தங்க இறக்குமதி: மறு பரிசீலனை தேவை!

முதலீடு என்றாலே, நமக்கு உடனே நினைவுக்கு வருவது தங்கம் மட்டும்தான். ஏழை முதல் பணக்காரர் வரை, அவரவர் வசதிக்கும், வருமானத்திற்கும் ஏற்ப தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். மனிதன் பிறப
தங்க இறக்குமதி: மறு பரிசீலனை தேவை!

முதலீடு என்றாலே, நமக்கு உடனே நினைவுக்கு வருவது தங்கம் மட்டும்தான். ஏழை முதல் பணக்காரர் வரை, அவரவர் வசதிக்கும், வருமானத்திற்கும் ஏற்ப தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளிலும் தங்கம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
பண்டைய காலம் தொட்டு, மன்னர்களின் அந்நிய நாட்டு படையெடுப்புகளுக்கு மண் ஆசையோடு, பொன் ஆசையும் ஒரு காரணியாக அமைந்து வந்திருப்பது சரித்திரமாகும்.
முக்கியமாக, திருமணச் சடங்குகளில் வெளிப்படுத்தப்படும் தங்கத்தின் அளவு, சம்பந்தப்பட்டவர்களின் கெளரவத்தின் அடையாள சின்னமாக, தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது. ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளில், நேர்த்தி கடன்கள் முதலியவை தங்கத்தின் மூலம்தான் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடி காலத்தில் அடகு வைத்து அல்லது விற்று எளிதாக பணமாக மாற்றக்கூடிய முதலீடாக தங்கத்தை நடுத்தர வர்க்கம் நேசிக்கிறது. அதே சமயத்தில், வரி கட்டாத பணத்தை பதுக்கி வைக்கும் முதலீட்டுக்கு ஏற்றதாக, கருப்பு பண முதலாளிகளால், தங்கம் பெரிதும் விரும்பப்படுகிறது.
கடந்த வருடம் அரங்கேறிய உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பின்பு நடைபெற்ற அதிரடி சோதனைகளில் பெருமளவு தங்கம் கைப்பற்றப்பட்டதன் மூலம் கருப்பு பண சந்தையில், தங்கத்திற்கு இருக்கும் பெரும்பங்கு வெட்ட வெளிச்சமானது.
உலக அளவில் சுமார் இரண்டு லட்சம் டன் அளவிலான தங்கம் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. அவற்றில், சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இதில் ஒரு பகுதி தங்க நகைகளாக உள்ளன. மீதமுள்ள தங்கத்தின் பெரும்பகுதி தங்க பிஸ்கெட் உருவத்தில் உள்ளன.
இந்த தங்கத்தின் அளவு, அமெரிக்க கருவூலமான ஃபோர்ட் நாக்ஸில் (Fort knox)   அந்நாட்டின் இருப்பு நிதியாக (Reserves) சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க மதிப்பீட்டைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.
இதில் குறிப்பிடத்தக்க வேடிக்கை என்னவென்றால், இவை பெரும்பாலும், அந்நிய செலாவணியை பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் தங்கமாகும். இந்தியாவைப் பொருத்தவரை, வருடத்திற்கு இரண்டு டன்னுக்கு மேல் தங்க உற்பத்தி கிடையாது.
ஆனால், ஆண்டுக்கு சுமார் 2,20,000 கோடி ரூபாய் மதிப்புடைய 800 டன் அளவுள்ள தங்கத்தை இறக்குமதி செய்து, உலக தங்க உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கின் பயனாளியாக நாம் திகழ்கிறோம். உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற நிகழ்வுகளால், தங்கத்தின் தேவை நடப்பு ஆண்டில் சிறிதளவு குறைந்தாலும், தேவைகள் மீண்டும் தலை தூக்கி விட்டன என்றே சொல்லலாம்.
நாட்டின் இறக்குமதியில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இருப்பது தங்கம்தான். உலக சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அதன் இறக்குமதிக்காக, நம் அந்நிய செலாவணி பெருமளவில் கரைந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால், அதற்கான அந்நிய செலாவணி செலவு சற்றே குறைந்து காணப்படுகிறது. மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காண ஆரம்பித்து விட்டால், அதற்கான இறக்குமதி செலவுகள் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கிவிடும்.
அம்மாதிரி விலை ஏற்றங்களுக்கு இந்தியா இப்போதே தன்னை தயார் படுத்துக் கொள்ளவேண்டியது அவசியம் ஆகும். அதற்கு, கையிருப்பு அந்நிய செலாவணியின் செலவு நடவடிக்கைகளில் பிரத்தியேக கவனம் செலுத்திட வேண்டிய நேரம் இது.
இறக்குமதி செய்யப்படும் பொருள்கள், நாட்டின் வெளிப்படையான பொருளாதார மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கு பயன்படுவதாக அமைந்தால்தான், அதற்கான அந்நிய செலாவணி செலவுகளும் பயனுள்ளதாக கருதப்படும்.
நாட்டின் நடப்பு கணக்கில், அந்நிய செலாவணியின் வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி அதிகரித்தால், அதற்கான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும். இந்திய ரூபாயின் சர்வ தேச மதிப்பு சாய்வது, அம்மாதிரி விளைவுகளில் முக்கியமான ஒன்றாகும்.
இம்மாதிரி நிகழ்வு, இறக்குமதி சார்ந்திருக்கும்உற்பத்தி பொருள்களின் விலைவாசி ஏற்றத்தை ஊக்குவித்து, பண வீக்கத்தை பெருக்கும் வல்லமை படைத்தது ஆகும்.
தங்கப் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறது என்பது உண்மைதான். இறக்குமதி வரியை 10 சதவீதமாக உயர்த்தியது, தங்க நகைகளுக்கு 3 சதவீத வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகள் மக்களிடையே இந்த தங்க மோகத்தை குறைத்ததாக தெரியவில்லை.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்த தங்க டெபாஸிட் பாண்டுகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்காதது, தங்கத்தின் மீது, அதன் உரிமையாளர்கள் பதித்திருக்கும் உணர்வு பூர்வமான பற்றுக்கு ஒரு வலுவான சான்றாகும்.
2002 முதல் 2011 வரை, முதலீட்டாளர்களுக்கு தங்கம் நல்ல வருமானத்தை வாரி வழங்கியது. அதற்கு பிறகான காலங்களில், விலை ஏற்றத்தினால், எதிர்மறையானது.
ஒரு நல்ல மூலதனத்தின் குணம், மூலதன லாபம் மட்டுமின்றி அதன் மூலம் தொடர் வருவாயும் வந்து கொண்டிருக்கவேண்டும் என்பதே. அந்த வருவாயை நிர்ணயிக்கும் காரணிகள், நிபுணர்களுக்கு மட்டுமல்ல சாதாரண முதலீட்டாளருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
தங்கம் என்பது, உலக நாடுகளின் கஜானாவில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு சர்வதேச உலோகமாகும். போர்க்காலப் பதற்றத்தில், அதன் விலையில் ஏற்படும் மாற்றங்கள் கடுமையாக இருக்கும்.
வட கொரியா விடுத்திருக்கும் எச்சரிக்கையினால், கடந்த சில தினங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது இதற்கு ஒரு கண்கூடான சான்று. உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடினால், தங்கத்தின் விலை இறங்கும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதெல்லாம், உள்நாட்டில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும். தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் இம்மாதிரி வெளிக் காரணிகள், (External factors) விவரம் அறியாத தங்க முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பிற்கு பாதகம் விளைவித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர மக்களைப் பொருத்தவரை, அவசர கால பொருளாதாரத் தேவைகளுக்கு தங்கம் உறுதுணையாக நிற்கிறது என்பது மட்டும்தான் அதன் பிரத்தியேக பயன்பாடாக அறியப்படுகிறது.
சமீப காலத்தில், வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வங்கி வைப்பு நிதிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை போன்ற வெளிப்படையான முதலீடுகளும் அவரசரத் தேவைக்கு கை கொடுக்கும் என்ற எளிய தகவல்கள் அவர்களை சென்றடையவில்லை என்பதும், அவர்களிடையே தேயாமல் வளர்ந்து கொண்டிருக்கும் தங்க பற்றுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
நம் நாட்டு மக்களின் சேமிப்புப் பழக்கங்கள், மற்ற உலக நாடுகளை மிஞ்சும் வகைதான் என்றாலும், சமீப காலங்களாக, சேமிப்புகளின் பெரும்பகுதி தங்கத்தை நோக்கி திருப்பி விடப்படுகிறது.
தங்க நகைகள் வாங்குவதில் அடங்கி இருக்கும் சேதாரம் சம்பந்தப்பட்ட ஏராளமான சந்தேகங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் சேமிப்புகளை தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். இம்மாதிரி 'சோம்பேறி முதலீடுகளால்(Idle investments) நாட்டுக்கு எந்தவிதமான பொருளாதார பலனும் அறவே இல்லை எனலாம்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல், சமீப காலங்களில், சேமிப்புகளுக்கான வட்டி விகிதம், பெருமளவில் குறைக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரி நடவடிக்கைகள், மக்கள் தங்கள் முதலீட்டு விருப்பங்களை நிதி முதலீடுகளிலிருந்து (investment in financial assets) தங்கம் போன்ற உலோக முதலீடுகளில்(Investment in commodities) மாற்றி அமைப்பதற்கு உந்துதலாக அமைகின்றன.
தங்க நகைகளைவிட, தங்க பிஸ்கெட்டுகளில் பல மடங்கு முதலீடு செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் கருப்புப் பண விவகாரம்தான். கணக்கில் வராத பணத்தை எளிதாக பதுக்க தங்க முதலீடுகள் எளிய சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு புறம் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை; மற்றொரு புறம், கருப்புப் பணத்தை பதுக்க உதவும் தங்கத்தை ஏராளமாக இறக்குமதி செய்வது என்ற மாறுபட்ட கொள்கைகள் சற்று குழப்பமான செயல்பாடுகளாகும். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் யார் யார் முதலீடு செய்கிறார்கள் என்ற விவரமும் பதிவாவதில்லை.
நம் நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் எல்லா அரசுகளும் தங்க இறக்குமதி விஷயத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியான தாராளமய கொள்கையை கடைபிடித்து வருவது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். அந்த கொள்கையில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.
வங்கிக் கணக்கு, பங்குச் சந்தை, ரியல் எஸடேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு போன்ற முதலீடுகளில், முதலீட்டாளரின் கே.ஒய்.சி. (Know your customer documents)   போன்ற அடையாள சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த முதலீடுகளுக்கான பண பரிவர்த்தனைகள் வங்கி கணக்குகள் மூலமாகவே நடந்தேறுகின்றன.
ஆனால், அதைவிட, பல மடங்கு முதலீடுகளை காணும் தங்கச் சந்தையில் அம்மாதிரி அடையாள ஆவணங்கள் பெறப்படுவதில்லை என்பது வியப்பளிக்கிறது. இது, கருப்பு பண முதலீட்டாளர்களுக்கு பெரும் வசதியான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது.
ஊழலுக்கான ஊதியம் கருப்பு பணம். கருப்பு பணத்தின் மற்றொரு பரிமாணம் தங்கம். இந்த வலுவான இணைப்பை உடைத்தால்தான், ஊழல் மற்றும் கறுப்பு பண ஒழிப்பில் அரசாங்கம் வெற்றி காணமுடியும்.
தாராள தங்க இறக்குமதி கொள்கையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. அதோடு, தங்க முதலீடுகள், மற்ற நிதி முதலீடுகள்போல், வரைமுறைப் படுத்தப்பட்டால்தான், கருப்பு பணத்தை தாங்கி நிற்கும் தங்க முதலீடுகளை கட்டுப்படுத்த முடியும்!

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com