கொசுக்கள் ஜாக்கிரதை

இந்தியாவில் மலேரியா, டெங்கு, பைலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்கடி தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர்.

இந்தியாவில் மலேரியா, டெங்கு, பைலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்கடி தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். உலகளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கும் மேல் இந்த நோய்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
கடந்தாண்டு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாகப் பரவிய ஜிகா வைரஸ் உலகையே அலற வைத்திருக்கிறது. இந்நோயால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கின்றன.
வளர்ந்தபின் அவற்றின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்க் கிருமிகளைப் பரப்புகிற ஏடஸ் எஜிப்தி என்ற வகை கொசுவே இந்த ஜிகா வைரஸையும் பரப்பி வருகிறது.
தாய்லாந்து, மாலத்தீவுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளதால் இந்தியாவுக்குள்ளும் இந்த நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு நோய் பரவினால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதையடுத்து ஜிகா வைரஸ் கிருமிகளைப் பரப்பும் ஏடஸ் கொசுக்களை அழிக்கும் பணிகள் மத்திய அரசால் முடுக்கிவிடப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென தலைகாட்டும் மர்மக் காய்ச்சல் ஏராளமானோரை சத்தமின்றி பலிவாங்கி வருகிறது. சுற்றுப்புற சுகாதாரத்தில் நாம் காட்டும் அலட்சியமே இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம். நோயுற்ற மனிதரையோ, விலங்குகளையோ கடிக்கும் கொசுக்கள் மற்ற உயிர்களுக்கு நோய் கிருமிகளைப் பரப்புகின்றன.
பொதுவாக உடலில் தூய்மையான ரத்தம் இல்லாதவர்களையும், உடலில் அதிகளவில் கழிவுகள் சேர்ந்திருப்பவர்களையும் தான் கொசுக்கள் கடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே உடல் தூய்மையை பராமரிப்பது அவசியம்.
வசதி படைத்தோர் கொசுக்கடி தொடர்பான நோய்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடிகிறபோது, கொசுக்கடிதானே என்ற அறியாமையாலும், வசதிக் குறைவாலும் உரிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் பெருவாரியான மக்கள் அவதிப்படுகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியுள்ள தொழிலாளர்கள் தங்களுக்கு வரும் நோய்களால் மருத்துவமனைகளுக்கு அலையும் நிலை அதிகரித்துள்ளது.
கொசுக்களை விரட்ட பெரும்பாலும் கொசுவர்த்திச் சுருள், திரவ, எலக்ட்ரானிக் கொசு விரட்டிகளின் பயன்பாடே அதிகளவில் உள்ளது. சிலருக்கு இவற்றிலிருந்து வரும் புகை ஒத்துக்கொள்வதில்லை.
ஆஸ்துமா, மூச்சிறைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் கொசுவர்த்திகள் வித்திடுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். கொசுவர்த்தி எரியும்போது உணவுகளை மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் உணவில் ரசாயனம் சேர்ந்து உடல் நலக் கோளாறு ஏற்படும்.
ஒரு கொசுவர்த்தி சுருள் வெளியேற்றும் புகையானது 1000 சிகரெட்டுகளை புகைப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புக்கு இணையானது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர்.
ஒருகாலத்தில் இத்தகைய 'விரட்டி' களைக் கண்டு தலைதெறித்தோடிய கொசுப்படைகள், தற்போது அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், ரத்தம் உறிஞ்சுகின்றன.
எனவே கொசுக்கள் உருவாகும்போதே அவற்றை அழிக்க கொசுப் புழுக்களை மட்டுமே உண்டு வாழும் கம்பூசியா போன்ற மீன்களை கிணறுகள், நீர்நிலைகளில் விட்டார்கள்.
ஆனால், இவ்வகையான தாக்குதல்களையெல்லாம் தாங்கும் சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளன நவீன காலக் கொசுக்கள்.
கொசுவை விரட்ட ரசாயன விரட்டிகளைத் தவிர்க்க விரும்புவோர் இயற்கை முறையில் விரட்டும் வழிகளையும் முயன்று பார்க்கலாம். வீட்டின் ஜன்னல்களில் கொசு நுழையாத அளவுக்கு கம்பி வலைகளை அமைக்கலாம்.
கொசுக்கள் படையெடுக்கும் மாலை நேரங்களில் கதவுகளை மூடி வைத்தாலே பெரும்பாலான கொசுக்களைத் தவிர்க்கலாம். கொசுவலைப் பயன்பாடு நல்ல பலனைத் தரும். காய்ந்த வேப்பஞ்சருகுகளைக் கொண்டு தீ மூட்டி அதில் வரும் புகையால் கொசுக்களை விரட்டலாம்.
மேலும், கொசுக்கள் அறவே வெறுக்கும் துளசி, புதினா போன்ற செடிகளை வீட்டுக்குள் வளர்க்கலாம். நீர் நிரப்பிய கொள்கலனில் கற்பூரத் துண்டுகளைப் போட்டும், நொச்சித்தழை, வேப்பந்தழை, சாம்பிராணி ஆகியவற்றைக் கொண்டு மூட்டம் போட்டும் கொசுக்களை விரட்டலாம்.
கொசுக்களின் வாழ்விடங்களான கிணறுகள், மூடப்படாத தண்ணீர்த் தொட்டிகள், தண்ணீர் தேங்குமிடங்கள், சாக்கடைகள் ஆகிய பகுதிகளின் தூய்மையை அரசு கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.
பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் சுகாதாரக் கேடு உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரக் கேடு உருவாகும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளிலும், வீட்டைச் சுற்றிலும் கிடக்கும் தேவையற்ற பொருள்கள், டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் அகற்றி சுகாதாரம் காக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அரசும் ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு வீடுகளில் மட்டுமின்றி நாடு முழுதும் விரிவடைய வேண்டும்.
கொசுக்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான விலை குறைவான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கொசுக்கடி நோய்களின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com