அடிப்படை உரிமை காப்போம்

அண்மையில் நாளிதழ்களில் வெளியான இரண்டு செய்திகள் நமது கவனத்தினை ஈர்க்கின்றன.

அண்மையில் நாளிதழ்களில் வெளியான இரண்டு செய்திகள் நமது கவனத்தினை ஈர்க்கின்றன.
தமிழக எதிர்க்கட்சியின் தலைவர், ஒரு மாவட்டத்துக்கு சென்று, தமது கட்சியினர் செய்திருக்கும் பணியினை பார்வையிட அந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தடை விதித்தத்தையும், அதனை எதிர்த்து அக்கட்சியினர் நீதிமன்றம் சென்று அங்கு அவர் செல்வதற்கு தடை நீக்கம் பெற்றது ஒரு செய்தி.
சேலம் மாவட்ட நிர்வாக அதிகாரியையும், மாவட்ட காவல் அதிகாரியையும் இத்தடைக்கு பொறுப்பாக்கி, எதிர்க்கட்சி தலைவரை, சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்தது தவறு' என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம்.
'இது அவர்களது தவறான நோக்கத்தை வெளிப்படுத்துவது ஆகும்' என்று கடுமையான கண்டனத்தையும் தெரிவித்து இருப்பது கவனிக்க தக்கது.
இன்னொரு செய்தி: தமிழக ஆளும் கட்சியினை சேர்ந்த ஒரு அணியினர், தங்களது அணியின் சார்பாக நடத்த இருக்கும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு, அனுமதி கோரியபோது, நிர்வாகம் மெத்தனமாக இருந்ததன் காரணமாக, அப்பிரிவினர், மதுரை உயர் நீதிமன்றம் சென்று அக்கூட்டத்துக்கு அனுமதி பெற்று வந்திருப்பது ஆகும்.
இவ்விரண்டு, விஷயங்களிலும் நீதிமன்றம் தெரிவித்து இருக்கும் கருத்துகள் மிக முக்கியமானவை. ஒரு தனி மனிதர் தமது நாட்டுக்குள் எந்த பகுதிக்குள்ளும் விஜயம் செய்வது அவருக்கு உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதேபோல தமது கருத்துகளை எடுத்துச் சொல்ல, பொதுக்கூட்டம் நடத்துவது என்பதும், அடிப்படை உரிமை ஆகும்.
இவ்விரண்டு விஷயங்களிலும், இந்த அடிப்படை உரிமை மறுக்கப் பட்டது அல்லது அனுமதி தாமதிக்கப்பட்டது என்பதும் - அதற்காக அவர்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்திருப்பது என்பதும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள் ஆகும்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 19 /1(a), (b ), (d ) ஆகிய பிரிவுகள், பேச்சு சுதந்திரத்துக்கும், அமைதியாக - கூடுவதற்கும் , தங்களது நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று வரவும் உரிமை அளித்துள்ளது. தேசத்தின் இறையாண்மைக்கும் - சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளையும் என்பதற்கு ஆணித்தரமான முகாந்திரம் இருந்தால் மட்டுமே, இவற்றை தடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
சாதாரணமாக கிடைத்த உரிமைகள் அல்ல இவை. பல ஆண்டுகள் பலர் போராடி, சிறை சென்று, சிலர் உயிரையும் கொடுத்துப் பெற்றுத்தந்த அடிப்படை உரிமைகள். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நிர்வாகம், எந்த அரசியல் கட்சிக்கும் சார்புடையதாக அல்லாது, நடுநிலைமையோடும் பாரபட்சம் இன்றியும், அரசியல் சட்டத்தை நிலை நிறுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும்.
இவை இரண்டு தளங்களில், கேள்விகளை எழுப்புகின்றன. ஒன்று ஆளும் கட்சி தமது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அடிப்படை உரிமைகளை மறுக்க எத்தனித்தது. இன்னொன்று நிர்வாகம், இந்த தவறான செயலுக்கு துணை போனது.
ஆளும் கட்சியினர், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, தங்களுக்கு எதிர்க் கருத்துக் கொண்டிருப்போரை செயல்பட விடாமல் தடுக்க நினைப்பது ஒரு புறம் இருந்தாலும், அதற்கு அவர்கள் தங்களது அரசு எந்திரத்தை - நிர்வாகத்தை பயன்படுத்தியது தவறு ஆகும்.
சட்டத்துக்கு எதிராக , செயல்பட நிர்வாகம் இணங்கியது என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. பிரிட்டிஷ் நிர்வாகத்தில், அரசுக்கு இணக்கமாக, அன்றைய நிர்வாகம் செயல் பட்டதற்கும், இன்றைய நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஒரு நீதிமன்றம் தலையிட்டால்தான் நாம் நம் நாட்டில் அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில்கூட செயலாற்ற முடியும் என்பது, மிக மோசமான அறிகுறி ஆகும். ஜனநாயக மாண்புகள் கேள்விக்குறியாக்கப் படுகின்றன என்பதனைத்தான் இவை உறுதி செய்கின்றன.
அப்படி நிர்வாகம் தவறு இழைத்திருக்கிறது என்றால், அதற்கான காரணம் என்ன? அதிகாரிகள் அச்ச உணர்வுடன் செயல்படுகின்றார்களா? அடிப்படை புரிதல் இல்லாது செயல்படுகிறார்களா? நிர்வாக இயந்திரம் தனது சுதந்திரத்தை இழந்து விட்டதா? அவர்கள் ஏன் தவறுகளை சுட்டி காட்டவில்லை போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன.
நிர்வாகம் என்பது, ஆளும் கட்சிக்காக மட்டும் இல்லை. அது மக்கள் நலனுக்காக இருப்பது. நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, வழங்கப்படுவது போன்ற தோற்றமும் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.
அதுபோல, நிர்வாகம் என்பது நியாயமாக நடுநிலையோடு செயல்பட்டால் மட்டும் போதாது; நியாயமாக செயல்படுவதாக மக்களுக்குத் தோற்றமளிக்கவும் வேண்டும்.
செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சிகளுக்கே இந்நிலை என்றால் சிறு அமைப்புகள் மற்றும் சாமான்ய மனிதனின் நிலை என்ன? அரசியல் கட்சிகள் தங்களது பிரச்னைகைளுக்காக நீதிமன்றம் சென்று வாதிட்டு நீதி பெற முடியும். சாமானிய மனிதன், தனக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது நீதிமன்றம் செல்வது சாத்தியமா?
ஒரு தனியார் நிறுவனத்தில் ஒருசில நிர்வாகிகள் செய்யும் தவறு வெளிச்சத்துக்கு வரும்போது, அவர்களது மேலதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இந்த நிகழ்வில், நீதி மன்றம் சுட்டிகாட்டிய அடிப்படையில், அரசு அவர்கள் மீது நிர்வாகத் துறை ரீதியான விசாரணை அல்லது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறதா?
நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com