அறமும் அரசியலும்!

உலகத்தில் பெரும்பான்மையான நாடுகள் அரசியல் கட்சிகளால்தான் ஆளப்படுகின்றன.
அறமும் அரசியலும்!

உலகத்தில் பெரும்பான்மையான நாடுகள் அரசியல் கட்சிகளால்தான் ஆளப்படுகின்றன. ஆனால் எல்லா நாடுகளிலும் ஒரேவிதமான அரசியல் கட்சி, ஆட்சி முறை இல்லை. ரஷியா, சீனா, கியூபா உள்பட கம்யூனிஸ்டு நாடுகள் ஒரு அரசியல் கட்சி ஆளும் நாடுகள். அங்கு இன்னொரு அரசியல் கட்சிக்கு இடமில்லை.
சில நாடுகள் இரண்டு அரசியல் கட்சி நாடுகள். இரண்டு அரசியல் கட்சிகளும் குடியரசுத் தலைவர் போன்று அதிகாரம் படைத்த பெரிய பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தும். வாக்காளப் பொருமக்கள் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் இரண்டு கட்சி ஆட்சி முறை.
சுமார் இருநூறு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் இது நடைமுறையில் இருக்கிறது. இது ஜனநாயகத்தின் பரப்பைக் குறைத்து விடுகிறது என்று சிலரால் குறை சொல்லப்பட்டாலும் இம்முறை தொடர்ந்து வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்பட பல ஜனநாயக நாடுகளில் பல அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்று இருக்கின்றன.
பல அரசியல் கட்சி நாடுகள்தான் உண்மையான ஜனநாயக நாடுகள். வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அரசியல் சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
அரசியல் கட்சி வேட்பாளர், வாக்காளர், வாக்குச்சீட்டு என்ற தேர்தல் முறையெல்லாம் அமெரிக்காவில் இருந்து வந்தவைதான். இங்கிலாந்து மேலாண்மையை எதிர்த்து அமெரிக்காவில் குடியேறிய
வர்கள் போரிட்டு தங்கள் நாடு ஒரு சுதந்திர நாடென பிரகடனப்படுத்திக் கொண்டபோது அங்கு அரசியல் கட்சிகள் கிடையாது.
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் தேர்தல் நடத்தி அதில் வெற்றிபெற்று அதிபர் ஆனவர் இல்லை. நியமிக்கப்பட்டவர்தான். அவர் அரசியல் கட்சி வேண்டாம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்.
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை எழுதியவர்களுக்கிடையே செயல்பாட்டில் கடுமையான வேறுபாடுகள் ஏற்பட்டன.
அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ், நிதியமைச்சர் அலெக்சாண்டர் ஹாமில்டன் இருவரும் எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடமே இருக்க வேண்டும். வலிமையான மத்திய அரசுதான் மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்றார்கள்.
அரசியல் சாசனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன், ஜான் மாடிசன் இருவரும் குறைவான அதிகாரம் கொண்ட மத்திய அரசு. அதிகமான அதிகாரம் படைத்த மக்கள். அதுவே உண்மையான சுதந்திரம் என்றார்கள். கொள்கை வேறுபாட்டில் இரண்டு அரசியல் கட்சிகள் தோன்றின.
அரசியல் கட்சி என்பது எப்பொழுதும் ஒரே பேரிலோ, ஒரே சின்னத்துடனோ இருப்பதில்லை. புதிதாகக் கட்சிக்குத் தலைமை ஏற்கிறவர்கள் காலமாறுதலுக்கு ஏற்ப, புதிய அர்த்தம் கொடுக்கும் கவர்ச்சிகரமான பெயரைக் கட்சிக்கு வைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
1885-ஆம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட வேண்டும் என்கிறஒரே நோக்கத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அது வளர்ந்து, நாடு சுதந்திரம் பெற்றுக் குடியரசானதும் அரசியல் கட்சியாகித் தேர்தல் களத்தில் இறங்கியது.
அது இந்தியர்களின் ஆசை அபிலாஷைகளைப் பிரதிபலித்த முதல் அரசியல் கட்சி. இந்தியாவில் இன்று உள்ள பல அரசியல் கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்துதான் தோன்றின.
அரசியல் கட்சிகள் எல்லாம் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார மேம்பாடு, கல்வி முன்னேற்றம், சுதந்திரம் என்பவற்றைப் பெறவே அமைக்கப்படுகின்றன. நல்ல நோக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் கெட்ட நோக்கத்திற்குப் பலியாவதும் உண்டு.
1921-ஆம் ஆண்டில் ஹிட்லர், தேசிய சோஷலிஸ்டு ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரானார். அவர் கட்சியின் மூலம் புதிதாக, ஜெர்மானிய தேசியம் என்ற அடிப்படை வாதத்தை முன்வைத்தார்.
ஜெர்மனிய ஆரிய இனமே உலகத்தை ஆள வேண்டும். யூதர்கள், நாடோடிகளான ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகள் எல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பிரசாரம் செய்து ஜெர்மானிய மக்களை வெறிகொள்ள வைத்தார்.
'ஒரு தேசம், ஒரேவிதமான மக்கள், ஒரு தலைவர்' என்று பெருங்குரலில் கூவிக்கொண்டு இரண்டாம் உலகப்போரைத் தொடங்கிய அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும் பரிதாபமாகத் தோற்றுப் போனார்கள்.
அரசியல் கட்சிகள் மக்களால், மக்களுக்காகவே ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் பொதுமக்களில் பலரும் அநீதிக்காகப் போராட வீதிக்கு வருகிறவர்கள் இல்லை. போராட்டம், பேரணி, சிறை என்பதற்குப் பயந்து போகிறவர்கள். ஆனால் நற்பயனை அனுபவிக்க முன்னே இருப்பவர்கள். எனவே கட்சி என்பது குறைவானவர்களைக் கொண்டு இயங்குகிறது.
அரசியல் கட்சிகளின் பலம் என்பது தொண்டர்களின் பலம்தான். அது உறுப்பினர் எண்ணிக்கை பலமே. எனவே ஒவ்வொரு கட்சியும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தித் தொண்டர்களையும், அபிமானிகளையும் அதிகமாக்கிக் கொள்ள விழைகிறது.
எந்தக் கட்சியில் உறுப்பினர் அட்டை வாங்கியிருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அதுதான் பெரிய கட்சி. அது தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மாநகராட்சி உறுப்பினர்களைப் பெற்றுவிடுகிறது. கட்சி நடத்திடப் பணம் வேண்டும். உறுப்பினர்கள் மட்டும் போதாது.
அரசியல் கட்சிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? கட்சி உறுப்பினர்கள் தரும் சந்தா தொகை, பத்திரிகைகள், புத்தகங்கள் விற்பதால் பெறும் வருமானம், கட்சி அபிமானிகள் தரும் நன்கொடைகள் போன்றவற்றால்தான் என்று அரசியல் கட்சிகள் சொல்கின்றன.
ஆனால் அது நம்பக்கூடியதாக இல்லை. பெரும் பணக்காரர்களிடம் இருந்தும், தொழிலதிபர்களிடம் இருந்தும் அரசியல் கட்சிகள் பணம் வாங்குகின்றன. வெற்றி பெற வாய்ப்புள்ள அரசியல் கட்சிக்குத் தொழிலதிபர்கள் தாராளமாக நன்கொடை கொடுக்கிறார்கள்.
ஏனெனில், அரசின் கொள்கைகளைத் தங்களின் தொழில், வர்த்தகத்திற்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளவும், தங்களின் தொழில் விரோதிகளை ஒழித்துக் கட்டவும், தங்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருவர் அரசியல் கட்சியில் சேர்வது என்பது சமூக அங்கீகாரமாக இருக்கிறது. பல பட்டங்கள் பெறவும், கெளரவங்கள் அடையவும் கட்சி பயன்படுகிறது.
எனவே பலரும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெறுகிறார்கள். அவர்களின் அடுத்த கனவு அமைச்சர் பதவியாக இருக்கிறது. அரசியல் கட்சியில் போடும் பணம் நல்ல முதலீடு என்றே கருதுகிறார்கள். அதில் உண்மையில்லாமல் இல்லை.
அரசியல் கட்சிகளில் பரிதாபப்பட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அக்கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள்தான். அவர்கள், பணி செய்யவே உள்ளவர்கள். மாநாட்டிற்குக் கொடி கட்டுவது, சுவரொட்டி ஒட்டுவது, கூட்டம் சேர்ப்பது, தலைவர் வாழ்க என்று கோஷம் போடுவது இவற்றோடு அவர்கள் வேலை முடிந்துவிடுகிறது.
அவர்களுக்கு மேலாக இருக்கும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடிமைகள். அவர்கள் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். கட்சிக் கட்டுப்பாடு என்பது அவர்கள் மூளையையும், செயற்பாட்டையும் முடமாக்கி விடுகிறது.
தலைவர்கள் பெரிய லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிக்கொண்ட போதிலும் உண்மை பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். தனிப்பட்ட தொண்டர்களின் நேர்மை, நியாயம் போன்றவை நிந்தனைக்கு ஆள்பட்டு விடுகின்றன.
அப்படியானால் அரசியல் கட்சிகளே தீமையானவையா? தீமையாகப் பிறந்து, தீமைச் செய்வதற்காகவே இருக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜனநாயகத்தோடு பிறந்த அரசியல் கட்சிகள், அரசியல், சமூக, கலாசாரத் துறைகளிலும், தொழில் வளர்ச்சியிலும் பெரும் சேவை புரிந்து இருக்கின்றன.
அன்று எளிய மக்களின் உரிமைகள் பற்றி அரசியல் கட்சிகளே எடுத்துச் சொல்லியிருக்கின்றன. வாழ்க்கை என்பது அறம் சார்ந்தது. அறத்தோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்றிருந்தது. ஆனால் இன்று அரசியல் கட்சிகள், அறமற்றது என்றாக்கிவிட்டன.
எப்பொழுது வேண்டுமானாலும் கட்சி மாறலாம், பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு கட்சிக்கு வாக்களிக்கலாம். பதவி பெற்றுக்கொள்ளலாம். அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அரசியல் என்பதில் நேர்மையெல்லாம் பார்க்க முடியாது; பார்க்கக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் என்ற சக்கரம் இருநூறு ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது. இரண்டாவது சுற்றுக்கு அதனைத் தள்ளிவிட வேண்டுமா என்பதுதான், இப்போது மக்களின் மனத்திலுள்ள முக்கியக் கேள்வியாக இருக்கிறது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com