பாகிஸ்தானைப் பணியவைக்கும் சீனா!

நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் ரஷியாவும், உலகத்தை தங்கள் வீட்டுச் சொத்தாக நினைத்து பிரித்து வைத்துக்கொண்டு ஆளுமை கொண்டாடினார்கள்
பாகிஸ்தானைப் பணியவைக்கும் சீனா!

நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் ரஷியாவும், உலகத்தை தங்கள் வீட்டுச் சொத்தாக நினைத்து பிரித்து வைத்துக்கொண்டு ஆளுமை கொண்டாடினார்கள். பிறகு சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்து போய்விட்டது. பின்னர், அமெரிக்கா உலகத்தின் தனிப்பெரும் சக்தியாக முன்னே நின்றது. இப்பொழுது ரஷியா மீண்டும் அமெரிக்காவிற்கு நிகராக வளர்ந்துவிட்டது.
இது போதாதென்று சீனாவும் தன்னை, உலகத்தின் அடுத்த உரிமையாளராகக் கருதி செயல்பட ஆரம்பித்துவிட்டது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சீனா, பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் மிக வேகமாக முன்னேறி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இன்று உலகத்தின், ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் விற்கப்படுகின்றன. சீனாவின் நகரங்கள் முற்றிலும் மாறிவிட்டன. துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டு விட்டன. ரயில்களின் வேகம் கூடிவிட்டது, ராணுவத்தின் பலம் எண்ணிக்கையிலும் அதிகரித்துவிட்டது, ஆயுதங்களும் அதிகரித்துவிட்டன.
பல நூற்றாண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த இப்பெரும் நாடு எழுந்து, உலகத்திற்கு சவால்களைவிடத் தொடங்கி விட்டது. ஒரு கால கட்டத்தில் போதைப் பொருட்களின் அடிமையாக வாழ்ந்து வந்த சீனர்கள், இப்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அத்துடன் நவீன விஞ்ஞானத்தில் வேகவேகமாக முன்னேறி வருகின்றனர். அதற்கு மாறாக அமெரிக்கர்கள் பலர் வாழ்க்கையின் சுகங்களில் மூழ்கிவிட்டனர். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அமெரிக்கக் கனவை மறந்து விட்டதுபோல் நடந்து கொள்கின்றனர்.
பிரபல விஞ்ஞானி மிஸ்ஸியோ காக்கூ என்பவர், அமெரிக்காவிலுள்ள அனைத்து இந்தியர்களையும், சீனர்களையும் வெளியேற்றிவிட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்கிறார். காரணம், அனைத்துப் பெரிய நிறுவனங்களையும் தாங்கி நிற்பவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான்.
சீனா, தான்தான் வருங்கால உலக சக்தி என்பதை மற்ற நாடுகள் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதோ ஒருவிதத்தில் ஆங்காங்கே சண்டை - சச்சரவுகளைக் கிளப்புகிறது. யுத்த கண்ணோட்டத்தில் முக்கியம் வாய்ந்த சில இடங்களில் சீனா, ஆயுத களங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் தன் பிடியை இறுக்கமாக்கும் விதமாக இலங்கையில் உள்ள ஹம்பண்டோட்டா துறைமுகத்தை நவீனமாக்கும் பணியை தன் கைவசம் எடுத்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள கவாதர் துறைமுகம் ஏற்கெனவே சீனாவின் கட்டுக்குள் வந்துவிட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதலுக்குக் காரணமாக இருந்துவரும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் சீனாஒரு முக்கிய சாலையை உருவாக்கி இந்தியாவுக்கு சவால் விட்டுள்ளது. இப்பொழுது டோகலாம் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன வீரர்களும் எந்நேரத்திலும் போர் தொடங்கிவிடும் நிலையில் தயாராக எதிரெதிரே நிற்கிறார்கள்.
இன்னொருபுறம், பாகிஸ்தான், காஷ்மீருக்கு தன் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகளை அனுப்புவதை நிறுத்தமாட்டேன் என்கிறது. பாகிஸ்தானால் பயிற்சி பெறுபவர்கள் அனைவரும் தண்டனை பெற்ற குற்றவாளிகளே. அவர்கள் போரில் பலியானால் பாகிஸ்தானிய மண்ணுக்கு பாரம் குறையும். ஆனால், இப்பயங்கரவாதிகளின் குண்டுகளால் சாவைச் சந்திப்பவர்கள் இந்தியாவின் வீரர்கள்தான்.
பாகிஸ்தான் நாட்டின் செயல்களால் இந்தியாவுக்கு இவ்வளவு தொந்தரவு இருந்தும் நம்மால் ஏன் பாகிஸ்தானுக்கு ஒரு சரியானபாடம் கற்றுக்கொடுக்க முடியவில்லை? 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அதை இரண்டாகப் பிரித்த நம் ராணுவம், பாதியாக இருக்கும் அந்நாட்டை தாக்குவதற்கு ஏன் தயங்குகிறது? இந்த தயக்கத்துக்கு ஒரே காரணம், பாகிஸ்தான் வசம் இருக்கின்ற அணு ஆயுதங்கள்தான்.
முன்பு, வளராத நாடுகள், வளர்ந்த நாடுகளைக் கண்டு அஞ்சும்நிலை இருந்தது. போர் தொடங்கிவிட்டால் நமக்குத்தான் தோல்வி என்பதை அந்நாடுகள் உணர்ந்திருந்தன. ஆனால், இப்பொழுது ஒரு சிறிய நாடுகூட தான் வைத்திருக்கும் அணு குண்டுகளைக் காட்டி ஒரு பெரியநாட்டை மிரட்டுகிறது.
அணு குண்டுகள் அளிக்கும் தைரியத்தால், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஓங்கிவிட்டது. நம் பக்கத்து நாட்டை எடுத்துக் கொண்டோமானால், ஐக்கிய நாடுகளால் உலக தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கே பயமில்லாமல் சரண் அளிக்கிறது அந்நாடு. நேரடியாக நடவடிக்கை எடுக்க இந்தியா என்றைக்கும் துணியாது என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்.
சின்னஞ் சிறிய நாடுகளுக்கு அதிகரித்துவரும் இந்த துணிச்சல்தான் இன்று உலகத்திற்கு அபாயத்தை உண்டாக்குவதாக இருக்கின்றது. அந்த அசட்டுத் துணிச்சலால் உந்தப்பட்டு ஏதோ ஒரு சிறிய நாடு, என்றைக்காவது உண்மையிலேயே அணு குண்டை பயன்படுத்திவிட்டால் என்னவாகும்?
அவ்வாறு செய்யக்கூடிய சிறிய நாடாக இன்று வட கொரியா இருக்கிறது. மிகச்சிறிய நாடான இந்நாடு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் முன்னேறிய நாடுகளுக்குச் சமமாக வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இப்போழுது அந்நாடு, அமெரிக்காவை அழிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்நாட்டின் சர்வாதிகாரியான கிம்ஜாங், எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பதை ஊகிப்பது கடினம். அவர் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் அமெரிக்காவிற்கே பெரும் பாதிப்பை விளைவிக்கக் கூடியவை என்று உலக நாடுகள் நம்பும் அளவுக்கு, வடகொரியா படங்களை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கிம்ஜாங், அமெரிக்காவின் ஆயுத களமான குயாம் என்ற இடத்தை தனது ஏவுகனை அழிக்கப்போவதாக அறிவித்து, அமெரிக்க அதிபரை மிரட்டியுள்ளார். அமெரிக்க அதிபர், அமெரிக்கா போருக்குத் தயார் என்று சொல்ல, மற்ற சில நாடுகள் தத்தம் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன.
மூன்றாவது உலகப் போர் வராது என்று நம்புபவர்கள் உலகப் போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடுவோம் என்ற பயம், போர் தொடங்குவதைத் தடுக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், இதை நம்பியே உலக அளவிலான அரசியல் விளையாட்டு விளையாடுவது என்றைக்காவது தவறாகப் போகக்கூடும்.
சீனா விரும்பினால் வட கொரியாவை கட்டுப்படுத்த முடியும். ஆனால், உலகத்தின் அடுத்த அதிபர் ஆக விரும்பும் சீனா, அமெரிக்காவின் மீசை வெட்டப்படுவதைக் கண்டு மகிழ்கிறது. குறுகிய சுயநலம் மனித இனத்தையே அழிவுக்குள் தள்ளிவிடும்.
நம் கிராமங்களில் நடைபெறும் சம்பவங்களே உலக அளவிலும் நடைபெறுகின்றன. பண வசதி பெருகி, தான் தான் இனி ஊர்த் தலைவர் என்று நினைக்கும் ஒருவர், ஊர்த் தலைவர் ஒரு சின்னப் பையனிடம் அடிவாங்குவதைக் கண்டு அடைகிற மகிழ்ச்சிதான் இதுவும்.
உலக சக்தியாக மாற வேண்டும் என்று சீனா மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் சீனா, அகில உலகக் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனா, உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக வர முயற்சிக்கிறது.
இந்தியா இதை எதிர்த்தாலும், இதர சக்திவாய்ந்த நாடுகள், இந்தத் திட்டத்தை சந்தேகப் பார்வையுடன் பார்த்தாலும், பல நாடுகள் இந்தத் திட்டத்தின் மூலம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, சீனாவின் பார்வை பாகிஸ்தானின் மீது உள்ளது. சீனா, பாகிஸ்தான் நாட்டை தனது காலனி நாடாக்க முயற்சிக்கிறது. பாகிஸ்தானிய தலைவர்களும் நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, ஏறத்தாழ நாட்டின் வளங்கள் அனைத்தையும் சீனாவின் வசம் கொடுத்து வருகின்றனர். பிரபல பாகிஸ்தானிய நாளிதழான தி டான் சில ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது.
அதன்படி, பாகிஸ்தான், சீனாவுக்கு பெருமளவில் விவசாயம் செய்யும் உரிமையை வழங்கும். அத்துடன் பாகிஸ்தானிய நகரங்களில் சீன நாட்டு விடியோ காமிராக்கள் 24 மணி நேரமும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கண்காணிக்கும். இவ்வாறு சிறிது சிறிதாக சீனா, பாகிஸ்தான் தனது நேரடி நிர்வாகத்தின் கீழ்வருவது போல பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இத்தருணத்தில் முதல் உலகப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைவுகூர்வது அவசியம். நாடுகளுக்கு இடையே அழுத்தம் பெருகப் பெருக, தீ பற்ற எரிபொருள் தயாராக இருந்த நிலையில், ஆஸ்ட்ரியா நாட்டின் இளவரசன் தன் மனைவியுடன் போஸ்னியா நாட்டின் தலைநகரான ஸராஜீவோவில் அந்த நாட்டின் ஒரு குடிமகனால் கொல்லப்பட்டார்.
இந்தச் சிறிய பொறி ஏற்கெனவே தயாராக இருந்த எரிபொருளை பற்ற வைத்தது.
இன்றும் அதேமாதிரியான எரிபொருள் உருவாகி வருகிறது. முதல் பொறியுடன் வட கொரியாவும் தயாராக இருக்கிறது. அந்த நாட்டின் சர்வாதிகாரிக்கு சடலங்களைப் பார்ப்பதே பொழுதுபோக்கு.
அழகான இவ்வுலகம் ஒரு சர்வாதிகாரிக்கு பலி ஆகிவிடுமோ என்ற அச்சம், சிந்தனையாளர்களுக்கு எழுந்துள்ளது.

கட்டுரையாளர்:
காவல்துறை தலைவர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com