தரமற்றக் கல்வியால் தாழ்ந்த தமிழகம்!

தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
தரமற்றக் கல்வியால் தாழ்ந்த தமிழகம்!

தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலுக்காக நான்கு துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏழு கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகும். 20 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகும். எஞ்சிய 495 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாகும்.
பாலிடெக்னிக் கல்லூரிகள் 419, கட்டட வடிவமைப்புக் கல்லூரிகள் 21 உள்ளன.
மேலே கண்ட அனைத்துக் கல்லூரிகளிலிருந்து ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துப் பட்டம் பெறுகின்றனர். ஆனால், இவர்கள் பெறும் கல்வியின் தரம் எவ்வாறு அமைந்துள்ளது என்ற கேள்விக்கு விடையளிப்பது போல உச்சநீதிமன்றத்தில் அண்மையில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஒருவர் கல்லூரி நிர்வாகத்தினால் தான் மிரட்டப்படுவதாகவும், பல்வேறு வகையில் அவமதிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர், நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவற்றை மேற்கண்டப் பேராசிரியர் தனது மனுவில் குறிப்பிட்டு 'மாணவர்களிடம் உள்ள திறமையையும் அறிவாற்றலையும் கண்டறிந்து வெளிக்கொணர ஆசிரியரால் மட்டுமே இயலும். பண்பாட்டுத் தளத்தில் மாணவனிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தியாக ஆசிரியர் திகழுகிறார்' என்று எடுத்துக்காட்டினார்.
அகில இந்திய தொழிற்கல்விக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நாடெங்கிலும் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றும் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல வகையிலும் பெரும்
துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதையும் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தனது மனுவில் தொழில் கல்வி முறையில் கையாளப்படும் தவறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருமளவிற்குப் பாதிக்கப்படும். தனியார் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதற்கு அவர்களின் ஆசிரியர்களே பொறுப்பாவார்கள். ஏனென்றால் எத்தகைய இலட்சிய நோக்கமும் இல்லாமல் ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். அதற்குக் கல்லூரி நிர்வாகத்தின் கைப்பிடியில் அவர்கள் சிக்கித் திணறுவதுதான் காரணமாகும்.
தனியார் பொறியியல் கல்லூரி நிருவாகம், ஆசிரியர்களை வேலைக்குச் சேர்க்கும்போதே அவர்களுடைய பட்டச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. மாதக்கணக்கில் அவர்களுடைய ஊதியத்தையும் நிறுத்தி வைக்கிறது. வேலையைவிட்டு விலகிச்செல்லவும் விடுவதில்லை. பட்டச் சான்றிதழ்கள் இல்லாமல் அவர்கள் வேறெங்கும் வேலைக்குப் போகவும் முடியாது.
இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு எவ்வாறு பொறுப்பான, செம்மையான கல்வியைக் கற்பிக்க முடியும்?
சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரம் விதிகளின்படி எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இருப்பதில்லை. அரசாங்கத்தால் அல்லது அகில இந்திய தொழில் கல்வி கழகத்தால் அக்கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது போலியான ஆசிரியர்கள் முன் நிறுத்தப்பட்டு ஏமாற்றும் பழக்கம் நிலவுகிறது.
ஒரு துறைக்கு நியமிக்கப்படும் ஆசிரியர் அவருக்குச் சிறிதும் தொடர்பில்லாத மற்றொரு துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய மோசடிகள் நடந்தால் தொழிற்கல்வி என்பது எவ்வாறு சிறப்பாக அமைய முடியும் என அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது: 'அகில இந்திய தொழிற்கல்விக் கழகம் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டுச் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நிபுணர் குழு ஒன்றினையும் அமைக்க வேண்டும்'.
தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான 495 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலும் மேற்கண்ட தவறுகள் நடைபெறுகின்றன. கல்வி வணிகமாக்கப்பட்டுவிட்டது. அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களைப்போல பல மடங்கு அதிகமான கட்டணங்களை தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
சேருவதற்கே நன்கொடை என்ற பெயரால் பெருந்தொகை கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கற்பிக்கப்படுவது இல்லை. அதற்கேற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. நியமிக்கப்படும் ஆசிரியர்களும் நிருவாகத்தின் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
அவர்களுக்கு முழுமையான ஊதியம் அளிக்கப்படுவதில்லை. குறைந்த ஊதியம், மதிப்பற்ற நிலை, மிரட்டல் போன்றவற்றிற்கு இடையே வேலை பார்க்கும் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களுக்கு நிறைவான கல்வியை அளிக்க முடியும்? ஒருபோதும் முடியாது.
இதன் விளைவாக மாணவர்கள்தான் பாதிப்புக்குள்ளாவார்கள். அரைகுறையாகக் கற்று பட்டம் பெறும் மாணவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படாமல் போவார்கள். இதன் விளைவாக நாடும் சமுதாயமும் நீண்ட காலத்திற்குப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கட்டணம், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அரசும் மேற்கொள்ளவில்லை.
இதன் விளைவாக தனியார் கல்லூரிகளில் நாளுக்கு நாள் சீர்கேடுகள் பெருகி வருகின்றன. இவற்றை அடியோடு களைந்து தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டுமானால் அரசு அமைத்த குழுவின் பரிந்துரைகளைத் தனியார் கல்லூரி நிருவாகங்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு நிறைவேற்றத் தவறும் கல்லூரிகளின் அங்கீகாரங்கள் இரத்து செய்யப்படுவதோடு நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும். இல்லையேல் தமிழகம் நாளுக்கு நாள் தாழ்ந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
நமது நாட்டில் வேளாண்மைக்கு அடுத்ததாக பல இலட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் கட்டடத் தொழிலாகும். தொழில்நுட்ப அறிவினை அடிப்படையாகக் கொண்டுள்ள இத்தொழிலை முறைப்படுத்திக் கட்டுப்படுத்தும் அமைப்பு எதுவும் இல்லை.
மருத்துவப் பட்டதாரி ஒருவர் தொழில் செய்ய வேண்டுமானால் அகில இந்திய மருத்துவக் கழகத்தில் தன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சட்டம் படித்த ஒருவர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் அகில இந்திய சட்டக் கழகத்தில் தன் பெயரைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஆனால், கட்டுமானவியல் தொழிலில் ஈடுபடும் பொறியாளர் ஒருவர் எங்கேயும் பதிவு செய்யாமலும் எந்த அமைப்பில் சேராமலும் தனது தொழிலை நடத்த முடியும்.
கட்டுமானவியலில் பொறியியல் பட்டம் பெறாமல் மின்னியல், தொழில்நுட்பவியல், கணினி இயல் போன்றத் துறைகளில் பட்டம் பெற்ற பொறியாளர்களும் மற்றும் பொறியியல் பட்டம் பெறாதவர்களும் தங்களுக்கு சிறிதளவிற்குக்கூட தொடர்பில்லாத கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
இதன் விளைவாக தரமற்றக் கட்டடங்கள் கட்டப்படுவதும், கட்டும்போதே இடிந்து விழுவதும் அதனால் பல உயிர்கள் பலியாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையில் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானதும் இடிபாடுகளில் சிக்கி பலர் மாண்டதும் அண்மையில் நடைபெற்ற மறக்க முடியாத துயர நிகழ்ச்சியாகும்.
குசராத் மாநிலத்தில் கட்டடத் தொழில் புரிவோரை ஒழுங்குமுறைப்படுத்த 2006-ஆம் ஆண்டில் குசராத் தொழில்துறை கட்டுமானவியல் பொறியாளர்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிணங்க கட்டடப் பொறியாளர்களுக்கான தனியான ஒரு கழகம் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும்.
அதைப் போன்றதொரு சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்பட்டு, சுயதொழில் புரியும் கட்டுமானவியல் பொறியாளர்கள் அனைவரையும் அக்கழகத்தில் பதிவு செய்து அதன் பின்னரே அவர்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்ல, தனியார் நடத்தும் அனைத்துவகைக் கல்லூரிகளிலும் ஏன் அரசு நடத்தும் கல்லூரிகளிலும்கூட மேற்கண்ட ஒழுங்கீனங்களும், முறைகேடுகளும் பரவலாக நடைபெறுகின்றன.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், தொடர்ந்து பல தலைமுறைகளைச் சேர்ந்த மாணவர்களும் தரமற்ற கல்வி கற்க நேரிடும்.
அதன் விளைவாக தமிழகம் எல்லா வகையிலும் தாழ்ந்து நமது முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com