எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை!

ராமப்புற மக்களுக்கு முழு அளவில் வங்கிச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 2012-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டத் திருத்த மசோதா மூலம்

ராமப்புற மக்களுக்கு முழு அளவில் வங்கிச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 2012-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டத் திருத்த மசோதா மூலம் புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டு வகையான வங்கி லைசென்ஸ் கொள்கை வகுக்கப்பட்டது. ஒன்று எல்லாவித வங்கிச் சேவைகளை வழங்கும் வங்கி லைசென்ஸ் (Universal Bank Licence). இரண்டாவது, குறிப்பிட்ட சேவைகள் மட்டும் வழங்கும் சிறிய வங்கிகளுக்கான அனுமதி (Differentiated Bank Licence) என்பதே அவை.
தற்போது பேமெண்ட் வங்கிகள் (Payment Bank) மற்றும் சிறிய வங்கிகள் (Small Banks) என்கிற டிஃப்ரென்ஷியேடட் வங்கி லைசென்ஸ் அடிப்படையில்தான் சில வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வங்கிகள் வணிக வங்கிகள் போல் அனைத்து வகை சேவைகளையும் வழங்க முடியாது. குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை மட்டுமே வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, ஒரு பேமெண்ட் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. ஆனால் டெபாசிட் தொகை பெற்றுக் கொள்ளலாம். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. சேமிப்புக் கணக்கில் அல்லது டெபாசிட் கணக்கில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம். அதேபோல், கடன் அட்டையைப் பொருத்தவரை, டெபிட் கார்டு வழங்கலாம்; கிரெடிட் கார்டு (இழ்ங்க்ண்ற் இஹழ்க்) வழங்க முடியாது.
காரணம், டெபிட் கார்டு என்பது வாடிக்கையாளரின் கணக்கில் இருப்புத் தொகை இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், கிரெடிட் கார்டு என்பது கடன் பெறுவதற்கு சமமானது. வணிக வங்கிகளில் இதுபோன்ற தடைகள் கிடையாது.
பேமெண்ட் வங்கிகளின் நோக்கம்தான் என்ன? கிராமப்புற, எளிய மக்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கும், அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கும், இந்தவித வங்கிகள் பயன்படும்.
முக்கியமாக, ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு பணம் அனுப்பி இந்த பேமெண்ட் வங்கிகள் எளிய சூழலை உருவாக்கித் தருகிறது. உதாரணமாக, ஒரு மாநில தொழிலாளர்கள் இன்னொரு மாநில நகரங்களில் பணிபுரிவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்
கிறது.
அவர்களைப் போன்ற அதிக கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்கள் வணிக வங்கிகளுக்குப் போவதை விட பேமெண்ட் பேங்க் மூலம் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதற்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
பணம் அனுப்புவதால் கிடைக்கும் கட்டணம் தவிர, பேமெண்ட் பேங்குகளுக்கு வேறு ஏதேனும் வருவாய்க்கு வாய்ப்பு உண்டா என்றால், நிச்சயமாக உண்டு.
கிராமங்களில், வங்கி கிளை தொடங்குவதற்கு பதில், பேங்கிங் கரெஸ்பாண்ட்டென்ட் (Banking Correspondent) என்கிற வங்கிப் பிரதிநிதி ஒரு சிறிய கிளை செய்யும் பணியான பணம் கொடுத்தல் அல்லது பணம் டெபாசிட் செய்தல் போன்ற சேவைகளை வங்கியின் சார்பில் செய்கிறார்.
இவர் தனி நபராகவும் இருக்கலாம். அல்லது ஒரு சிறிய நிறுவனமாகவும் இருக்கலாம். இந்த பணியை பேமெண்ட் பேங்க் வேறு வணிக வங்கிகளின் சார்பில் செய்து வருவாய் ஈட்டலாம்.
தற்போது 11 அமைப்புகளுக்கு பேமெண்ட் பேங்க் திறப்பதற்கு பாரத ரிசர்வ் வங்கி அனுமதி (லைசென்ஸ்) வழங்கியுள்ளது. இவற்றில் நான்கு அமைப்புகள் மட்டுமே Payment Bankகளை நிறுவியுள்ளன. அண்ழ்ற்ங்ப் Airtel Payment Bank, இந்திய தபால் பேமெண்ட் பேங்க், Paytm பேமெண்ட் பேங்க் மற்றும் Fino பேமெண்ட் பேங்க் ஆகியவையே அவை.
மேற்கூறிய நான்கு பேமெண்ட் வங்கிகளை கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். இந்தியாவில் மொபைல் போன் நெட்ஒர்க் மிக வேகமாகவும் அதிக அளவிலும் பரவிவிட்டது. அந்த அனுபவம் கொண்ட Airtel போன்ற நிறுவனங்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்துள்ளது.
அதேபோல், அஞ்சல் துறையும் ஊரகப் பகுதிகளிலும் கிளை அலுவலகங்களைப் பெற்று அனுபவம் வாய்ந்த அமைப்பாகத் திகழ்கிறது. எனவே, அஞ்சல் அலுவலகத்துக்கு பேமெண்ட் பேங்க் லைசென்ஸ் கிடைத்திருப்பதில் வியப்பில்லை.
பேமெண்ட் பேங்க் மூலதனம் ரூ.100 கோடி மட்டுமே. சாதாரணமாக, ஒரு தனியார் வங்கி அமைக்க குறைந்தபட்சம் ரூ.500 கோடி மூலதனம் தேவை என்பது விதிமுறை. அந்த விதிமுறை பேமெண்ட் பேங்க்குக்கும் சிறிய வங்கிக்கும் தளர்த்தப்பட்டுள்ளது.
பேமெண்ட் வங்கிகள் கடன் கொடுக்க முடியாது. இந்நிலையில் அந்த வங்கி திரட்டக்கூடிய டெபாசிட் தொகையை என்ன செய்வது? அந்த வங்கிக்கு வருவாய் கிடைக்க என்ன வழி?
இந்த வகை வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகையில் 75 சதவீதத்தை அரசு பாண்டுகளிலும், அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில் பாதுகாப்பு, மிதமான வருவாய் ஆகிய இரண்டும் கிடைக்கும்.
25 சதவீத டெபாசிட் தொகையை வணிக வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகப் போடலாம். எதிர்பாராத அவசர நிர்வாகச் செலவுகளுக்கு அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பேமெண்ட் வங்கி அமைப்பதற்கு தகுதி உடையவர்கள் யார் யார்? ஏற்கெனவே வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (சஆஊஇ), பேங்கிங் கரஸ்பாண்டெட் பணிபுரியும் நிறுவனங்கள், மொபைல் தொலைபேசி நிறுவனங்கள், சூப்பர் மார்கெட் தொடர் (NBFC) நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை பேமெண்ட் வங்கிகளாக இயங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க முடியும். அவையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கும்போது மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சிறிய வங்கிகளைப் பொருத்தவரை, வங்கியில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தனி நபர்கள் மற்றும் தொழில் முறையாளர்கள், (Professionals) அல்லது கம்பெனிகள், சொசைட்டிகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
பேமெண்ட் வங்கி மற்றும் சிறிய வங்கி - இரண்டு வகை வங்கிகளுக்கும் மூலதனம் ரூ.100 கோடி.
வங்கியைத் தொடங்குவதற்கு முன்வரும் "புரமோட்டர்கள்' 40 சதவிகித மூலதனம் செலுத்தினால் போதுமானது. மீதி மூலதனத்தை பங்குகளாக திரட்டிக் கொள்ளலாம். வங்கியைத் தொடங்குபவரின் 40 சதவீத மூலதனம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
அதேபோல் வங்கியை தொடங்குபவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிக மூலதனம் செலுத்தினால், 3 ஆண்டுகளுக்குள்தங்களது மூலதனத்தை 40 சதவீகிதத்திற்குள் குறைத்துக் கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் தங்கள் மூலதனத்தை 30 சதவீதமாகவும், 12 ஆண்டுகளுக்குள் மூலதனத்தை 26 சதவீதமாகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விதிகளின் நோக்கம், வங்கியைத் தொடங்கியவர் கை எப்போதுமே ஓங்கி இருக்கலாகாது என்பதும், நாளடைவில் வங்கியின் பங்குகள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதுதான். இது வரவேற்கத்தக்க விஷயம்.
ஏற்கெனவே, சிறப்பாகச் செயல்பட்டு வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் என்கிற குறு நிதி நிறுவனங்கள், உரிய சட்ட திட்டங்களின்படி தங்கள் நிறுவனங்களை சிறிய வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிகளே இல்லாத ஊரகப் பகுதிகளில் சிறிய வங்கிகள்25 சதவீத கிளைகளை திறக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. ஊரகப் பகுதி என்பது சமீபத்திய கணக்கெடுப்பின்படி 9,999 பேருக்கு உள்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமப் பகுதி ஆகும்.
பொதுமக்களிடமிருந்து சிறிய வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகையிலிருந்து, சிறு விவசாயிகள், சிறு, குறுதொழில்கள், அமைப்பு சாரா நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோருக்கு மட்டுமே கடன் வழங்கலாம்.
ரிசர்வ் வங்கியில் அரசு பத்திரங்கள் வடிவில் வைத்திருக்க வேண்டிய (SLR) கையிருப்பு, ரொக்க கையிருப்பு (CRR) ஆகிய இரு வகை விதிமுறைகள் சிறிய வங்கிகளுக்கும் உண்டு.
எந்த ஒழு குழுமத்துக்கோ, தனி நபருக்கோ வங்கியின் மூலதனத்தில் 15 சதவீதத்துக்கும் மேல் கடன் வழங்குவதற்கு தடை உள்ளது.
இதன் வாயிலாக குறிப்பிட்ட குழுமத்துக்கோ தனிநபர்களுக்கோ பெரும் கடன் கொடுக்காமல், அதிகமான எண்ணிக்கையில், சிறிய கடன்கள் வழங்கப்படும்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறிய வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை வந்துள்ள செய்திகள் மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பந்தன் சிறிய வங்கி, சென்னையைச் சேர்ந்த Equitas SFB, சூர்யோதே SFB, ஃபின்கேர் SFB உள்ளிட்ட சிறிய வங்கிகள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டும் அல்லாமல், டெபாசிட்டுக்கான வட்டிவீதத்தை எடுத்துக் கொண்டால், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பொதுத் துறை வங்கிகள் சேமிப்பு கணக்கில் முறையே 3.5 சதவீதம் மற்றும் 4 சதவீதம் வட்டி மட்டுமே வழங்குகிறார்கள். இந்நிலையில் மேற்கூறிய சிறிய வங்கிகள் தங்கள் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 6 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி தருகிறார்கள்.
ஆக, பொருளாதார வளர்ச்சியும் எளிய மக்களையும், வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்பதுமே பேமெண்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கிகள் நோக்கம். அந்த லட்சியத்தை எட்டும் வகையில் புதிய வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு அமைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com