வெற்றியும் தோல்வியும்

சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு படிக்க நேர்ந்த சம்பவம் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அது மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதுதான்.

சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு படிக்க நேர்ந்த சம்பவம் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அது மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதுதான்.
அவர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து சில நாட்கள் கழித்து இப்படியான முடிவை எடுத்திருக்கிறார். காரணம் தான் விரும்பிய மருத்துவப் படிப்பு கிடைக்காதது என குறிப்பிட்டிருக்கிறார். வாழ்க்கை என்பது அவ்வளவுதானா?
12-ஆவது வரை படித்த ஒரு மாணவன் அல்லது மாணவி படித்த படிப்பு தங்கள் வாழ்க்கை குறித்து புரிதலை ஏற்படுத்தாத படிப்பு என நம்மால் உணர முடிகிறது. கிட்டதட்ட அவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உடைய வயதை அடைந்தவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை குறித்த புரிதல் ஏன் இல்லை?
விரும்பியது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை விரும்பு என்று சொல்வார்கள். எதற்காக அப்படி சொல்லப்பட்டது எனில், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு யாரும் தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று உணர்ந்தவர்களின் அறிவுரையாகத்தான் அது இருந்தது.
விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பதும், தனக்கு கிடைக்காத ஒன்று பிறருக்குக் கிடைத்தது என்பதற்காக, அவரை பழிவாங்குவது என்பதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சிந்தித்தால் புரியவரும்.
உணர்ச்சி வசப்பட்டு செயல்படுவது தவறானசெயலுக்கு வழிவகுத்து விடும். அப்படி பலரும் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்கிறோம்.
ஒருமுறை ஒரு போட்டியில் அல்லது தேர்வில் தோற்றுவிட்டால், அதோடு அந்த முயற்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு, இனிமேல் இது நமக்கு சரிப்பட்டு வராது என முடிவு செய்து தங்கள் லட்சியத்தை, இலக்கினை கைவிட்டவர்கள் ஏராளம். காரணம், அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாமையே.
ஒருசிலர் பலமுறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து தாங்கள் அடைய வேண்டிய, விரும்பிய இலக்கினை அடைந்து விடுவார்கள். அப்படிப் போராடி வென்றவர்களைத்தான் சரித்திரம் போற்றிக் கொண்டாடுகிறது. தோல்வி அடைந்தவர்களை வரலாறு கணக்கில் வைத்திருக்காது.
அதுபோலத்தான் ஒருவருக்கு வெற்றி கிடைக்கிறது என்றால், மற்றொருவர் தோல்வி அடைந்தவர் ஆனால்தானே அவர் வெற்றி அடைந்தவர் ஆகிறார். ஆகவே, ஒருவர் வெற்றி பெறுவதற்குக்கூட நாம் காரணமாக இருந்தோம் என்கிற மனப்பான்மை கொண்டு, மனம் தளர்ந்துவிடாமல் அடுத்தமுறை முயன்று நாம் வெற்றி பெற வேண்டும்.
ஒருவருக்கு வாழ்வில் வெற்றியே கிடைத்துக் கொண்டிருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. ஏனெனில் இந்த உலகின் இயற்கை நியதியே மாற்றம் ஒன்றுதான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட தத்துவம்.
இன்று தோற்றவர் நாளை வெற்றி பெறுவார், இன்று வென்றவர் நாளை தோல்வி அடைவார். இது இயற்கைதான். நாம் தோற்றாலும் ஒதுங்கிவிடாமல் தொடர் முயற்சியில் இருந்தால்தான் அடுத்த முறை போட்டியில் நம்மால் வெற்றிபெற முடியும்.
ஒருமுறை தோற்றவுடன் போட்டியிலிருந்து விலகிவிட்டாலோ, தோற்ற விரக்தியில் எதாவது விபரீத முடிவுகள் எடுத்துவிட்டாலோ, மீண்டும் போட்டியிடக்கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
ஆகவே, தொடர்ந்து இருப்பது என்பது எந்த ஒரு துறையிலும் முக்கியமான ஒன்று. சில துறைகள் சிறிது சிறிதாகத்தான் வளர்ச்சி பெறும். சில துறைகள் மிகவேகமான வளர்ச்சி கொண்டிருக்கும். இதற்கெல்லாம் காலச்சூழலும் ஒரு காரணமாகும்.
எனவே, நாம் நம் கடமையை ஒழுங்காக, சிறப்பாக தொடர்ந்து செய்துகொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தால் நமக்கான வாய்ப்பு வரும்போது வெற்றிக் கோப்பையைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாக ஆவோம்.
ஆகவே, படிப்பு ஆனாலும், விளையாட்டு ஆனாலும், தொழில் ஆனாலும் நமது முயற்சியை ஒழுங்காக, உண்மையாக, முறைப்படி, சிறப்பாக செய்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொன்றையும் அதற்கான கால அடிப்படையில் செய்வதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையற்ற நேரத்தில் செயல்பட்டால் நமது உண்மையான, கடினமான முயற்சியும் வீணாகப் போய்விடும்.
தனக்குப் பிடித்த ஒரு பொருளைப் பெற்றோர் வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்வோர் உண்டு. தன் காலுக்கு செருப்பு இல்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கும் ஒருவர், வழியில் கால்களை இழந்து தவழ்ந்துவரும் ஒருவரைப் பார்த்தவுடன் எப்படிப்பட்ட மனநிலையை அடைவார்?
எனவே, நமக்கு துன்பம் வரும்போது நமக்கும் கீழே உள்ளவர்களின் நிலையைப் பார்த்து நம் நிலை எவ்வளவோ மேல் என எண்ணிக் கொள்ள வேண்டும். நம் விடாமுயற்சியையும், பயிற்சியையும், நேர்மையான வழியில் செய்து கொண்டிருந்தால் நல்லது.
நம்மைவிட வசதியும் வாய்ப்பும் குறைவாக உள்ளவர்களே சாதித்துக் கொண்டிருக்கும்போது நமக்குக் கிடைத்த இந்த அருமையான வாய்ப்பினை நாம் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்து இனிமேலாவது சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com