சென்னைச் சிந்தனைகள்

சென்னை அல்லது மதராஸ் பட்டணம் 1639 ஆகஸ்ட் 22-ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனியின் 'டே'க்கு, நாயக்கர்கள் சென்னையின் ஒரு பகுதியை வழங்கிய நாளில் உதயமானதாகக் கருதப்படுகிறது.

சென்னை அல்லது மதராஸ் பட்டணம் 1639 ஆகஸ்ட் 22-ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனியின் 'டே'க்கு, நாயக்கர்கள் சென்னையின் ஒரு பகுதியை வழங்கிய நாளில் உதயமானதாகக் கருதப்படுகிறது. மெட்ராஸ் என்ற பெயர் 1653-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அப்பகுதியின் கிராமத் தலைவராக இருந்த மதராசன் என்ற ரோமன் கதோலிக்கரின் பெயரிலிருந்து வந்தாகக் கூறப்படுகிறது.
ஆனால் நிலத்தை வழங்கிய விஜயநகர அரசின் பிரதிநிதி, தன் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரால் சென்னப் பட்டணம் எனப் பெயரிட விரும்பினார். வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா, கிராமமும் கோட்டையும் மதராஸ் பட்டணம் என்றும், அது விரைவில் இந்தியக் குடியிருப்பாக (Settlement) மாறியபோது சென்னப் பட்டினமாகவும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நாளடைவில் மெட்ராஸ் / மதராஸ் ஆங்கில வடிவமாகவும், சென்னை தமிழ் வடிவமாகவும் வழங்கப்பட்டன. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், சென்னை என்ற பெயரே ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்பட வேண்டும் என்ற மரபை உருவாக்கினார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்துதான் சென்னை விரிவிடைந்தது. ராபர்ட் கிளைவ்தான் சென்னைக்குள் முதலில் நுழைந்தார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் செயின்ட் மேரி சர்ச்சை ஒட்டியிருந்த சர்ச் தெருவில் ஒரு வீட்டில் இருந்தார்.
பிரெஞ்சுக்காரர்கள் 1745-இல் தோற்கடிக்கப்பட்ட பின் கோட்டை விரிவுபடுத்தப்பட்டது. தலைமைச் செயலகக் கட்டடம் உருவாக்கப்பட்டது. மாசச் சூஸட்ஸிருந்து வந்த 'யேல்' கவர்னரான பின் சென்னை வளர்ச்சிக்கு உதவினார். அவர்தான் பின்பு அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தை நிறுவினர்.
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பூவிருந்தவல்லி போன்ற பல சிற்றூர்களை இணைத்து உருவாக்கிய நகரமே சென்னை. சாந்தோம் பகுதி போர்த்துக்கீசியர்களிடமிருந்து பிரெஞ்சுக்காரர்கள் பெற்றனர். பின் பிரிட்டிஷாருக்கு வந்தது.
சாந்தோம் திருச்சபை, தாமஸ் மவுண்ட் ஆகியன ஏசுவின் சீடரான தாமஸுடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. கிறிஸ்துவம், ஏறக்குறைய முதல் நூற்றாண்டிலேயே கேரளம், தமிழகத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேசமயத்தில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயில் போன்ற இடங்களில், பழமை வாய்ந்த நாயன்மார், ஆழ்வார்களால் பாடப்பட்ட சைவ, வைணவ ஆலயங்கள் இருந்தன. எனவே, சென்னை பழமையின் தளத்தில் எழுந்த புதுமை என்பதில் ஐயமில்லை.
மேலும் இங்கு சமயங்கள் இணைந்திருந்ததையும் காண முடியும். வடசென்னையையும் தாமஸ் மவுண்ட் அல்லது பரங்கிமலையையும் இணைத்த மவுண்ட் ரோடு தான் பின் அண்ணா சாலையாக மாறியது. மயிலாப்பூரில் திருவள்ளுவரும், தாமஸின் சீடர்களும் கலந்துரையாடியிருக்க வேண்டும் என ஜியு. போப் கூறுகிறார்.
மகாகவி பாரதி சுதேசமித்திரன் அலுவலகத்தில் பணியாற்றி, மக்கள் மொழியில் கட்டுரைகள் எழுதி மக்கள் கவிஞனாக மாறியதும் சென்னையில்தான். பிரிட்டிஷ் அரசின் கோபத்துக்கு ஆளாகி, புதுச்சேரிக்கு சென்று வாழ்ந்த பின் மறுபடியும் 1920, 21-இல் சென்னைக்குதான் வந்து வாழ்ந்தார்.
அவர் சென்னையைப் பற்றி கவிதை எழுதவில்லை. ஆனால், தம்புச் செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் பற்றி பாடல் எழுதினார். இந்தக் கோயில் முதலில் கோட்டைக்கு அருகே இருந்ததாகவும் பிறகுதான் பிரிட்டிஷாரால் பாரிஸ் பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறுவர். இது சென்னையின் காவல் தெய்வம் என்றும், வீர சிவாஜி இதை வணங்கி வெற்றிகள் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
வள்ளலார் 'தருமமிகு சென்னையில் வளர் கந்தகோட்டம்' பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ராயப்பேட்டை முனிவர் எனக் குறிப்பிடப்படும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தன் வாழ்க்கைக் குறிப்புகளில் சென்னை பற்றிக் கூறியுள்ளார். இந்த மரபிலே வந்த மு. வரதராசனார் தன் புதினங்களில் சென்னை வாழ்வைச் சிறப்பாகச் சித்திரித்துள்ளார்.
சென்னை மாநகரின் அடித்தட்டு மக்கள் வாழ்வை ஜெயகாந்தனின் சிறுகதைகளிளும் புதினங்களிலும் காணலாம். திரைப்படங்களில் சென்னை பெரும்பாலும் எதிர்மறையாகவே காட்டப்பட்டுள்ளது.
ரா.பி. சேதுப்பிள்ளை, தனது 'ஊரும் பேரும்' என்ற நூலில், 'சென்னையில் ஆதியில் அமைந்தது கோவில், அதன் பின்னே எழுந்தது கோட்டை; அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. அனைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகிறது' என்று கூறியுள்ளார்.
சிற்றூராகத் தொடங்கிய சென்னை, ஆந்திரம், கர்னாடகம், கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரெஸிடென்சியின் தலைநகராக இருந்து, சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது, தமிழ்நாட்டின் தலைநகராயிற்று.
அப்போது சென்னையில் தெலுங்கு பேசுபவர்கள் மிகுதியாக இருந்ததனால் அதை ஆந்திரம், தமிழகம் என இரண்டாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவெடுத்தபோது, தெலுங்கு பேசுவோர் சென்னை தங்களுக்கு வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த இராஜாஜி அதை உறுதியாக எதிர்த்து சென்னையைத் தமிழகத்துக்குத் தக்க வைத்த ôர்.
சென்னையில் இப்போதும் தெலுங்கு பேசுபவர்கள் உட்பட பல மொழியினரும், பல மதத்தினரும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். கல்வி, மருத்துவம், கலைகளில் சிறந்தோங்கும் சென்னையை இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகர் எனக் கூறினால் மிகையாகாது.
ஒவ்வொரு நகருக்கும் ஓர் அடையாளம் உண்டு. பழமை, புதுமைச் சங்கமத்தையும் பண்பாடுகளின் சங்கமத்தையும் சென்னையின் அடையாளமாகக் கொள்ளலாம்.

இன்று (ஆக. 22) சென்னை நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com