது இலக்கு என்று ஜோதி பேசியுள்ளார்.
நாட்டுப் பசு நாட்டுப் பசு என்று நாம் பேசினாலும்கூட இந்தியாவில் கலப்பினப் பசுக்களே அதிகம். எருமை என்று எடுத்துக்கொண்டால் இந்தியாவில் நூற்றுக்கு நூறும் நாட்டு இனங்களே.
லண்டன் எருமை, டென்மார்க் எருமை என்றெல்லாம் கிடையாது. 'தில்லி எருமை' என்று முர்ரா, நீலி ரகங்களைக் குறிப்பிடுவார்கள். அவை இந்திய இனமே. பசு ஆய்வு நிறுவனம் உள்ளதைப்போல் எருமை ஆய்வு நிறுவனமும் தேவை.
இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நாடு. ஆண்டுதோறும் சுமார் 60,000 கோடி அமெரிக்க டாலர் வரவு உள்ளது. அந்நிய வர்த்தகத்தில் அந்நியச் செலாவணியை தாராளமாக வழங்கும் பொருளியல் காரணியை கவனித்தல் நலம்.
வேண்டுமென்றே பசுக்களை யாரும் கொல்வதில்லை. நோய்கள், கிழட்டுத்தன்மை காரணமாகக் கொல்லப்படும் நிலைக்கு அவை ஆளாகிவிட்டன. உழவு மாடுகளின் தேவையே இன்று நின்று போனதால் கன்றுகளாயிருக்கும் போதே காளைகள் கொல்லப்படுகின்றன.
எனினும் அபூர்வமாக ஒரு சிலர் பாரம் இழுக்கவும், ஜல்லிக்கட்டுக்கும் நல்ல நாட்டு ரகக் காளைகளை வளர்ப்பார்கள். பொலிகாளைகளாக வளர்க்கப்படுபவை கலப்பினங்களே. பசுவதைத் தடுப்புச் சட்டம் இருந்தாலும் எல்லா மாநிலங்களிலும் அதை அமல்படுத்துவது இல்லை. ஏற்றுமதியாகும் பசு, காளை இறைச்சி 'எருமை இறைச்சி' என்ற லேபிளில் நாடு கடந்து செல்லும்.
இன்று உத்தரப் பிரதேசத்திலும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களைக் கொல்வோருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என்று பேசுவதெல்லாம் அரசியல். 'நான் கொன்றது எருமையைத்தான் பசுவை அல்ல' என்று குற்றவாளிகள் தப்பும் வழியுண்டு.
இந்திய அரசியலமைப்புச் சட்டதில் வழங்கப்பட்டுள்ள பசுப்பாதுகாப்பு அன்றையத் தேவை. அன்று விவசாயத்தில் இயந்திரங்கள் தோன்றவில்லை. அன்று மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இன்று மாட்டிறைச்சியின் தேவை, குறைந்துவிட்ட மேய்ச்சல் நிலம், தீவனப்பற்றாக்குறை போன்ற பொருளாதாரக் காரணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மதத்தை முன்னிலைப்படுத்துவது சரியான வாதம் அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com