இந்தியக் குடிமகன் எங்கே தலை சாய்ப்பது?

இந்தியாவின் தலைவாசல், அருணாசலப் பிரதேசம். அந்தத் தலைவாசலிலேயே - முதல்வரின் மாளிகையிலேயே - முதல்வராகிய கலிகோ புல் லஞ்ச லாவண்யங்களின் தாக்குதல் காரணமாகத் தூக்குப்
இந்தியக் குடிமகன் எங்கே தலை சாய்ப்பது?

இந்தியாவின் தலைவாசல், அருணாசலப் பிரதேசம். அந்தத் தலைவாசலிலேயே - முதல்வரின் மாளிகையிலேயே - முதல்வராகிய கலிகோ புல் லஞ்ச லாவண்யங்களின் தாக்குதல் காரணமாகத் தூக்குப் போட்டுத் தொங்கியிருக்கின்றார்.
ஊழலை அகற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட, அந்த 47 வயது முதல்வரை - ஊழலே கொன்றுவிட்டது. சாவதற்கு முன்பு 60 பக்கங்களில் 'என் எண்ணங்கள்' எனுந் தலைப்பில் அவர் எழுதி வைத்திருக்கின்ற ஊழல் பற்றிய முகவரிகள் - முகங்கள், அருணாசலப் பிரதேசத்தின் அட்சரேகை - தீர்க்கரேகைகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
நியாயவான்கள் தலை சாய்ப்பதற்கு இடமில்லை என்பது விவிலியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஏசுநாதர் மலையிலிருந்து இறங்கி வருகின்றபோது, ஓர் உபதேசியாரைப் பார்த்து, 'நரிகளுக்குக்கூடப் பதுங்குவதற்குக் குழிகள் இருக்கின்றன. வானத்துப் பறவைகளுக்குக்கூட ஒடுங்குவதற்குக் கூடுகள் இருக்கின்றன. ஆனால், மனித குமாரனுக்குத்தான் தலை சாய்க்க இடமில்லை என்பார்.
ஒரு மாநிலத்தில் தரித்திர நாராயணனுக்குத் தலை சாய்க்க இடமில்லை என்றால், சகித்துக் கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே கயிற்றில் தொங்குவதற்குத்தான் இடமிருக்கிறது என்றால், தலைவாசல் எதற்காக?
பாரத நாட்டில் ஒரு தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளி வருவதற்கே வசூல் மகாராஜாக்களுக்கும் மகாராணிகளுக்கும் தரக்கட்டுப்பாட்டுடன் பரிமாற வேண்டியிருக்கிறது. கருவறையிலிருந்து வெளிவருகின்ற குழந்தைகள் தம் கைகளை மூடிக்கொண்டு வருவதே, வாசலிலே எதிர்பார்ப்பாளர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணத்தால்தானோ என்னவோ!
கருவறையிலிருந்து அப்பிள்ளையைப் பள்ளிக்குக் கொண்டு போகும்போது, அங்குக் கல்வியாளர்கள் எனும் பெயரில் நிற்கும் சித்திரகுப்தர்கள் கையிலிருக்கும் அட்டவணை, ஆதிசேடன் தலைவரையில் நீளும். படித்து முடித்த பாரதபுத்திரன் அரசு அலுவலகங்களில் பணியிடங்களைத் தேடும்போது, அலிபாபாவின் நாற்பது திருடர்கள் 'அண்டா காகசம்; அபூகாகசம்! திறந்திட சீசே' என ஆரோகணித்து நிற்பர்.
காலம் முடிந்து இடுகாட்டிற்கோ, சுடுகாட்டிற்கோ எடுத்துச் செல்லும்போதும் ஏலம்விட்டுப் பேரம் பேசித்தான், காரியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஊற்றுக்கண்ணாய் அரும்பி, ஆற்று வெள்ளமாய்ப் பெருகிய லஞ்சம் - ஊழல் இன்று ஆழிப்பேரலையாய் அள்ளிக்கொண்டு போகிறது.
அருணாசலப் பிரதேசத்தின் எட்டாவது முதல்வராகத் திகழ்ந்த கலிகோ புல் காமன் மிஸ்மி (இடூ) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். 13 மாதக் குழந்தையாக இருந்தபோது தாயையும், ஆறு வயது சிறுவனாக இருந்தபோது தந்தையையும் இழந்தவர். சிறு வயதில் காடுகளில் சுள்ளி பொறுக்கி, வயிற்றுப் பசியைத் தீர்த்தவர்.
படிப்படியாகப் பயின்று, இந்திரா காந்தி கல்லூரியின் பட்டதாரியாக வெளிவரும்போதே, இந்தியத் தேசிய காங்கிரசில் அழுத்தமாகக் கால் ஊன்றினார். அரசாங்கப் பணிகளை எடுத்துச் செய்யும் மிகப் பெரிய ஒப்பந்தக்காரர் ஆனார்.
தேசியக் காங்கிரசு அவரைச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நிற்கச் சொன்னபொழுது, தம் வசமிருந்த ஒப்பந்த உரிமங்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் தேர்தலுக்கு நின்றார்.
ஒரே தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். நிதியமைச்சராக, வணிக வரித்துறை அமைச்சராக, நல்வாழ்வுத்துறை அமைச்சராக 23 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். மற்ற மாநிலங்களில் ஊழல் இலைமறை காய் மறையாக இருந்தபோது, அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அது பாபிலோனியாவின் தொங்கும் தோட்டமாகத் திகழ்ந்ததை எண்ணி, மனம் சுளித்தார்.
அதனால், இரண்டு முறை அம் மாநிலத்தின் முதல்வராவதற்கான வாய்ப்பு வந்தபோதும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். கடைசியாக மூன்றாவது முறை முதல்வர் பதவி அவர் வீட்டுக் கதவைத் தட்டியபொழுது, தானே பூனைக்கு மணி கட்டுவதாகப் புறப்பட்டார். ஆனால், பூனை அவரைத் தூக்கிலே தொங்கச் செய்துவிட்டது.
2015-இல் முதல்வர் நபம் துகியை காங்கிரசு கட்சியிலிருந்த ஒரு குழுவினர், காலை வாரியதால், கலிகோ புல் இடைக்கால முதல்வர் ஆனார். அவரைப் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் ஆதரித்தனர். அந்த ஆட்சிக்கு 'மக்கள் கட்சியினுடைய ஆட்சி' எனவும் பெயர் சூட்டப்பட்டது. கலிகோ புல்லை முதல்வர் பதவியில் உட்கார வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர், பகாசூரப் பசிக்காரர்கள். அவர்கள் பசியெடுத்தபொழுதெல்லாம், உட்கார வைத்த நாற்காலியில் குண்டூசிகளைச் சொருகிக் கொண்டேயிருந்தார்கள்.
கலிகோ புல் தம்முடைய சொந்தக் கட்டடங்கள் - நிலபுலன்களை விற்று, பசித்த வாய்க்குத் தீனி போட்டுக் கொண்டேயிருந்தார். என்றாலும், கோரப்பசி அடங்காத அகோரிகள், உச்சநீதிமன்றத்தை அணுகி, அந்த ஆட்சி சட்டவிரோதமானது எனத் தீர்ப்பைப் பெறவும் காய்களை நகர்த்திவிட்டனர். அதற்கிடையில் ஏற்கெனவே முதல்வராக இருந்த நபம் துகி மேலிடம் ஆறு கோடி கேட்பதாகவும், அதனைத் தந்தால் ஆட்சி காப்பாற்றப்படும் என்றும் பேரம் பேசினார். கலிகோ புல் அதற்கு இணங்க மறுத்தார்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றம் கலிகோ புல்லின் ஆட்சி, சட்ட விரோதமானது எனச் சொல்லி, ஆட்சியைக் கலைத்துவிட்டது. கலிகோ புல்லும் காங்கிரசை விட்டு விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேரத் தயாரானார்.
கலிகோ புல்லுக்குப் பதில் நபம் துகி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடன் நபம் துகியும் அப்பதவியிலிருந்து விலகி, பெமா காண்ட் முதல்வராக வருவதற்கு வழிவிட்டார்.
அந்தப் பேரத்திற்கு ரூபாய் 60 கோடி தருவதாகப் பேசப்பட்டு, முன்பணமாக ரூ.8 கோடி தரப்பட்டதாக கலிகோ புல் தம்முடைய தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். கலிகோ புல்லுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, மாநில மக்கள் பெரும் புரட்சியில் இறங்கி, அமைச்சர்களுடைய வீடுகளை எல்லாம் இடிபாடுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
கலிகோ புல் முதல்வராக இருந்த காலத்தில், அவருடைய முதல்வர் மாளிகையின் ஒரு பகுதியில் ஏழை மக்கள் எந்த நேரத்திலும் வந்து தங்குவதற்கும் மருத்துவ உதவி பெறுவதற்கும் வழிவகுத்திருந்தார்.
தற்கொலை செய்து கொண்ட கலிகோ புல்லுக்கு டேங்விம்சாய், விகிலு, டேசங்லு என மூன்று மனைவியர். அவர் பிறந்த பழங்குடி வம்சத்தில் ஓர் ஆண் எத்தனைப் பெண்களோடு வேண்டுமானாலும் வாழலாம். அதேபோல ஒரு பெண்ணும் பல ஆடவர்களோடு வாழலாம்.
அவர்களிடத்தில் விவாகரத்து கிடையாது. ஒரு கணவன் இறந்துவிட்டால், மறு ஆடவனை நாடலாம். கலிகோ புல்லினுடைய இறுதி ஊர்வலத்திற்குக்கூட அரசு மரியாதை கொடுக்கத் தவறிவிட்டனர் மனிதநேயமற்றவர்கள். சாதாரண சவப்பெட்டியில் கலிகோ புல்லினுடைய பூதவுடலை அடைத்து வழியனுப்ப முயன்றனர்.
அதனைக்கண்டு ஆத்திரமடைந்த மக்கள், அந்த இறுதி ஊர்வலத்தை இடைமறித்து, மக்கள் முதல்வரை அரசு மரியாதையோடு அனுப்பு எனப் போரிட்டு, அவரை அனுப்பி வைத்தனர்.
கலிகோ புல்லின் முடிவுக்குக் காரணமான அரசியல்வாதிகளை நடுத்தெருவில் நிறுத்தி, பொதுமக்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் குழுமத்தின் தலைவர் ஆர்.என். லாலம், 'அருணாசலப் பிரதேசத்தில் ஊழலும் லஞ்சமும் நீரோட்டமாகிவிட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலைபோவது சர்வ சாதாரணமாகிவிட்டது' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி தந்திருக்கிறார்.
கலிகோ புல்லின் மூன்று மனைவியரும் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை மூடி மறைக்க ஆளுங்கட்சியினர் கலிகோ புல்லின் முதல் மனைவி டேங்விம்சாயை, அவருடைய கணவர் காலமானதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில், அதே தொகுதியில் நிற்குமாறு வேண்டினர். ஆனால், டேங்விம் சாய், அவர்களுடைய வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.
மாநிலத்து மக்களும், மூன்று மனைவியரும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை வேண்டிக் கொடுத்த கோரிக்கையை, மாநில அரசு மறுதலித்துவிட்டது. மூத்த மனைவி டேங்விம்சாய் மத்திய உள்துறை அமைச்சரையும், உள்துறைச் செயலரையும் சந்தித்து பல தகவல்களைத் தந்திருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று, கலிகோ புல்லினுடைய ஆட்சி நீட்டிப்புக்காகத் துணை முதலமைச்சர் சோனா மெயின் ரூ.10 கோடி கேட்டதையும், அதற்குக் கலிகோ புல் ரூ.4 கோடி தந்திருப்பதையும் ஆதாரங்களோடு தந்திருக்கிறார்.
மூன்றாவது மனைவி டேசங்லு, சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதால், சட்ட வல்லுநர்களைச் சந்தித்து, உண்மைகள் வெளிச்சத்திற்கு வரப்போராடிக் கொண்டிருக்கிறார்.
கலிகோ புல் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய 'என் எண்ணங்கள்' எனும் 60 பக்க கட்டுரை, அருணாசலப் பிரதேசத்தில் ஊழல் உருவெடுத்து நிற்பதை ஆழ அகலமாக எடுத்துரைத்திருக்கின்றது. அவர் வரைந்திருக்கும் மடல், மாதவி கோவலனுக்கு எழுதிய மடல்போல் நெஞ்சைத் தொடுவதாய் அமைந்திருக்கிறது.
சில சான்றுகள்: 'நான் இவ்வுலகத்திற்குத் தனி ஆளாகத்தான் வந்தேன். இப்பொழுதும் தனி ஆளாகத்தான் போகின்றேன். நான் வரும்போது எனக்குப் பெயர் கிடையாது - சாதி கிடையாது - மதம் கிடையாது - இனம் கிடையாது - மொழி கிடையாது.
இப்பொழுது போகின்றபோதும் மேற்சொன்ன எதுவும் இல்லாமல்தான் போகின்றேன். ஆனால், மற்ற மக்கள் ஒன்று மற்றவர்களைக் கொல்லுவதற்காகவோ, தங்களைக் கொல்லுவதற்காகவோ வருகிறார்கள்.
வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒரு தச்சுத் தொழிலாளியாகத்தான் வந்தேன்; தினக்கூலி ரூ.1.50 காசுகள். இப்பொழுது போகும்போது, என் தொழிலுக்குப் பயன்பட்ட கருவிகளை மட்டும் என்னோடு வைத்துள்ளேன்.
அநித்தியத்தைப் பெறுவதற்காக நித்தியத்தைக் கொல்கிறார்கள். நான் வாழ்நாள் முழுவதும் சத்தியத்தையே தேடிக் கொண்டிருக்கிறேன். சத்தியத்தின் வெளிச்சமாகவே என் வாழ்க்கையைக் காணுகிறேன்.
கலிகோ புல்லின் உயிர் தொங்கியது கயிற்றில் அன்று, நேர்மையில் - நியாயத்தில் - சத்தியத்தில்!

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com