கற்றனைத்து ஊறும் அறிவு!

மெசபடோமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய இராக்கியர்கள்தான் உலகில் முதன்முதலில் 'நூலகம்' என்ற அமைப்பினை முறையாக ஏற்படுத்தியவர்கள்.
கற்றனைத்து ஊறும் அறிவு!

மெசபடோமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய இராக்கியர்கள்தான் உலகில் முதன்முதலில் 'நூலகம்' என்ற அமைப்பினை முறையாக ஏற்படுத்தியவர்கள். இதற்குப் பிறகு ரோமானியர்கள்தான் பொது நூலக முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. இதில் ஜூலியஸ் சீசரின் பங்கு மிக அதிகமாக இருந்தது. வசதி படைத்தவர்கள் பலரிடம் உதவிபெற்று கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் பல பொது நூலகங்களைத் திறந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 'லைப்ரரி ஆப் காங்கிரஸ்' நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. 1800-இல் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் சுமார் ஆறுகோடி கையெழுத்துப் பிரதிகளும், லட்சக்கணக்கான நூல்களும் ஒலி-ஒளி நாடாக்களும் உள்ள.
இங்கிலாந்தில் 1602-இல் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகமே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும். அங்கு 11 மில்லியன் நூல்கள் உள்ளன.
நமது இந்தியாவைப் பொறுத்தவரையில் நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா நூலகங்களும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜூன அரசன் உருவாக்கிய 'நாகார்ஜுன வித்யா பீடமும், தொன்மை வாய்ந்தவை. நாகார்ஜுன வித்யா பீட நூலகத்தில் 5 மாடிகளும் 1500 அறைகளும் இருந்ததாக அறியப்படுகிறது.
கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி கி.பி.1122-இல் சோழர் காலத்தில், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், சரஸ்வதி பண்டாரம் என வழங்கப்பட்டது. இந்த நூலகத்தில் பணியாற்றியவர்கள் சரஸ்வதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.
இந்தியாவின் தொன்மையான நூலகங்களில் ஒன்றான இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், கிரேக்கம், இலத்தின் முதலிய மொழிகளில் உள்ள ஓலைச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. 1918-இல் தஞ்சை மராட்டிய மன்னரின் வாரிசுகள் இந்த நூலகத்தினை அரசிடம் ஒப்படைத்தனர்.
நமது இந்தியாவைப் பொருத்தவரையில் 1838-இல் தொடங்கப்பட்ட கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் 30 ஏக்கர் பரப்பில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இதேபோன்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகமும் புகழ்பெற்றது. தர்பங்கா மகாராஜாவின் ஆதரவில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசும், யுனெஸ்கோ நிறுவனமும் இணைந்து 1951-இல் உருவாக்கிய தில்லி பொது நூலகம் ஆசியாவிலே மிகவும் பரபரப்பான பொது நூலகம் என அறியப்படுகிறது.
1661-இல் அன்றைய மதராஸில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தங்களுக்கு நூலகம் வேண்டும் என விரும்பினார்கள். தலைமை மதகுரு ஒயிட்ஃபீல்ட் அப்போதைய மதராஸ் கவர்னரையும், வணிகர்களையும் அணுகி தம்முடைய வேண்டுகோளினை முன் வைத்தார்.
கவர்னர், வணிகர்களிடமும், பிரமுகர்களிடம் நிதி திரட்டி, அந்த நிதியில் 'காலிகோ' துணிவாங்கி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். அந்த துணிக்கு மாற்றாக 28 பவுண்ட், 10 ஷில்லிங் மதிப்பிற்கு கம்பெனி புத்தகங்களை அனுப்பியது.
அந்தப் புத்தகங்களைக் கொண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கப்பட்டதுதான் மதராஸின் முதல் நூலகம். அது பொதுமக்களுக்கான நூலகம் அல்ல. மத குருமார்களுக்கும், கம்பெனி அலுவலர்களுக்கு மட்டுமேயானது.
அதன் பிறகு 1671-இல் மசூலிப்பட்டிணத்தில் ரேன்க் பென்னி வால்டர் ஜூக் என்ற மதகுரு மரணம் அடைந்தவுடன் அவர் வசம் இருந்த நூல்கள் கம்பெனியின் அறிவுறுத்தல்படி மதராஸ் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டன.
1675-ஆம் ஆண்டு கும்பெனி இயக்குநர்கள் மதராஸ் கவுன்சிலுக்கு (கவர்னர் உள்ளிட்ட உறுப்பினர்கள்) ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் கோட்டையில் உள்ள நூல்களின் பட்டியல் தயாரித்து, பொதுமக்களுக்கு நூல்களை இரவல் கொடுத்து வாங்க உத்தரவிட்டது. இதற்கு தலைமை மதகுருவே பொறுப்பு.
புத்தகம் இரவல் வாங்குபவர்கள் ஒரு பகோடா பணம் செலுத்த வேண்டும். இதுவே வாசர்களுக்கு நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் நடைமுறைக்கு அடித்தளம் எனலாம். இதன் அடிப்படையில் பார்த்தால் அந்த மதகுருவே மதராஸ் மாகாணத்தின் முதல் நூலகர்!
1860-இல் மெட்ராஸ் மாகாணத்தில் அருங்காட்சியத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் ஒன்றினை கேப்டன் ஜூன்மிட்செல் தொடங்கினார். இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் மிகையாக இருந்த நூற்றுக்கணக்கான நூல்களை அந்த நூலகத்திற்கு அளித்தார்கள்.
1890 வரை அந்த நூலகம் அருங்காட்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1890-இல் அப்போதைய மெட்ராஸ் கவர்னர் கன்னிமாரா பிரபு, மெட்ராஸ் மாகாணத்திற்கு ஒரு பொதுநூலகம் தேவை என உணர்ந்து அதற்கு அடிக்கல் நாட்டினார்.
1896-ஆம் ஆண்டு அந்த நூலகம் திறக்கப்பட்டபோது கன்னிமாரா பிரபு கவர்னராக இல்லை என்றாலும் அவருடைய பெயரே அந்த நூலகத்திற்கு சூட்டப்பட்டது! தற்போது கன்னிமாரா நூலகம் தேசத்தின் நான்கு முக்கிய நூலகங்களுள் ஒன்று.
ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அடையாறில் ஓய்வு இல்லம் அமைத்துத் தங்கியிருந்தார். இவர் ஒரு சுற்றுலாப் பிரியர். இவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, அரிய ஓலைச் சுவடிகள், தொன்மையான நூல்கள் பலவற்றைச் சேகரித்து, தனது இல்லத்திலே 1886-இல் ஒரு நூலகத்தினை தனக்காக நிறுவினார்.
பல அரிய நூல்களைக் கொண்ட அந்த நூலகம் தற்போது அடையாறு பிரம்ம ஞான சபையின் பராமரிப்பில், 'அடையாறு நூலகம்' என அறியப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
சென்னையில் 1847-இல் தொடங்கப்பெற்ற கீழ்த்திசை கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடி நூலகம், 1914-இல் தொடங்கப்பெற்ற சென்னைப் பல்கலைக்கழக நூலகம், ரிப்பன் கட்டிடத்தில் இயங்கும் 'சுங்குவார் நகராட்சி நூலகம்' உ.வே.சா. நூலகம், மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா நூலகம் ஆகியவை தனித்தன்மை கொண்ட நூலகங்களாகத் திகழ்கின்றன.
2010-இல் தொடங்கப்பெற்ற சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவில் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்ட நூலகமாகவும் திகழ்கிறது!
சுதந்திர இந்தியாவில், முதன்முதலில் பொது நூலகங்களை அங்கீகரித்து 1948-இல் சட்டம் இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இதனை அடுத்து ஆந்திர மாநிலமும் (1960) கர்நாடக மாநிலமும் (1965) சட்டம் இயற்றின என்றாலும் இதுவரை 19 மாநிலங்கள் மட்டுமே இதுபோன்ற சட்டங்களை இயற்றியுள்ளன.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 1972-இல் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் 32 மாவட்ட நூலகங்கள், 1664 கிளை நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்கள், 1795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள் கன்னிமாரா பொதுநூலகம் என்று மொத்தம் 4040 நூலகங்கள் செயல்படுகின்றன.
நூலகம் அமைத்தல், நிர்வகித்தலில் அறிவியல் பூர்வமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதன் முன்னோடி தமிழ்நாட்டைச் சேர்ந்த நூலகர் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் கோலன் பகுப்புமுறையில் நூலகப்பட்டியல் தயாரிப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றை அறிமுகம் செய்து, நூலகங்களுக்கான ஐந்து கோட்பாடுகளையும் வகுத்துத் தந்ததோடு 1939-இல் நூலக மாதிரிச் சட்டத்தையும் உருவாக்கினார்.
இவரின் முயற்சியில்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி உள்ளாட்சி நிறுவனங்கள், வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.
எஸ்.ஆர். ரங்கநாதன் இந்திய நூலகத்துறையின் தந்தை என்று போற்றப்படுவதுடன் இவருடைய பிறந்த தினமான ஆகஸ்ட் 12-ஆம் நாள் தேசிய நூலகர் தினமாக (National Librarian Day) ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எல்லோரும் எப்போதும் பயன்படுத்தவும், பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் நடுவண் அரசால் தேசிய எண்ணியல் நூலகம்(National Digital Library)  தொடங்கப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறையினருக்கான நூலகமாகத் திகழும். இந்த நூலகத்தில் அச்சுப்பிரதியாக உள்ள நூல்களை எண்ணியல்(Digital) மயமாக்கப்பட்டு வழங்கி வருகிறது.
இதுவரை தமிழ் உட்பட 70 மொழிகளில் 3 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய 7 லட்சம் நூல்களும், 2 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய 3 லட்சம் கட்டுரைகளும் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 95 ஆயிரம் ஆய்வேடுகளும் இந்த எண்ணியல் நூலகத்தில் உள்ளன. இதுதவிர தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 622 ஒலி உரைகளும், 18 ஆயிரம் காட்சி உரைகளும்(Video Lecturer) உள்ளன. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபடும் மாணவர்கள் வரை இவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம் (https://ndl.iitkgp.ac.in).
இதேபோன்று நாட்டில் உள்ள முதன்மையான நூலகங்களை எல்லாம் இணையத்தின் வாயிலாக இணைக்கப்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழக நூலகங்களை எல்லாம் இதன்படி இணைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் ஒருவர் தனக்குத் தேவையான நூல் எந்த நூலகத்தில் உள்ளது என நொடிப்பொழுதில் தேடிக் கண்டறிய முடியும். எண்ணியல் நூலகத்தில்  (Digital Library) நூல்களைப் பெறவும் முடியும். இதன்வழி வாசகர் ஒவ்வொருவருமே நூலகர்கள்தான்.

இன்று (ஆக. 12) தேசிய நூலகர் தினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com