கடன் சுமையால் தடுமாறும் துறை

தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழக சொத்துகள், வங்கிகளில் ரூ.15ஆயிரம் கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழக சொத்துகள், வங்கிகளில் ரூ.15ஆயிரம் கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமாக 23 ஆயிரம் பேருந்துகள் உள்ளன.
இவற்றில் 12 ஆயிரம் பேருந்துகள் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. நஷ்டம் ஏற்பட்டாலும் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 2 கோடி பேர் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். சுமார் ஒரு கோடி கி.மீ. தூரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு கி.மீ.க்கு 27 பைசா வருமானம் கிடைக்கும் நிலையில் ஒரு கி.மீ.க்கு 32பைசா செலவிடும் நிலையில் தான் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.
சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிபோர் தியாகிகள், நோயாளிகள், பத்திரிக்கையாளர்கள் 40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத மானியத்தை அரசும், மீதி 50 சதவீதத்தை போக்குவரத்துக் கழகங்களும் ஏற்றுக்கொள்கின்றன.
ஒரு பேருந்தின் ஆயுட்காலம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. தூர பயணம் என்பது விதி. ஆனால் தமிழகத்தில் இப்போது செயல்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் 70 சதவீதம் பேருந்துகள் இந்த அளவுகோலை கடந்து ஓடிக்கொண்டிருக்
கின்றன.
இத்தனை பிரச்னைகளுக்கு இடையே ஊழியர்களுக்கு சம்பளம் சரிவர வழங்கப்படுவதில்லை. ஓய்வூதியர்களுக்கு பணபலன் கிடைப்பதில்லை என பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்து வருகிறது அரசு போக்குவரத்துக் கழகம்.
இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2016 நவம்பரில் போராட்டத்தை அறிவித்த பின்பும் அது சம்பந்தமாக அரசு எவ்வித முடிவும் எடுக்காத காரணத்தால் 2017 பிப்ரவரி 2-ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பை அனைத்து தொழிற்சங்கங்களும் வெளியிட்டன.
பிறகு 2017 மார்ச் 7-ஆம் தேதியிலிருந்து தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் எல்.பி.எஃப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கின.
அந்த வேலை நிறுத்தத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் சிலர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் 68 கோரிக்கைகளை எழுப்பியிருந்தன. இதில் 7 முன்னுரிமை கோரிக்கைகளை முன் வைத்தன. 2017 மே 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.
அதன்பிறகு மீண்டும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தையொட்டி அமைச்சர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நிலுவைத் தொகை ரூ.1682 கோடியில் உடனடியாக ரூ.868 கோடியை தரவும் மீதியை 2017 செப்டம்பருக்குள் தந்து முடிக்கவும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது.
பணியிலுள்ள தொழிலாளர்களின் பஞ்சப்படி நிலுவை முழுவதும் வழங்கப்பட்டது. அதேபோல் சொசைட்டிக்கு பாக்கி வைத்த நிலையில் சொசைட்டிகள் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் வகையில் சொசைட்டிக்கு பணம் கொடுக்கவும், இன்சூரன்ஸ் பிடித்தத்தில் ஒரு பகுதியை தரவும் அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதே போல் கழகங்களுக்கு மாதம் ரூ.155 கோடி பற்றாக்குறை ஏற்படுகிறது. அதில் ரூ.135 கோடி தொழிலாளர் பிடித்தங்களை வைத்து பற்றாக்குறை சரிசெய்யப்படும் நடைமுறை உள்ளது.
இதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்
பட்டது.
மீதி கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அரசு சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் பிரதானமானவை கழகங்களின் வரவிற்கும் செலவிற்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை அரசு ஈடுகட்ட வேண்டும், தொழிலாளர் பணத்தை அரசு செலவு செய்யக்கூடாது என்பதே ஆகும்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இழைத்த அநீதி இந்த வேலை நிறுத்தம் மூலம் அம்பல
மானது.
இனி இதுபோன்ற காரியத்தை தொடர்ந்து செய்ய முடியாது என்ற சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. இந்த போராட்டத்தினால் ஓய்வு பெற்றோர் நிலுவைத் தொகையை சரிசெய்யும் நிலை உருவானது. எனவே தான் ரூ.1280 கோடியை ஒதுக்கி சில பாக்கிகளை அரசால் தீர்க்க முடிந்தது.
இந்நிலையில் செலவுகளை ஈடுகட்ட தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகங்கள் தனது சொத்துக்களை அடமானம் வைத்திருப்பதும் அவற்றை மீட்க எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ள போகின்றன என்பதும் மிகப்பெரும் கேள்வியாக முன்வந்துள்ளது.
ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை, பயணிகள் பாதுகாப்பு என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடன் சுமையால் தத்தளிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com