மீண்டும் தவறு செய்யலாமா?

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக்கொள்வதை ஏற்பது போல உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக்கொள்வதை ஏற்பது போல உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதற்காகவே காத்திருந்தது போன்று நீதிபதிகளும் உடனே அணை கட்டி கொள்ளலாம் என்று திருவாய்
மலர்ந்து அருளியுள்ளனர். இப்போது தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சமாளிக்கிறது.
காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் மீது கர்நாடகம் தொடுக்கும் இறுதி யுத்தமே மேக்கேதாட்டு அணை என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறோம். ஒகேனக்கல்லுக்கு முன்பாக 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு).
அதற்கு மேலே அடர்ந்த காட்டுப்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் இயற்கையாகவே அமைந்துள்ள பிரம்மாண்ட மலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மலையும் ஏறத்தாழ ஆயிரம் அடி உயரம் இருக்கும். "ஒண்டிகுண்டா' (தமிழில் "ஒற்றைக்கல்') என்ற அந்த இடத்தில்தான் புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது கர்நாடகம். அதற்கு முன்பே முக்கிய துணை ஆறான அர்க்காவதி, காவிரியுடன் "சங்கமா' என்ற இடத்தில் சங்கமமாகி ஒகேனக்கல்லை நோக்கி ஓடி வருகிறது.
1980-களில் அப்போதைய கர்நாடக முதலமைச்சர் குண்டு ராவ் தீட்டிய மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை, 2012-இல் அம்மாநிலம் தூசு தட்டி எடுத்தது. இதற்காக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழு ரகசியமாக வேலை செய்து திட்ட அறிக்கை அளித்தது.
தமிழகம் சுதாரித்து எழுவதற்குள் பூர்வாங்க வேலைகளை முடித்து விட்டார்கள். 2012-இல் இது தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, "கர்நாடகா மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது; தமிழக அரசு அதனை எந்தச் சூழலிலும் அனுமதிக்காது' என்றார்.
இப்படிதானே ஒவ்வொரு முறையும் நடந்திருக்கிறது. கர்நாடகம் எதற்காவது அசைந்து கொடுத்திருக்கிறதா? இப்போதும் அப்படியே. பல ஆண்டுகளுக்குப் பிறகு 2013-இல் பெருமழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து வந்து மேட்டூர் அணை நிரம்பியது.
இதைப் பார்த்ததும் கர்நாடக அரசு இன்னும் விசனப்பட்டது. "அணை
நிரம்பும் அளவுக்கு தமிழகத்திற்குத்
தண்ணீர் போகிறதா..? எப்படி அனுமதிப்பது இதை?' புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின்
சித்தராமையா மேக்கேதாட்டு அணைக்கான வேலைகளை விரைவுபடுத்தினார். மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தமிழ்நாடு. "காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் பொறுப்பில் கர்நாடகத்தில் உள்ள அணைகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
ஜனவரி 2013 வரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் பாக்கியைத் திறந்துவிடவும் ஆணையிட வேண்டும்' என்று தமிழக அரசின் மனுவில் கோரப்பட்டது. இதுகுறித்து 2013 டிசம்பர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரடங்கிய அமர்வு முடிவை அறிவித்தது.
அப்போது நீதிபதி லோதா சொன்ன வார்த்தைகள்: "காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை. தமிழகத்தின் மனுவுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
ஒரு மாநில அரசு அணை கட்டுவது போன்ற பெரிய திட்டங்களை மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல் நிறைவேற்ற முடியாது. அதனால் பயப்படத் தேவையில்லை. தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதைக் கவனித்துக் கொள்ளதான் காவிரி மேற்பார்வைக் குழு எனும் இடைக்கால ஏற்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்கனவே செய்திருக்கிறது. மழை நன்கு
பெய்து நீர் வரத்து சீராக உள்ளது.
போதிய நீர் கிடைப்பதைக் கடவுள் கவனித்துக் கொள்வார்' என்று நியாயம் வழங்க வேண்டிய நீதிபதிகள், ஆண்டவனை நோக்கி கை காட்டினார்கள்.
ஆனால் கர்நாடகத்தின் வாடிக்கை என்ன என்பது வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் புரிந்துவிடும். ஆரம்பிக்கும்போது மின்சாரத்திற்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள். போகப்போகதான் வேலையைக் காட்டுவார்கள்.
கிருஷ்ணராஜ சாகரில் இருந்து அவர்கள் செய்து வரும் இந்த தந்திரம் தெரியாத உச்சநீதிமன்றம், "மத்திய அரசுக்குத் தெரியாமல் எப்படி கர்நாடக அணை கட்ட முடியும்' என்று அறிவுபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் கேள்வி கேட்டது. தண்ணீர் கொடுப்பதை கவனிக்க உச்சநீதிமன்றம் நியமித்த காவிரி மேற்பார்வைக் குழுவின் பேச்சையும் கர்நாடகம் மதிக்கவில்லை.
தமிழகம் வழக்குப் போட்டிருப்பதை கண்டுகொள்ளாத நீதிபதிகள், மேற்பார்வைக் குழு அதைப் பார்த்து கொள்ளும் என்று சொன்னதை என்ன வென்று சொல்வது?
வழக்கு நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 2015-இல் மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் அணைகளைக் கட்டுவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்க ரூ.25 கோடியை ஒதுக்குவதாக நிதிநிலை அறிக்கையில் வெளிப்படையாகவே அறிவித்தது. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குப் போனது.
2015 மார்ச் 26 அன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மதிப்பதில்லை. காவிரியில் உரிய தண்ணீரைத் தமிழகத்திற்குத் தருவதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகுள்ள உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறது. அந்த உபரி நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் அணைகளைக் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறது.
இது, தமிழக விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் காவிரி நீரையே நம்பி இருக்கிறோம். புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழ்நாடு தொடர்ந்துள்ள வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் கர்நாடக அரசு இந்த அத்துமீறலைச் செய்கிறது.
தமிழகத்தில் வறட்சி ஏற்படாமலிருக்க, புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று தமிழக அரசு கோரியிருந்தது. அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மார்ச் 27-இல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த கர்நாடக அரசு, எங்கள் எல்லைக்குட்பட்ட மேக்கேதாட்டு, சிவசமுத்திரம் பகுதிகளில் நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழக விவசாயப் பாசனம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது' என்று முன்பு சொல்லியிருந்தது.
இதற்கு எதிராக, தண்ணீரைத் தேக்கி வைத்து தமிழ்நாட்டுக்குக் கொடுப்பதற்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டவிருப்பதாக அண்மையில் அதே நீதிமன்றத்தில் கர்நாடகம் கூறியிருக்கிறது. வழக்கம் போல உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் தந்திரம் இது. மேக்கேதாட்டு அணை வந்துவிட்டால், காவிரி தண்ணீரை மொத்தமாக தமிழகம் மறந்துவிட வேண்டியதுதான்.
ஏனெனில் அந்த அணை மிகப்பெரியது. 93 டி.எம்.சி. கொள்ளளவுள்ள மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் இரு மின் திட்டங்களின் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டு அணையில் 400 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
49 டி.எம்.சி கொள்ளவுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மட்டும் இருக்கும்போதே தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. அதைவிட அதிகமான அளவு தண்ணீரைத் தேக்கிவைக்கும் புதிய அணை கட்டப்பட்டால் என்ன ஆகும்?
காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையைக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் படிப்படியாக இழந்து, கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழியும் நீரை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மூன்று பருவம் சாகுபடி செய்து, அதனை இப்போது ஒரேயொரு பருவமாக சுருக்கிக் கொண்டிருக்கும் தமிழக காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் மொத்தமாக அழிந்து போகும்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும் அரிசியைத்தான் தமிழகம் நம்பியிருக்கிறது. சராசரியாக மாதத்திற்கு ஒரு லட்சம் டன் அரிசியை உணவுக்கழகத்திடம் இருந்து தமிழ்நாடு வாங்குகிறது. காவிரிப் பாசனப்பகுதியில் சுத்தமாக அரிசி விளையவில்லை என்றால் தமிழ்நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி.) குறையும்.
மாநிலத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்படும். அதனால் அரிசி விலை கடுமையாக உயரும். கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கும் சூழல் உருவாகும். வெறும் தண்ணீர் பிரச்சினை என்பதைத்தாண்டி சமூக, பொருளாதார பிரச்னையாக இது மாறும்.
தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது!

கட்டுரையாளர்: பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com