வளர்ச்சியல்ல, தரமே முக்கியம்!

உலகப் பொருளாதாரத்தை மதிப்பிடுவதற்கும், ஒப்பிடுவதற்கும் பல்வேறு வகையான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) அடிப்படையில் தரவரிசைப்படுத்துவது.
வளர்ச்சியல்ல, தரமே முக்கியம்!

உலகப் பொருளாதாரத்தை மதிப்பிடுவதற்கும், ஒப்பிடுவதற்கும் பல்வேறு வகையான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) அடிப்படையில் தரவரிசைப்படுத்துவது.
உதாரணத்துக்கு, 18.56 லட்சம் கோடி டாலர் ஜி.டி.பி.யுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 11.39 லட்சம் கோடி டாலர் ஜி.டி.பி.யுடன் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. அந்தந்த நாடுகளின் மக்கள்தொகை குறித்து குறிப்பிடாவிட்டால், இந்த ஒப்பீடு உண்மை நிலையைப் பிரதிபலிப்பதில்லை. சீனாவின் ஜி.டி.பி. 132 கோடியாலும், அமெரிக்க ஜி.டி.பி. 32 கோடியாலும் வகுக்கப்பட வேண்டும்.
தரவரிசைப்படுத்த தனிநபர் ஜி.டி.பி. என்பது ஓரளவு பொருத்தமான அளவுகோலாக இருக்கும். 2015-இல் சீனாவின் தனிநபர் ஜி.டி.பி. 8,141 டாலர் ஆகும். இந்த அளவுகோலின்படி, சீனா இரண்டாவது இடத்தில் இருந்து 74-ஆவது இடத்துக்குப் பின்னடைவு கண்டுவிடும்.
அதேபோல, உலகின் வலிமையான பொருளாதார நாடான அமெரிக்கா தனிநபர் ஜி.டி.பி.யான 56,084 டாலருடன் 6-ஆவது இடத்தையே பிடிக்க முடியும். ஆனால், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்கும் முழுமையானதொரு முறை என்று கருத முடியாது.
எனவேதான், வறுமை, சமத்துவமின்மை, மனித வள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை சர்வதேச அமைப்புகள் கையாளுகின்றன. இவற்றில் இருந்து சற்று வேறுபட்டு மக்களுடைய மகிழ்ச்சி, அதிலிருந்து நாடுகளுடைய மகிழ்ச்சி என்ற புதிய அளவுகோல் அண்மையில் சேர்ந்துள்ளது.
மக்களின் மகிழ்ச்சி நிலையை அடிப்படையாகக் கொண்டு 'உலக மகிழ்ச்சி நிலை - 2017' தரவரிசையை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கை தயாரிப்பது 2012-இல் தொடங்கியது.
தங்கள் மக்களின் மகிழ்ச்சியை அளவீடு செய்து, கொள்கைகள் வகுப்பதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு 2011 ஜூலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உறுப்பு நாடுகளை ஐ.நா.சபை கேட்டுக் கொண்டது.
பொருளாதார வளர்ச்சியையும், நீடித்த ஆரோக்கியமான வாழ்க்கையையும் மகிழ்ச்சிக்கான குறியீடுகளாகக் கருதி போலி மனநிறைவு அடைந்துவிடக் கூடாது என்பதுதான் மகிழ்ச்சி அறிக்கை வெளியிடுவதன் நோக்கம். ஜி.டி.பி.யின் வளர்ச்சி என்பதல்ல; அதன் தரமே
மிக முக்கியம். மகிழ்ச்சிக்கான சமூக காரணிகளை ஆழமாக ஆய்வு செய்யும் திசையில் சமீபத்திய அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
155 நாடுகளில் உள்ள மக்களின் தனிநபர் வாழ்க்கை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் மகிழ்ச்சியின் அளவு, மாற்றங்கள் மற்றும் காரணிகள் குறித்து அறிக்கை ஆய்வு செய்துள்ளது.
இதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் 3 ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 1000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு வகையான கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன.
ஒரு குறிப்பிட்ட கேள்வி பின்வருமாறு: ஓர் ஏணியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தரையிலிருக்கும் படி பூஜ்யம். உச்சத்திலிருக்கும் படி எண் 10. உயரத்தில் இருக்கும் எண் சிறந்த வாழ்க்கை நிலையையும், கீழே இருக்கும் எண் மிக மோசமான வாழ்க்கை நிலையையும் பிரதிபலிப்பதாகும். இந்த நேரத்தில் இந்த ஏணியின் எந்தப் படிக்கட்டில் தாங்கள் இருப்பதாக உணர்கிறீர்கள்?
அவர்களிடம் இருந்து பதில் பெற்ற பின், ஒவ்வொரு நாட்டுக்கான சராசரி மதிப்பீட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டது. தனிநபர்களின் மகிழ்ச்சிக்கு குறிப்பிட்ட 6 விஷயங்கள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தின என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தனிநபர் ஜி.டி.பி., ஆரோக்கியமான ஆயுள் (ஆண்டுகள்), சமூக ஆதரவு (பிரச்னை ஏற்படும் நேரங்களில் உதவி கிடைத்தல்), நம்பிக்கை (அரசு, தொழில் நிறுவனங்களில் ஊழல் இல்லாமை), வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதற்கான சுதந்திரம், தாராள மனப்பான்மை (சமீபத்தில் அளித்த நன்கொடை) ஆகியன குறிப்பிட்ட ஆறு காரணிகளாகும்.
இந்தக் காரணிகளின் அடிப்படையிலான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, 155 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. அதில், மிகவும் மகிழ்ச்சிகரமான மக்களைக் கொண்ட நாடுகளாக நார்வே (7.537 புள்ளிகள்), டென்மார்க் (7.522), ஐஸ்லாந்து (7.504), சுவிட்சர்லாந்து (7.494), பின்லாந்து (7.469) ஆகியன முதல் 5 இடங்களைப் பிடித்தன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு (2.693), புருண்டி (2.905), தான்சானியா (3.349), சிரியா (3.462), ருவாண்டா (3.471) ஆகியன கடைசி 5 இடங்களைப் பிடித்தன.
கடந்த 10 ஆண்டுகளில் 0.51 புள்ளிகள் குறைந்துள்ளதன் மூலம் அமெரிக்க மக்களின் மகிழ்ச்சி குறைந்துவருவது அறிக்கையில் தெரிகிறது. வருவாய், ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றில் அதிக மகிழ்ச்சி என்ற திசையில் அமெரிக்கா பயணிக்கிறது.
ஆனால், தனிப்பட்ட சுதந்திரம், குறைவான நன்கொடைகள், அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் ஊழல் அதிகரிப்பு ஆகிய மகிழ்ச்சிக்கான காரணிகளில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைவிட, சமூகக் காரணிகளே மகிழ்ச்சிக்கு முக்கியமானவை என்பதையே இது காட்டுகிறது.
சீனாவின் உதாரணமும் இதையே பறைசாற்றுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் ஜி.டி.பி. 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மக்களின் மகிழ்ச்சி 15 ஆண்டுகள் கடும் வீழ்ச்சியைக் கண்டு, இப்போது மீண்டு வருகிறது. ஆனால், இப்போது மீண்டு வந்தாலும், 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, மகிழ்ச்சியின் அளவு குறைவாகவே உள்ளது.
இந்தியா 4.315 புள்ளிகளுடன் 122-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட, பட்டியலில் 33 நாடுகளே பின்தங்கி உள்ளன. இலங்கை 120}ஆவது இடத்திலும் (4.440), வங்கதேசம் 110}ஆவது இடத்திலும் (4.608), தென் ஆப்பிரிக்கா 101}ஆவது இடத்திலும் (4.829), நேபாளம் 99}ஆவது இடத்திலும் (4.962), பூடான் 97}ஆவது இடத்திலும் (5.011), பாகிஸ்தான் 80}ஆவது இடத்திலும் (5.269) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
155 நாடுகளில் 6 முதல் 7.5 புள்ளிகள் வரை 45 நாடுகளே பெற்றுள்ளன. 5 முதல் 6 புள்ளிகளை 53 நாடுகள் பெற்றுள்ளன. இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் பின்தங்கி உள்ளன. இதன்மூலம் உலகின் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையிலேயே உள்ளனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
அறிக்கையின் பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள நாடுகள் உயர் வருவாய் பிரிவிலும், கடைசி 25 நாடுகள் குறைந்த வருவாய் பிரிவிலும் உள்ளன. இதனால், மகிழ்ச்சிக்கான மற்ற காரணிகள் முக்கியத்துவமற்றவை என்று கருத முடியாது.
நெருக்கடியான நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமூகத்தின் ஆதரவு ஆகியவை ஒருவர் வாழ்க்கையில் தான் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள உதவும். அதேபோல, ஊழல் இல்லாத அரசும், விரைவான நீதியும் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருக்க உதவும். வாழ்க்கையில் முடிவு எடுக்கும் சுதந்திரம் மிகுந்த வலிமையைத் தரும்.
ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளிக்கவும், வலுவான சமூகப் பாதுகாப்பு உள்ள சமூகத்தைக் கட்டமைக்கவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார வளர்ச்சி என்பதைவிட, தரமான வளர்ச்சிக்கே அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. சமூக நீதி இல்லாத வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வழிவகுக்காது.
'வறுமை மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட வளங்கள் 2016: சமச்சீரற்ற தன்மையை எதிர்கொள்ளல்' என்ற அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டது. 2013 நிலவரப்படி, உலகில் 76.7 கோடி பேர் வறுமையில் உழல்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கும் திறனின் அடிப்படையில், 1.90 டாலர் வருவாய் ஈட்டுபவர் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எனில், உண்மையில் வறுமையில் உழல்பவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம் என்பது உறுதி. வருவாயில் சமச்சீரற்ற தன்மை அதிகரிப்பதால் ஏழைகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகின் துன்பத்தை எந்த வகையில் மதிப்பீடு செய்தாலும், வறுமை என்பதே பிரதானமான விஷயமாக உள்ளது. வறுமை என்பதே எல்லாவிதமான நோய்களுக்கும் காரணமாக உள்ளது. உலகின் சில நாடுகள் மகிழ்ச்சியாகவும், சில நாடுகள் மகிழ்ச்சியற்றவையாகவும் உள்ளன.
நாகரிகம் முதிர்ச்சி பெற்றுள்ள 21-ஆம் நூற்றாண்டில், நமது சகோதரர்கள் சிலர் வறுமையில் வாடும்போது மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி சாத்தியமாகும்?
வறுமையை ஒழிப்பதன் மூலமும், பொருளாதார சமச்சீரற்ற தன்மையைக் குறைப்பதன் மூலமும் அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
நிபுணர்களின் கடின உழைப்பால் தயாரிக்கப்பட்ட மகிழ்ச்சி குறித்த இந்த அறிக்கை சில விஷயங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பினும், தங்களது தவறான கொள்கைகள் குறித்து உலக நாடுகள் உணர்ந்து கொள்வதற்கு உதவிகரமாக உள்ளது.
பல தலைமுறைகளாக வறுமையில் வாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை நீண்ட காலத்துக்குத் தள்ளிபோட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com