மாற்றத்தை ஏற்கும் மனம் தேவை!

நீட் தேர்வை வைத்து நாம் நடத்திய அரசியல், நாம் எந்த அளவிற்கு தாழ்நிலைக்கு சென்றுள்ளோம் என்பதைக் காட்டுகின்றது.

நீட் தேர்வை வைத்து நாம் நடத்திய அரசியல், நாம் எந்த அளவிற்கு தாழ்நிலைக்கு சென்றுள்ளோம் என்பதைக் காட்டுகின்றது. நம் தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் ஆற்றல் குறைவானவர்கள் அல்ல. ஆனால் அவர்களை அப்படிப் பார்க்க வைக்க வைத்துவிட்டது இந்த நீட் தேர்வும், அதை வைத்து நாம் நடத்திய அரசியலும்.
நம் கல்வியை தரம் தாழ்த்தியது நம் மாணவர்களோ, பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ அல்ல. இவர்கள் அனைவரும் அரசு சொல்வதைக் கேட்டவர்கள். அரசு என்பது மக்களை வழிநடத்தும் வழிகாட்டி. அரசை நடத்துபவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள்.
எப்படிப்பட்ட சமுதாயம் உருவாக வேண்டும் என்பதைத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி புதிய சமுதாயம் படைக்கும் மகா மனிதர்கள். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிட இருப்பவர்கள் அரசு அதிகாரிகள்.
இத்தகைய மாண்பினை மேன்மையினைப் பெற்றிருப்பதால்தான் இவர்களை மேதகு, மாண்புமிகு, மரியாதைக்குரிய என்ற வார்த்தைகளை அவர்களின் பதவிகளுக்கு முன் இட்டு அழைக்கின்றோம்.
இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. உயர்ந்த மனிதர்கள். சிந்தனையால், ஆற்றலால் மற்றும் செயல்களால். எனவேதான் இவர்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு, சலுகைகள், வசதிகள், மரியாதைகள் அனைத்தும். இவர்களுக்கு கிடைக்கும் சக்தி என்பது இவர்களுடைய தன்னலமற்ற தியாக வாழ்வில் உருவாகும் ஆத்ம சக்தி.
இப்படித்தான் அடிமைப்பட்டு கிடந்த நம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து நம்மை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள் நம் தலைவர்கள். எனவேதான் அவர்கள் தியாகிகள். அவர்களெல்லாம் தங்கள் குடும்ப நலனை தியாகம் செய்து, தங்கள் சொத்துகளை தியாகம் செய்து மெழுகுவர்த்திபோல் தன் தியாகத்தால் சமூகத்திற்கு ஒளிகாட்டி வழிகாட்டி வாழ வைத்தார்கள்.
அந்த வழிகாட்டுதல்தான் நம் மக்களை கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகளாக மாற்றியது. அவர்களின் தியாகம்தான் நம் சமுதாயத்திற்கு உயர் தர்மநெறிகளை உருவாக்கித் தந்தது. அவர்களுக்குப் பதவிகள், பட்டங்கள் அனைத்தும் அவர்கள் தோளில் போட்டிருந்த துண்டுகளாகவே காட்சியளித்தன. எனவே பதவிகளைத் தூக்கி எறிய அவர்கள் தயங்கியதில்லை.
ஏனென்றால் பதவிக்குமேல் அவர்கள் உயர்ந்து நின்றவர்கள். பதவிகள் அவர்களுக்குள் அடங்கி இருந்தன. பதவிக்குள் அவர்கள் தோய்ந்து போனது கிடையாது. பதவிகள் என்பது சமூகம் உயர மற்றும் மேம்பட பணி செய்யக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி செயல்பட்டனர். அவர்கள் சொல்வது அனைத்தும் மக்களுக்கு வேதங்களாக இருந்தன.
ஏனென்றால் அவை அனைத்தும் உண்மைகள். அவையே சத்தியம், அவையே கடவுள். மக்கள் அவர்களை நேசித்தார்கள், வணங்கினார்கள். மக்களைப் பார்த்து அவர்கள் பயந்து கருத்துக்கூற மறுத்தது கிடையாது.
அப்படி இருந்த தமிழ்நாட்டு அரசியல் இன்று எப்படி இருக்கிறது என்பதை நினைத்தால் பாரதி பாடிய 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது. போட்டிபோட்டு கல்வியின் தரத்தைத் தாழ்த்தினோம்.
தமிழகத்தைவிட பல மடங்கு பின் தங்கிய மாநிலங்கள்கூட தரமான கல்விக்காக நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறுகின்றன. முன்னேறிய மாநிலம், இந்தியாவில் முதல் மாநிலமாக ஆவதுதான் லட்சியம் என்று சொல்லும் ஒரு மாநிலம், எங்களால் அகில இந்திய நீட் தேர்வில் போட்டிபோட முடியாது. நாங்கள் பின்தங்கி உள்ளோம் என்று கூறுவது உண்மையா? அரசியலா? அறியாமையா? நாடகமா என்பதுதான் நமக்குப் புரியவில்லை.
உண்மையில் கல்வியின் தரத்தில் நாம் பின் தங்கியிருந்தால் வேறு எதில் முன்னேறியிருந்தாலும் அதனால் பயனில்லை. அமெரிக்கர்கள் வீழ்ந்தாலும் நாங்கள் மீண்டெழுவோம் என்று கூறுவதற்குக் காரணமே அவர்களின் வலுவான விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், அறிவுத்திறனும்தான்.
அறிவின் உச்சத்தால்தான் இன்று அந்நாடு அறிவுப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு ஆற்ற முடிகிறது. எனவே இப்பொழுதுதாவது நாம் உண்மையை மறைக்காமல் மக்களுக்கு சொல்லியாக வேண்டும். தவறு நடந்துவிட்டது என்றால் அதை ஒப்புக்கொள்வதற்கு தைரியம் வேண்டும், அதைத் திருத்திக் கொள்வதற்கு அதற்கு மேல் தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை நாம் இன்று வரவழைக்க வேண்டும்.
அந்த தைரியம் வந்துவிட்டால் நாம் நம்மை மாற்றிக்கொள்ளலாம். மாற்றத்திற்கு முயற்சி செய்யலாம். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஓர் இளைஞனால் கொண்டுவரப்பட்ட ஒரு கல்வித் திட்டத்திற்கு பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு நிதி உதவ முன் வருகின்றன.
அந்தத் திட்டமே 'பணமில்லா பெருமாற்றம்' என்பதுதான். அந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி தேவை இல்லை, கல்வியாளர்கள் தேவையில்லை, அரசின் நிதியும் தேவையில்லை.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உத்தரப் பிரதேசத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார் அந்த இளைஞர்.
இதற்கு பெரும் மூலதனமோ, மிகப்பெரிய தொழில்நுட்பமோ தேவை இல்லை. ஆசிரியர், அலுவலர், அதிகாரிகளின் சிறு சிந்தனை மாற்றங்கள் பெருமாற்றங்களை உருவாக்கி உள்ளன. அது உத்தரப் பிரதேசத்தில் நடைபெறமுடியும் என்றால் நம் தமிழ்நாட்டில் நடத்த முடியாதா என்பதுதான் கேள்வி.
அவர் ஒரு பஞ்சாயத்து யூனியன் பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களை ஓரிடத்திற்கு அழைத்து வந்து ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார். அதில் நம் கல்வியை எப்படி மேம்படுத்துவது என விவாதித்தார். அவர் இந்தக் கல்வியில் உங்களால் மாற்றம் கொண்டுவர முடியுமா, அப்படி முடியும் என்றால் எப்படி என்று ஆசிரியர்களிடம் வினவினார்.
எங்களால் முடியும் எனக் கூறி ஒரு அறுபத்து ஏழு யுக்திகளை அந்த ஆசிரியர்கள் கூறி இருக்கின்றனர். அவற்றை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என வினவ, அனைவரும் நிச்சயமாக நடைமுறைப்படுத்துகிறோம் என்று கூறி, அவர்கள் சொன்ன 67 யுக்திகளையும் நடைமுறைப்படுத்திக் காட்டினர்.
இந்தச் செய்தியை அந்த மாநில முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதல்வர் 'மாநிலம் முழுதும் நடைமுறைப்படுத்த உதவி செய்கிறேன், திட்டத்தை விரிவுபடுத்துங்கள்' என்றார்.
மூன்று ஆண்டுகளில் அத்தனை ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு ஆசிரியர்கள் கொண்டுவந்த அத்தனை திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மிகப்பெரிய மாற்றத்தை ஆசிரியர்களிடம் கொண்டுவந்துவிட்டனர்.
வட இந்தியாவில் ஏழு மாநிலங்களில் நடைமுறைப்படுத்த அந்த இளைஞரைக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இன்று அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்தச் சாதனைக்கான இளைஞனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்பொழுது இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், ஒரு பைசாகூட செலவு இல்லை. அதே ஆசிரியர், அதே பள்ளி, அதே பெற்றோர், அதே மாணவர்கள், அதே அதிகாரிகள்.
இவர்களிடம் இருக்கும் அளப்பரிய ஆற்றலை வெளிக்கொண்டு வந்து செயல்பட வைத்தேன். அது இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இதன் அடித்தளம் ஆசிரியர். ஆசிரியரை நாம் மதித்து அவர் ஆன்மாவைத் தொட முயல வேண்டும்.
மகாத்மா காந்தி இந்தியாவிற்கு விடுதலை வாங்க உலக வங்கியிடமா கடன் வாங்கினார்? படிப்பில்லா மக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆத்ம சக்தியைப் பெருக்கி வெள்ளையனை வெளியேற்றினார். அதுபோல்தான் நம் ஆசிரியர்களின், அதிகாரிகளின் ஆன்மாவைத் தொட முயன்றேன்.
அவர்கள் துள்ளிக்குதித்து பள்ளியை மாற்றிவிட்டனர் தங்கள் செயல்பாட்டாலே. இன்று இந்தத் திட்டம் வட மாநிலங்களில் செயல்பட ஆரம்பித்துவிட்டது என்றார்.
எனவே இங்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்டு ஏற்படுத்த முடியும். அதற்கு முதலில் தேவை மாற வேண்டும் என்ற மனோபாவம்தான். அது மட்டுமல்ல, கட்டுப்பாடு மற்றும் செயல்பாடு கூட்டுச் சக்தியை உருவாக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினேன் என்றார்.
கடைசியாக இந்தத் திட்டத்திற்கான கருத்து எங்கே இருந்து வந்தது என்றேன், சிரித்துகொண்டே சொன்னார், அது அரவிந்த யோகியிடமிருந்து எடுத்தது. இதை நான் அதிகமாக யாரிடம் கூறுவது இல்லை. இதை நீங்கள் வலியுறுத்திக் கேட்டதன் விளைவாகச் சொன்னேன் என்றார்.
அரவிந்தர் வழிபடுவதற்காக வாழ்ந்தவர் அல்ல, மாற்றத்திற்காக வாழ்ந்தவர். அந்த மாற்றத்தை கல்வியின் மூலம் ஓர் இளைஞர் செய்வது நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com