கசப்பான உண்மை

அண்மையில் நடந்த ஒரு விழாவில் குஜராத் முன்னாள் ஆளுநர் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். முன்னாள் ஆளுநர் பேசுகையில், 'இந்தி கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் தமிழ் உணர்வு வளர வேண்டும்'

அண்மையில் நடந்த ஒரு விழாவில் குஜராத் முன்னாள் ஆளுநர் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். முன்னாள் ஆளுநர் பேசுகையில், 'இந்தி கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் தமிழ் உணர்வு வளர வேண்டும்' என்று குறிப்பிட்டார். அன்று விழாவில் பேசிய வேறு பலரும் தமிழ் உணர்வை வலியுறுத்தினார்கள்.
ஆனால், அதே வாரம் வெளியான ஓர் அரசியல் பத்திரிகையில், 'தமிழ்நாட்டில்தான் செம்மொழி, பச்சை மொழி என்றெல்லாம் கூவுகிறார்கள். இதற்கெல்லாம் விழா வேற' என்று ஓர் எழுத்தாளர் சாடியிருந்தார்.
இதே எழுத்தாளர், அதே ஏட்டில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் 'இங்குதான் தமிழரசி, தமிழ்ச்செல்வன் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். ஆந்திராவில் யாராவது தெலுங்குதன் என்று பெயர் வைக்கிறார்களா?' என்று கேலியாக வினா எழுப்பியிருந்தார்.
வார ஏட்டில் எழுதினவர் பிரபல எழுத்தாளர். செம்மொழி என்றால் உயர்வான மொழி என்று அவருக்குத் தெரியாதா என்ன? ஒரு வேகத்தில் எழுதப்பட்ட மிகையான கருத்து என்று அதை ஒதுக்கி விடலாம்.
மாநில உணர்வையும், மாநில மொழியையும் அன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினால்தான், இங்கு தமிழ் உணர்வு வளர்ந்தது என்பது வெளிப்படை. அதனுடன், இந்தித் திணிப்பும் சேர்ந்து கொண்டதால்தான், தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை.
ஆனால் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும், ஆங்கில உச்சரிப்புக்கும் தமிழ்நாட்டில் ஏன் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது ஒரு புதிர்.
எழுத்தாளர் கல்கி 80 ஆண்டுகளுக்கு முன்பே 'முன்னேறிய வகுப்பினர்கள் ஆங்கிலக் கல்வியினாலேயே பெரிய பதவிகளுக்கும், உத்தியோகத்துக்கும் வந்திருப்பதைக் கண்டு, அந்நிய மொழிக்கு அடிமைப்பட்டார்கள்.
இதன் விளைவாக, தனித் தமிழ்வாதிகள் அரும்பத அகராதிகளிலிருந்து எடுத்த தமிழ்ச் சொற்களை எடுத்து, மண்டையிடி காணும்படியான வசன நடை எழுதினார்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். ('எங்கள் தமிழ் மொழி').
நண்பர் ஒருவர் பேசுகையில் ஆங்கில உச்சரிப்பை மிகச் சரியாகப் பயன்படுத்துவதை எண்ணிப் பெருமை கொள்வார். சுந்தர ராமசாமி தன்னுடைய நாவலொன்றில் (குழந்தைகள், பெண்கள், ஆண்கள்) 'மருந்துகளின் பெயர்களை அப்பாவுக்கு அற்புதமாக உச்சரிக்கத் தெரியும்.
உச்சரிப்பில் 'எக்ஸும் இஸட்டும்' அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். மஞ்சேரி ஈஸ்வர அய்யர் அடித் தொடையைக் கிள்ளின கிள்ளலில் நாக்கில ஏறிய ஸ்பஷ்டம்' என்பார். 'ரத்னா பாயின் ஆங்கிலம்' என்று கிண்டலாக ஒரு சிறுகதையையே அவர் எழுதியிருக்கிறாரே?
ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுத வேண்டுமானால் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பது சரிதான். தமிழ் தெரியாத அந்நியரிடம் தவறான பொருள் ஏற்படாது பேச வேண்டும் என்பதும் ஏற்கத்தக்கதுதான்.
ஆனால் உச்சரிப்பு? இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் உச்சரிப்பின் தொனி வேறுபடுகிறதே? அவ்வளவு ஏன்? இங்கிலாந்திலேயே ஸ்காட்லாந்துவாசிகள் உச்சரிப்பு வேறுவிதம். அமெரிக்கர்களின் ஆங்கிலம் வேறுவிதம்.
இன்னொரு விஷயம். ஒரு துறையில் வல்லுநராக இருப்பவருக்கு, ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
நோயைக் கணிக்கிற திறமை, வியாதிக்கேற்ற மருந்துகளை எழுதித் தருவது, தொடர் சிகிச்சையின் விளைவைத் தெரிந்து கொள்ளுவது - இவை ஒரு மருத்துவருக்குத் தெரிந்தால் போதுமே! 'அந்த டாக்டரின் இங்கிலீஷ் ரொம்ப மோசம்' போன்ற விமர்சனங்களைத் தமிழ்நாட்டில்தான் கேட்கலாம்.
வங்கிகளிலும் சில உயர் அதிகாரிகள் இதே போக்கைப் பின்பற்றுவதைக் கவனித்திருக்கிறேன். கோடி ருபாய்க்கு மேல் தொழில் கடனுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட வரைவில்(Draft) , பொது மேலாளர் ஒருவர் முதலில் ஆங்கிலப் பிழைகளைத்தான் பார்ப்பார்.
பிறகுதான் அவ்வளவு பெரிய தொகைக்கான சாதகமான அம்சங்கள் உள்ளதா என்று நோட்டம் விடுவார். சில வாடிக்கையாளர்கள், மேலாளரைக் கவர வேண்டுமென்பதற்காகத் தப்பும் தவறுமாய் ஆங்கிலம் பேசுவதுண்டு.
ஆனால் 2000க்குப் பின்னர் ஏற்பட்ட கணினிப் புரட்சியில் எழுத்தின் வடிவமே மாறிவிட்டது. பல சுருக்கெழுத்துக்கள்! You என்பதற்கு u; Are என்ற வார்த்தைக்குப் பதில் 'R'.
மேலும், சில விளம்பரங்களில், தமிழ் வாக்கியங்களையே அபத்தமாக ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அதேசமயம், விஞ்ஞான நுட்பத்தையும், கணினி மேம்பாட்டையும் எளிமையான தமிழில் எழுதுபவர்கள் இப்போது பெருகி வருகிறார்கள்.
இங்கு ஒரு விந்தையான தன்மையைக் குறிப்பிடலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் இயல்பாகத் தமிழில் பேசுபவர்கள், கோபம் தலைக்கேறும்போது, பிழையில்லாத ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
இதேபோல், மூளைப் புற்றுநோயால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த என் உறவினர், தன் அலுவலகத் தோழரைத் தெரிந்து கொண்டு, குழறலான ஆங்கி வார்த்தைகளையே முணுமுணுத்தார். நரம்பியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
இப்போது நிலைமை ஓரளவு மாறியிருக்கிறது என்பது உண்மைதான். விருப்பத்தின் பேரிலும், வேலைவாய்ப்புக்காகவும் மாநில மொழியைப் பலர் கற்றுக் கொள்கிறார்கள்.
இன்று உலகம் மிகச் சுருங்கிவிட்டது. பலர் அயல்நாட்டில் குடியேறுவது சாதாரணமாகிவிட்டது. இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தவர் வெளிநாட்டுக்குச் சென்று நீண்டநாள் தங்கிவிட்டால் தம் தாய்மொழியை மறந்தாலும், குறைந்தபட்சம் அதற்காக வருத்தமாவது படுவார்கள். ஆனால் தமிழர்கள்?
அந்நிய நாட்டில் வசித்துக் கொண்டு, 'என் பெண்ணுக்கு தமிழே தெரியாது' என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள், தமிழர்களாகத்தானிருப்பார்கள். இது ஒரு கசப்பான உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com