காலத்தின் அருமை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் பகலில் சூரியனைக் கொண்டும், இரவில் நிலவையும், நட்சத்திரங்களைக்கண்டும் காலத்தைக்கணித்து அன்றாடம் செயல்பட்டார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் பகலில் சூரியனைக் கொண்டும், இரவில் நிலவையும், நட்சத்திரங்களைக்கண்டும் காலத்தைக்கணித்து அன்றாடம் செயல்பட்டார்கள். காலமழை பெய்வதும் அதனை எதிர்பார்த்துக்காலத்தே பயிர் செய்வதும், குறிப்பிட்ட காலத்தில் அதனை அறுவடை செய்வதும் காலம் காலமாக நடைபெற்று வரும் நடைமுறைகள்.
நாள் காட்டிகளையும், கடிகாரங்களையும் நாம் ஏற்படுத்திக்கொண்டது உன்னதமான காலத்தை நாம் உணரவும் அறியவும் உரிய முறையில் பயன்படுத்திடவும்தான். விபத்துக்குட்பட்ட ஒருவரைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு சேர்த்திடும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், தக்க சமயத்தில் சிகிச்சையளித்து உயிர் காத்திடும் மருத்துவருக்கும் காலத்தின் அருமை வெகுவாகத் தெரிந்திருக்கும்.
தேர்வு எழுதுகின்ற நேரமும், தேர்வு முடிவுகளையும், தேர்தல் முடிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற நேரமும் எத்துணை முக்கியத்துவமுடையது என்பது அதற்காகக் காத்திருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
ஒலிம்பிக்கில் பங்கு கொண்டு சில நொடிகள் முன்னதாக வந்து முதலிடம் பெறுபவருக்கும், சில நொடிகள் பின்னடைந்து முதலிடத்தை தவறவிட்டு அடுத்தடுத்த இடங்களைப் பெறுபவர்களுக்கும் காலத்தின் அருமை வெகுவாகத் தெரிந்திருக்கும்.
2012-இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் "ஜமைக்கா' நாட்டைச்சேர்ந்த உசேன் போல்ட் என்பவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.63 விநாடிகளில் வந்து தங்கப்பதக்கம் பெற்று உலகின் அதிவேக
ஓட்டக்காரன் என்ற சாதனை படைத்ததும், அவரைத் தொடர்ந்து 9.75 விநாடிகளில் அதாவது சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் 2-ஆம் இடம் பெற்ற விளையாட்டு வீரருக்கும் காலம் எத்துணை உன்னதமானது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
கண்தானம் செய்து இறந்தவரின் கண்களைப் பெற்றுச்செல்ல உரிய அமைப்பினருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் விரைந்து வந்து அவரது கண்களைத் தானமாக எடுத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள நான்கு பேருக்குக் கண் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்து பொருத்தி அவர்களது கண்களுக்கு ஒளியூட்ட முடிகிறது.
இந்த நிகழ்வுகள் ஆறு மணி நேரத்திற்குள் நடைபெற்றாக வேண்டும். காலம் தவறினால் பயனற்றதாகிவிடும். பிறக்கும்
குழந்தை கூட உரிய காலத்திற்கு முன்பே பிறந்தால் பல சிரமங்களுக்கு உள்ளாவதும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் காலத்தே நிகழாமையினால் ஏற்படும் விளைவுகளே.
கோவில்களிலும், மசூதிகளிலும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யப்படுவதும், திருமணம் போன்ற மங்கல காரியங்களுக்கு அழைப்பிதழில் நாள், நேரத்தைக்குறிப்பிட்டு உரிய நேரத்தில் அதனை நடத்திட முனைவதும் காலத்தின் அருமையை உணர்த்துபவையே.
மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு தொடங்கி இறப்புவரை ஒவ்வொரு நிகழ்வும் காலத்தே செய்யப்படுவதால் மட்டுமே
செம்மை அடைகிறது. காலத்தினாற் செய்யப்படும், அல்லது கிடைத்திடும் சிறு உதவிகள் கூட மிகப்பெரிய அளவில் நன்மைகள் தருவதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம்.
சிறந்த அறிஞர்களும், கடமை உணர்வு மிக்கவர்களும், உழைப்பாற்றல் மிக்க உன்னதமானவர்களும், நேர்மையான அரசியல் தலைவர்களும் ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களும், சாதனை புரிய விரும்புவர்களும் கையாண்ட முதன்மையான ஒழுங்குமுறை காலந்தவறாமையும் காலத்தை முறையாகப் பயன்படுத்தியதும்தாம்.
சாதாரண நிறுவனங்கள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை தங்களின் வேலை நேரத்தைக் குறிப்பிட்டு அதன் நிறுவனத்தின் பணியாளர்கள் உரிய நேரத்திற்கு வருகைதந்து பணியாற்றும் நேரத்தில் சிரத்தையுடனும், செயல்திறனுடனும் பணியாற்றுவதையே பெரிதும் விரும்புவர்.
அன்றாடம் நம் வீட்டுக்கு வரும் பால்காரரும், செய்தித்தாள் போடுபவரும், வீட்டு வேலைக்கு வரும் நபர்களும் உரிய நேரத்திற்கு வரவில்லை எனில் நாம் வீட்டில் படும்பாடு நமக்குத்தான் தெரியும். உரிய நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்வதும், அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்வதும் மன உலைச்சளைத் தவிர்க்கும்.
பேருந்து, ரயில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்தால் முன்னதாகவே ஆயத்தமாகி கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும். எந்தப் பயணம் மேற்கொள்ளும்போதும் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்று விடுவதைப் பழக்கமாக்கினால் பயணம் இனிதாகிவிடும்.
மேலும் நமக்கான வேலைக்கு வருபவர்கள் சரியாக நேரத்திற்கு வரவேண்டும் என நாம் எதிர்பார்ப்பது போல் நாம் பணிபுரியும் இடங்களுக்கும், நிறுவனங்களுக்கும் சற்று முன்னதாகச் சென்றுவிட வேண்டும். தாமதமாகச் சென்று அதற்கு ஏதாவது காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது தன்மானத்திற்கு இழுக்கு.
மேலும் நாம் ஊதியத்தில் சற்று குறைவு ஏற்பட்டாலும் ஏன் என்று கேட்கத் தயங்கமாட்டோம். அப்படியிருக்கும்போது பணிக்கு தாமதமாகச் சென்று முழு ஊதியத்தையும் பெறுவது என்பது எந்த வகையில் சரி?
பெரும்பாலான அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், இலக்கியக் கூட்டங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்குவதும் இல்லை. உரிய நேரத்தில் முடிப்பதுமில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய ஒரு சிலருக்காகப் பல நூறு பேர் தங்களது பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு சில மணி நேரம் காத்திருப்பது காலவிரயம் மட்டுமின்றி சுயமரியாதைக்கு ஏற்படும் சோதனையுமாகும்.
பொன்னினும் மேலான காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டோமேயானால் அதுவே நமக்குப் பெருமை சேர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com