மாற்றம் தரும் காலம் வரும்

மாற்றங்கள் இயல்பானவை. அவை வளர்ச்சி சார்ந்தவையும்கூட. வாழ்வியல் மாற்றங்கள் வரலாற்று மாற்றங்களை ஆக்கிவிடுவதும், வரலாற்று மாற்றங்கள் வாழ்வியலில் மாற்றங்களை நிகழ்த்திவருவதும்
மாற்றம் தரும் காலம் வரும்

மாற்றங்கள் இயல்பானவை. அவை வளர்ச்சி சார்ந்தவையும்கூட. வாழ்வியல் மாற்றங்கள் வரலாற்று மாற்றங்களை ஆக்கிவிடுவதும், வரலாற்று மாற்றங்கள் வாழ்வியலில் மாற்றங்களை நிகழ்த்திவருவதும் கண்கூடுகண்ணுக்குத் தெரியாத காலம், இதன் மைய அச்சாய் இருந்து செயல்படுகிற விதம் நுட்பமானது.
கால மாறுதலுக்கு ஏற்பக் காட்சி மாற்றங்களை உள்ளமைத்துக் கவிதையில் நாடகம் சமைத்தவர் மனோண்மணியம் சுந்தரனார். அவருக்கு முன்னர் வரை, தெய்வங்களைப் பாடும் தெய்வீக மொழியாக இருந்த தமிழ், அவரால், தெய்வமாகவே உணரப்படுகிறது. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து, அதனை அணங்கு (தெய்வம்) ஆக்கித்துதிக்கிறார்.
இது காலம் உருவாக்கித் தரும் கவின்மிகுந்த பெருமாற்றம். அவரது வாக்கின்படி நோக்கினால், இது காலம் செய்த கருணைக்கோலம்; அந்தக் காலம் என்பதுதான் யாது, அது செயல்படும் விதம் தான் எத்தகையது என்பதைத் தன் கதைப்போக்கில், சொல்கிறார் அவர்.
காலம் என்பது கறங்குபோல் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலாய்
மாற்றிடும் தோற்றம்
துர்முகி விடைபெற்று, ஹேவிளம்பியாகப் புத்தாண்டு பிறந்திருக்கிறது, 60 ஆண்டுகளுக்குப் பிறகு. அதாவது, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டபடி, சூரியனைச் சுற்றியபடி, தொடங்கிய இடத்திற்கே வந்துசேர எடுத்துக்கொள்ளும் கால அளவு காலம் கறங்குபோல் சுழன்று நிலைக்கு வரும் கணம்!
தலைகீழ் மாற்றம் என்று இதனைக்கூறினாலும் தகும் என்றாலும், இது தகுதிசால் மாற்றம் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் நம் கண்முன் நிற்கக் காண்கிறோம்.
விளக்கம் தருகிற விளக்கு, முன்னர்த் தண்டின் மேல் நிற்கும் தட்டில் எண்ணெய் திரியிட்டு ஏற்றப்பெற்று ஒளிர்வதாக இருந்தது. மின்சாரம் வந்த பிறகு ஏற்றப்படுகிற எல்லாவிளக்குகளும் நேர்கீழாக மாறி ஒளிசிந்துகிற நேர்த்தியைப் பார்க்கலாம்.
காலங்காலமாய், கல்லால் ஆன மாவரைக்கும் ஆட்டுக்கல்லில், அடிப்பகுதியான உரல் அப்படியே இருக்க, குழவிப்பகுதியான மேல் பகுதி மட்டும் கையால் பற்றிச் சுழற்றி ஆட்டத்தகுந்ததாக இருந்தது.
காலவேகத்தில் யந்திரமாக அது ஆக்கப்படும்போது, 'கிரைண்டர்' என்ற பெயர் கொண்டு, குழவி அப்படியே இருக்க, அடிப்பகுதியான உரல் மட்டும் சுழன்று ஆடுகிற விந்தையைப் பார்க்க முடிகிறது.
சக்கரம் என்ற மகத்தான கண்டுபிடிப்பு, உலகின் வேகத்திற்கு ஏற்ப எத்தனையோ உருவெடுத்து இயக்குகிற விந்தையை நினைத்துப் பார்க்கலாம்.
தரை அப்படியே இருக்கத் தாள்களாகிய கால்களைக் கொண்டு கடக்கிற செயலை, எளிமையாக்கிய யந்திர அறிவியல் வளர்ச்சி, தாள்களை அப்படியே நிறுத்தி வைத்துத் தரையையே இயங்க வைக்கிறது வியப்பு அல்லவா?
மரத்திலிருந்து பழம் வீழ்வது இயற்கை. விழுந்த பழம் ஏன் மண்ணிலிருந்து மரத்திற்கு ஏகவில்லை என்ற சிந்தனையின் கண்டுபிடிப்புதான் புவியீர்ப்பு விசை.
விஞ்ஞானி தன் சிந்தனையைச் செயல்படுத்திக் காட்ட முயல்கிறான். மெய்ஞ்ஞானி தன் சிந்தனையைச் சொல்லாக்கிச் சிந்திக்க வைக்கிறான். வர்ழ்க்கை இரண்டிற்கும் மையமாகி நிற்கக் காண்கிறோம்.
ஆற்றுவெள்ளம் அடியோடு புரண்டு எழுவதால் தோன்றுவது இயக்கம். அப்படி நிகழ்கிற செயல்பாட்டிற்குப் பாரதி தந்த புதுமைச் சொல், புரட்சி.
பொய்யும் புரட்டும் மலிந்த உலகில் மெய்ம்மையை நோக்கி எழுந்த மகத்தான மாற்றம் இத்தகு புரட்சியை ஏற்படுத்தித் தந்தது. அது தொழிற்புரட்சியாக உருவெடுத்தது. அதன் பயனைக் கணந்தோறும கணந்தோறும் அனுபவித்து மேலேகிறது மானுடம்.
எனினும் அதன் பின்விளைவுகளும் இன்னொரு கோணத்தைச் சிந்திக்கவைக்கிறது. தொழில்களுள் ஒன்றான உழவு, முதன்மையாக இருந்த காலத்தில் அதனை எளிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் முயன்ற தேடுதல் பல்வேறு தொழில்களுக்கு அடித்தளம் இட்டது.
அதன்விளைவாகப் பல்கிப்பெருகிய தொழில் வளர்ச்சி மூலத்தொழிலான உழவினை மெல்ல மெல்ல ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
இருபதாம் நூற்றாண்டில் இந்த உண்மையை, நுட்பமாக உணர்ந்த பாரதி, 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று முழக்கம் ஆக முன்வைக்கிறார்.
அவருக்கு முன்னோடியான வள்ளுவர், இத்தகு புரட்சிகளுக்கெல்லாம் முன்னோடிப் புரட்சியாக உழவையே கருதிப்பார்க்கிறார்.
சுழன்று முன்னேகும் இந்தப் புவியில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும், எழுந்தாலும், அதன் முதன்மையாக இருக்கவேண்டிய தொழல் உழவே என்பது அவர்தம் துணிபு.
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை' என்று உரத்து மொழிகிறார்.
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்'
என்று உழவர்களை முன்வைக்கிறார். தொழுது வாழ்கிறவர்களால் கூட வயிறார உண்டுவிட முடிகிற சூழலில், உழுது வாழ்கிறவர்கள் உண்மையில் வயிறார உண்டு வாழ்கிறார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிற காலம் விரைந்து எழுகிறது.
உழவுதான் மையம். 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்பது அவர்தம் உளக்கிடக்கை.
அவரது பார்வையில் எல்லாமே உழவாககத் தெரிவது ஒரு நுட்பம்.
அவர் காலத்தில், காவல் செய்யும் மன்னவன் உள்ளிட்ட காவலர்கள் ஏந்தும் வில்லும் ஓர் உழவுக் கருவியாகிறது. அது போலவே புலவர்களின் சொல் எழுதிச் செல்லும் எழுதுகோலும் உழவுக் கருவியாகிறது.
வள்ளுவநோக்கில், கவிஞரும் காவலரும் உழவர்களாகவே உணரப்படுகிறார்கள். முன்னவர் வில்லேர் உழவர். பின்னவர் சொல்லேர் உழவர். இருவரும் இணைந்து இயக்குகிற சமுதாயத்தின் விளைச்சல் அறமாக இருக்கவேண்டும் என்பது அவர்தம் ஆவல். அதுவே இயல்பும் ஆகும். அது பிறழ்ந்தால் ஆபத்து பிறக்கும்.
அப்போது எந்தத் திசையிலிருந்தும் எதிராக அம்பு கிளம்பும். அது ஏவுகணையாகவும் வளரும். அதனால், இந்த உழவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் திருவள்ளுவர். சமம் போலச் சொல்லப்பட்டாலும், இதில் ஒருவரைவிடவும் ஒருவர் தனித்துவமிக்கவராக உள்ளார் என்பதையும் அவர் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார்.
உயிர்கொல்லும் அம்பை எய்தும் வில்லேர் உழவரை விடவும், உணர்வைக் கவ்வும் சொல்லேர் உழவரிடம் கவனம் தேவை. முரண்பட்டால் கூடப் பரவாயில்லை. பகைமை கொள்ளாதீர்கள் என்கிறார்.
'வில்லேர் உழவர் பகைகொளினும்
கொள்ளற்க
செல்லேர் உழவர் பகை'.
இந்த அடித்தளத்தில் இருந்துதான் யாரொடும் பகைகொள்ளாதீர்கள் என்று பாங்காக எச்சரிக்கிறார் வள்ளுவர் வழிவந்த கம்பர்.
இந்தப் பகைமைக்கெல்லாம் அடிக்காரணமாக அமைவது பசி. பசிக்குத் தீர்வாகும் உணவை, பறிக்கிற, பதுக்குகிற தனியுடைமை என்னும் பெருங்கொடுமைக்கு எதிராகத் தோன்றிய பொதுவுடைமை என்னும் புதுவுடைமைக்கு அடிப்படைக் காரணம், மனிதர் நோக மனிதர் பார்க்கிற, மனிதர் உணவை மனிதர் பறிக்கிற செயல்பாட்டிற்கு மாற்றாக எழுந்த சிந்தனைதான்.
அதனால்தான், பாரத சமுதாயத்தை வாழ்த்திப் பாடிய பாடலில், அவர் சொன்னார்
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்று. எதனால்?
மனிதர் நோக மனிதர் பார்ப்பதனால் மனிதர் உணவை மனிதர் பறிப்பதனால்.
கனியும் கிழங்கும் தானியங்களும் நித்தம் நித்தம் கணக்கின்றித் தரும் நாட்டில் இத்தகு அவலம், மனிதநேயமற்ற செயல் நிகழலாமா என்று நியாயம் கேட்கிறார் பாரதி.
எல்லார்க்கும் எல்லாமும் இருக்கின்ற இடம் நோக்கி இந்தவையத்தை நகர்த்துவதற்கு முன்னால், எல்லாருக்கும் வயிற்றுக்குச் சோறிருக்கிறதா என்று சிந்திக்கச் செய்கிறார் பாரதி. ஒரு வாய்ச் சோற்றிற்கே வாடுகிற மக்கள் இன்னும் உலகெங்கும் இருக்கிற காலத்தில், வயிற்றுக்கு (வயிறார உண்டு பசிபோக்குகிற) சோறு எல்லார்க்கும் வாய்க்க வேண்டுமே.
'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்' - எப்போது?
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர், அப்போது. அப்போது மட்டுமல்ல, பிறர் பங்கைத் திருடாமல் இருக்கும் போதும்தான் என்கிறார் அவர்.
இன்றைக்குத் தனது பங்காளியான உழவைத் தின்கிறது தொழில். உழவுக்கும் தொழிலுக்கும் ஒருசேர வந்தனை செய்ய வேண்டிய நேரத்தில், உழவுக்கு வஞ்சனையையும் தொழிலுக்கு வந்தனையையும் செய்கிறோமோ என்று கருத வேண்டியிருக்கிறது.
சமமாக இணைந்து முன்னேகும் இந்தத் தண்டவாளத்தின் மேலோட வேண்டிய பொருளாதார ரயில், ஒற்றைத் தண்டவாளமாய்க் குறுகுகிறபோது என்னாகும் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கனிம வளங்களைத்தேடித் தோண்டிப் பயன் கொள்ளும் அதே வேகத்திற்கு ஏற்ப, கனிவகைகளையும் உற்பத்தி செய்யக் கவனம் கொள்ளவேண்டாமா என்று பசித்த மானுடம் வினவுகிறது. அதுதான் வில்லையும் சொல்லையும் இயங்கவைக்கும் காலத்தின் கைவிசை.
மாற்றம் ஒன்றுதான் மாறாத தத்துவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com